IPL 2022 : CSk vs PBKS - அத்தனையும் போச்சே கோபால்! கடைசி ஓவர்களில் CSK-வை கதறவிட்ட பஞ்சாப்

பதினாறாவது ஓவரை வீச சந்தீப் ஷர்மா வந்தார். முதல் பந்தை எதிர்கொண்டார் ஜடேஜா - ரன்கள் ஏதும் இல்லை. இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தை எதிர்கொண்டார் அம்பதி ராயுடு - அந்த பந்து சிக்சருக்கு பறந்தது.
IPL 2022 : CSk vs PBKS
IPL 2022 : CSk vs PBKSNewsSense
Published on

அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்குத் தேவை 42 பந்துகளில் 98 ரன்கள். ஓவருக்கு சராசரியாக 14 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைமை.

14வது ஓவரை பஞ்சாப் பௌலர் சந்தீப் ஷர்மா வீசினார், சிஎஸ்கே அணியின் பாகுபலி அம்பதி ராயுடு அந்த ஓவரில் இரண்டு பௌண்டரிகள் விளாசினார். சென்னைக்கு 13 ரன்கள் கிடைத்தது.

15வது ஓவரை வீசினார் ராகுல் சாஹர். ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரி வைத்தார் ராயுடு, அந்த ஓவரில் 15 ரன்கள் எடுத்தது சென்னை அணி.

அதன்பின்னர், சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் 70 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா மற்றும் ராயுடு ஜோடி களத்தில் இருந்தது. கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்தன. சென்னைக்கு பேட்டிங் பிடிக்க தோனி, டுவைன் பிராவோ, பிரிட்டோரியஸ் பெவிலியனில் காத்திருந்தனர்.

பதினாறாவது ஓவரை வீச சந்தீப் ஷர்மா வந்தார். முதல் பந்தை எதிர்கொண்டார் ஜடேஜா - ரன்கள் ஏதும் இல்லை. இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தை எதிர்கொண்டார் அம்பதி ராயுடு - அந்த பந்து சிக்சருக்கு பறந்தது.

நான்காவது பந்தும் சிக்ஸர், ஐந்தாவது பந்திலும் சிக்ஸர் வைத்து ஹாட்ரிக் அடித்தார் ராயுடு. கடைசி பந்தையும் வீணாக்கவில்லை. பௌண்டரி விளாசினார் ராயுடு.

ஒரே ஓவரில் 23 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். ராயுடு புண்ணியத்தால் சென்னைக்கு தேவைப்படும் ரன்ரேட் குறைந்தது.

24 பந்துகளில் 47 ரன்கள் அடிக்க வேண்டும். அதாவது தேவைப்படும் ரன்ரேட் 12-க்கும் கீழ் தான்.

அந்த சமயத்தில் 17வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் வெறும் ஆறு ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். இதனால் மீண்டும் சென்னை ஒரு ஓவரில் 14 ரன்கள் அடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

18வது ஓவரை ரபாடா வீசினார். ஜடேஜா ஒரு பௌண்டரி அடித்தார் ஆனால் ராயுடு விக்கெட்டை இழந்தது சென்னை அணி. அந்த ஓவரில் ஆறு ரன்கள் மட்டுமே சென்னையால் குவிக்க முடிந்தது.

அதுவரை சென்னை - பஞ்சாப் அணிகள் இடையேயான வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட சமநிலையில் இருந்த நிலையில், ரபாடா வீசிய சிறப்பான ஓவரால் வெற்றி வாய்ப்பு பஞ்சாப்புக்கு அதிகரித்தது.

மீண்டும் 19-வது ஓவரை வீசினார் அர்ஷ்தீப். முதல் நான்கு பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை. ஐந்தாவது பந்தை பௌண்டரிக்கு விரட்டினார் தோனி. அப்போது மீண்டும் ஒரு சிறு நம்பிக்கை சென்னை ரசிகர்களுக்கு பிறந்தது. ஆனால் அதற்கு மேல் அந்த ஓவரில் பெரிய ஷாட் ஏதுமில்லை. அந்த ஓவரில் எட்டு ரன்கள் மட்டும் கொடுத்தார் அர்ஷ்தீப்.

கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது, மும்பை அணியுடனான போட்டியில் 17 ரன்களை சேஸிங் செய்தார் தோனி. அதனால் இந்த போட்டியிலும் சற்று எதிர்பார்ப்பு இருந்தது.

ரிஷி தவான் பந்து வீசினார். முதல் பந்தையே சிக்சருக்கு விரட்டினார். இரண்டாவது பந்து வைடு. அப்போது ஐந்து பந்துகளில் 20 ரன்கள் வெற்றிக்கு அடிக்க வேண்டும்.

மீண்டும் இரண்டாவது பந்தை வீசினார் ரிஷி, ரன்கள் ஏதுமில்லை. மூன்றாவது பந்தை தூக்கி அடித்தார் தோனி. அது சிக்சருக்குச் செல்லுமா என ரசிகர்கள் ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருக்கையில் அந்த பந்து டீப் மிட் விக்கெட் திசையில் இருந்த பேர்ஸ்டோ கையில் தஞ்சமடைந்தது. தோனி 12 ரன்களில் அவுட் ஆனார்.

சென்னைக்கு அந்த பந்தோடு வெற்றிக்கனவு தவிடு பொடியானது.

கடைசி ஓவரில் 15 ரன்கள் சென்னை எடுத்தபோதும் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் சென்னை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட எட்டாக்கனியாய் ஆகிவிட்டது.

இனி மீதமுள்ள ஆறு போட்டிகளிலும் வென்று, மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை வேடிக்கை பார்த்து ஏதேனும் வாய்ப்பு கிட்டுமா என ஏக்கத்துடன் பார்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது சென்னை அணி.

இந்த ஆட்டத்தில் ராயுடு 39 பந்துகளில் ஏழு பௌண்டரி, ஆறு சிக்ஸர்கள் வைத்து 78 ரன்கள் குவித்தார். ஆனால் அவருக்கு பக்கபலமாக யாரும் இல்லாததால் சென்னை தோல்வியை தழுவியது.

முன்னதாக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்கள் எடுத்து. ஷிகர் தவான் 59 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பஞ்சாப் அணி இந்த வெற்றி மூலம் பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கிறது, தற்போது பாயின்டஸ் டேபிளில் ஆறாமிடத்தில் உள்ளது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com