IPL 2022 : எத்தனை நாள் ஆச்சு இப்படிப் பார்த்து! தோனி ரிட்டர்ன்ஸ்; பக்கா மாஸ் காட்டிய CSK

இந்த வெற்றியின் மூலம் பிளே ஆஃபுக்கு முடிவுரை எழுதப்படுவதை தள்ளிவைத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அடுத்ததாக பங்காளி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.
IPL 2022
IPL 2022NewsSense
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நேற்றைய தினம் மீண்டும் களமிறங்கினார் மகேந்திர சிங் தோனி.

பவர்பிளேவில் விக்கெட் இல்லை; ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். ருதுராஜ் வெறியாட்டம் போட்டார்.

தோனி மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார்; மிடில் ஒவ்ரர்களில் சிறப்பான பந்துவீச்சு, இளம் வீரர்கள் துடிப்பான ஆட்டம் ஆடினர்.

இப்படி திடீரென எல்லாமே தலைகீழாக நடக்க அநேகமாக ரவீந்திர ஜடேஜா குழம்பிப் போயிருக்கக்கூடும். கடந்த ஐபிஎல் சீசனில் நேர்த்தியாக விளையாடிய சிஎஸ்கே, இந்த ஐபிஎல் சீசனில் சாப்டு சாய்ந்திரமா விளையாடுவமா பாஸ் என்ற ரேஞ்சில் சொதப்ப, உங்க சங்காத்தமே வேணாம்டா சாமி என கேப்டன் பதவியை உதறினார்.

NewsSense

இந்த டீமுக்கு தோனியை விட்டா வேறு ஆளு இல்ல என மகேந்திர சிங் தோனிக்கு மீண்டும் பட்டாபிஷேகம் செய்து வைத்தது சென்னை நிர்வாகம்.

கடைசியாக கொல்கத்தா அணியை தோற்கடித்து ஐபிஎல் கோப்பையை முத்தமிட்ட தோனி, அதற்கு பிறகு நேற்றைய மேட்சில் மீண்டும் கேப்டனாக களமிறங்கினார்.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி சேஸிங்கை தேர்ந்தெடுத்தது. ஷிவம் துபே மற்றும் டுவைன் பிராவோ கழட்டிவிடப்பட்டனர். டேவிட் கான்வாய் அணியில் இணைந்தார் .

ஓப்பனிங் பேட்ஸ்மேனாக புதிய ஜோடியாக கான்வாய் மற்றும் ருதுராஜ் களமிறங்கினர். விக்கெட்டை இழக்காமல் டீசன்ட்டாக பவர்பிளேவை முடித்தது சென்னை அணி. அதாவது விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள்.

ஆனால் ரன்ரேட் சுமாராகவே இருந்தது. அதாவது ஏழு ஓவர்கள் முடிவில் 47 ரன்கள் எடுத்திருந்தது. 160 ரன்களாவது சென்னை அடிக்கவேண்டும் என்பது எதிர்பார்ப்பு.

அப்போது எட்டாவது ஓவரை வீச வந்தார் உம்ரான் மாலிக். அரங்கம் அதிரும் வேகம், கூடவே துல்லியம் என இந்த ஐபிஎல் சீசனில் மாஸ் காட்டிய உம்ரான் மாலிக்கை, நீ யாரா வேணா இரு - என் பேரு ருதுராஜ் என சொல்லும் விதமாக ஒரு அற்புதமான பௌண்டரி அடித்தார் ருதுராஜ் கெயிக்வாட்.

பரவசம் தந்த அந்த ஷாட்டுக்கு அடுத்த பந்தையே சிக்சருக்கு தூக்கினார் ருது.

ஆனால் அதற்கு பிறகு ருதுராஜ் ஆடிய ஆட்டத்தை பார்த்தபோது தான் ஒன்று புரிந்தது. அது உம்ரான் மாலிக் ஓவரில் ஒரு பௌண்டரி மற்றும் சிக்ஸர் விளாசியது வெறும் ட்ரைலர் தான் என்பது.

ருதுவின் ஆட்டத்தால் குஷியான கான்வாய் மர்க்ரம் வீசிய அடுத்த ஓவரில் அவரும் ஒரு பௌண்டரி மற்றும் சிக்ஸர் வைத்தார். பத்தாவது ஓவரை வீச மீண்டும் வந்தார் உம்ரான் மாலிக்.

