அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடந்து வருகின்றன. சாமானிய மக்களிலிருந்து அமைச்சர்கள், அரசியல் தலைவர்களில் காளைகள் வரை போட்டியில் பங்கேற்றன.
இன்று களமிறங்கிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காளை வாடிவாசலில் இருந்து வரும் போதே இரண்டு வீரர்களிடம் பிடிபட்டு நின்றது. ஆனால் ஒரு மாட்டை ஒரு வீரர் தான் பிடிக்க வேண்டும் என விதிமுறை இருப்பதால் கமிட்டியினர் “ஒருவர் மட்டும் பிடிங்க, நிதியமைச்சர் மாடுப்பா” என கூவினர். இதனால் ஒரு வீரர் மாட்டை விட, மற்றொரு வீரர் 10 வினாடிக்கும் மேலாகத் தனது கைக்குள் காளையை அடக்கி வைத்தார். ஆனால் மாடு பிடிமாடு என கமிட்டியினர் அறிவிக்காமல் காலம் தாழ்த்தியது மட்டுமின்றி மாட்டை விட்டுவிடுமாறும் வீரரைக் கேட்டதால் அவர் மாட்டை விட்டார்.
அடுத்த சில வினாடிகளுக்குக் காளை அங்கும் இங்கும் ஆட “அட அருமையான மாடுப்பா அமைச்சர் மாடு” என பில்டப் கொடுத்தனர். இதனால் வீரர்கள் அதனைப் பிடிக்க முயல, ஒரு வீரர் மட்டும் அலேக்காக அமுக்கி அதன் திமிலில் தொற்றிக்கொண்டார் இரண்டு மூன்று முறை திமிலை அங்கும் இங்கும் ஆட்டிய மாடு அவரிடம் சரண்டர் ஆனது. ஆனால் விழா கமிட்டியினர் இந்த முறையும் மாட்டைப் பிடி மாடாக அறிவிக்காமல் மாடு சோர்ந்து போய்விட்டது என மழுப்பினர். களத்தில் ஒரு முறை கூட துள்ளிக் குதிக்காத ஒரு நிமிடத்தில் சோர்ந்து போன பிடிஆர் காளை வெற்றி காளையாக வாடி வாசலில் மந்த நடை போட்டது. ஏமாற்றமடைந்த வீரர்கள் உற்சாகம் குறையாமல் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
பிடிஆர் காளையை தொடர்ந்து சில நிமிடங்களில் வெளியான அமைச்சர் அன்பில் மகேஷின் காளை மிரட்டலான ஆட்டத்தைக் காட்டியது.