இம்முறை இன்னும் வேகமாக, இன்னும் துல்லியமாக வீசினார். 154 கிமீ/ மணிநேரம் வேகத்தில் வீசப்பட்ட பந்தை அனாயாசமாக பௌண்டரி விரட்டினார். அடுத்த பந்தையும் பௌண்டரிக்கு விரட்டி தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.

உம்ரான் உனக்கு; மர்க்கரம் எனக்கு என போட்டி போட்டுக் கொண்டு ருது - கான்வாய் ஜோடி விளையாடியது. ஆம் இம்முறை மர்க்கரம் வீசிய ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் வைத்தார் கான்வாய்.

11 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை கடந்தது சென்னை அணி. ரசிகர்கள் உற்சாகமாயினர். சற்றும் மனம் தளராத உம்ரான் மீண்டும் 12வது ஓவரை வீசினார். இரண்டு பௌண்டரி ஒரு சிக்ஸர் என 17 ரன்கள் எடுத்தது சென்னை.

மார்கோ ஜென்சன் வீசிய 15வது ஓவரில் இரண்டு சிக்ஸர் ஒரு பௌண்டரி வைத்தார் கான்வாய். அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் எடுத்தது சென்னை. அப்போது ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி 153 ரன்கள். அப்போது சென்னை அணியின் ஸ்கோர் குறைந்தது 210 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

16வது ஓவரை நடராஜன் வீசினார். ஒரு பௌண்டரியுடன் 13 ரன்கள் எடுத்தது. இந்த ரணகளத்திலும் புவனேஷ்குமார் மட்டும் சிக்கனமாக வீசினார். அவர் 13 மற்றும் 17வது ஓவர்களில் தலா ஆறு ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

18வது ஓவரை வீச மீண்டும் நடராஜன் வந்தார். கான்வாய் ஒரு சிக்ஸர் வைத்தார். அதே ஓவரில் ருதுராஜ் ஆட்டமிழந்தார். அவர் 99 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். 57 பந்துகளில் ஆறு பௌண்டரி, ஆறு சிக்ஸர்கள் வைத்த அவர் சதமடிக்க ஒரு ரன் எடுக்காமல் அவுட் ஆனார்.

ருதுராஜ் விக்கெட் விழுந்த சோகம் மறைவதற்குள் தோனி என்ட்ரி கொடுத்தார். கிட்டத்ட்ட 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார் தோனி.

உம்ரான் வீசிய 19வது ஓவரில் ஒரு பௌண்டரி மட்டுமே வந்தது. எட்டு ரன்கள் மட்டும் எடுத்தது சென்னை. கடைசி ஓவரை நடராஜன் வீசினார். நட்டு பந்தில் தோனி அவுட்டாக கான்வாய் அடித்த இரு பௌண்டரிகள் உதவியுடன் 11 ரன்கள் எடுத்தது சென்னை.

கடைசி நான்கு ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே கொடுத்தது ஐதராபாத். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. கான்வாய் 55 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சேஸிங்கில் களமிறங்கிய ஐதராபாத் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்து அலறவிட்டது, ஆனால் பவர்பிளேவின் கடைசி ஓவரில் அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி என இரு அதிரடி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை அடுத்தடுத்த பந்துகளில் இழந்தது.

பத்தாவது ஓவரில் மர்க்கரம் அவுட் ஆனார். 15வது ஓவரில் வில்லியம்சன் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். எனினும் ஓரளவு ரன்ரேட் நன்றாகவே இருந்ததால் கடைசி ஐந்து ஓவர்களில் ஐதராபாத் வெற்றிக்கு 72 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி இரு ஓவர்கள் நிக்கோலஸ் பூரன் அதிரடி காட்டினார் . கடைசி ஓவரில் மட்டும் மூன்று சிக்சர்களோடு 24 ரன்கள் எடுத்தார். அதாவது கடைசி இரு ஓவர்களில் மட்டும் 36 ரன்கள் எடுத்தது ஐதராபாத்.

எனினும் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது சென்னை.

இந்த வெற்றியின் மூலம் பிளே ஆஃபுக்கு முடிவுரை எழுதப்படுவதை தள்ளிவைத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அடுத்ததாக பங்காளி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com