MS Dhoni : தசாப்த கால பயணம், தளராத நம்பிக்கை - 'தல தோனி' இந்தியாவுக்கு செய்தது என்ன?

அணியில் இடம்பெறுவதற்கு முன் நல்ல ரெக்கார்ட்களை வைத்திருந்தவர் மீது இத்தேசமும், அணி நிர்வாகமும் வைத்த நம்பிக்கையை குலைக்கும் வண்ணம் அமைந்தத்து இந்த துவக்கம். ஆனால் சற்றும் மனம் தளராமல் இருந்த தோனி, அவரது கன்சிஸ்டென்சியால் மெல்ல மெல்ல மேலெழுந்தார்
MS Dhoni
MS DhoniTwitter
Published on

சுனில் கவாஸ்கர் களத்தில் இருக்கும் வரை இந்தியா தோற்காது என்றிருந்த நம்பிக்கை, சச்சின் டெண்டுல்கர் என மாறியது. அடுத்த தலைமுறைக்கு அந்த நம்பிக்கையை கொடுத்தவர் தோனி.

இன்று தன் 42வது பிறந்தநாளை கொண்டாடும் இவரை, இந்தியாவே கொண்டாடுகிறது என்றால், பல வருடங்களாக எட்டாக் கனியாக இருந்த பல இந்தியர்களின் கனவை, சர்வ சாதாரணமாக இவர் செய்து முடித்தத்து தான். அதுவும் ஆர்ப்பாட்டமில்லாமல்.

2007 உலகக் கோப்பையில் வங்கதேசம், மற்றும் மேற்கிந்திய தீவுகளுடனான தோல்விகளை ஏற்காத ரசிகர்கள், ரான்சியில் இவரது வீட்டில் கற்களை எரிந்து கலவரம் நடத்திய சம்பவங்கள் எல்லாம் மறக்கக் கூடியது அல்ல. இந்த தோல்விகளால் இந்தியா அந்த வருட உலக கோப்பையில் க்ரூப் ஸ்டேஜிலேயே வெளியேறியது. ஆனால் தொடர்ந்து இவர் மீது அணியும் நிர்வாகமும் வைத்த நம்பிக்கையால், 2007ல் டி20 உலகக்கோப்பை தொடருக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு லீக் மேட்ச்சில், பவுல் அவுட் மூலம் இந்தியா வென்றது. இதுவே தோனிக்கு கேப்டனாக கிடைத்த முதல் வெற்றி. பல வருடங்கள் கழித்து அந்த நிகழ்வை பற்றி பேசிய ராபின் உத்தப்பா, சேவாக் ஆகியோர், அந்த பவுல் அவுட்டில் இந்தியா வென்றதற்கு பின்னால் இருந்த ரகசியம் தோனியின் புத்திசாலித்தனம் தான் என்று நெகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் 2007ன் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது. அந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை தவறவிட்டதற்கு சற்றே ஆறுதலாக மாறியது இந்த வெற்றி. இது அனைத்துடன் சேர்த்து, 20 ஒவர்களில் உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தியதும் 2007ல் தான். ஆக இந்தியா தான் முதல் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றது என்ற பெருமையையும் தோனி தான் வாங்கிக்கொடுத்தார்.

அதன் பின் 2008ல் துவங்கியது ஐபிஎல். முதலாம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அணிகளின் உரிமையாளர்களும் போட்டிப்போட்டுக்கொண்டு இவரை ஏலத்தில் கூறினர். சாதனைகளுக்கு பெயர் பெற்ற தோனி, அனைத்து ஐபிஎல் அணிகளாலும் வேண்டப்பட்ட வீரர் என்ற பெருமையையும் தட்டி சென்றார். கடைசியில் சென்னையா மும்பையா என்று இருந்த ஏலத்தின் முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை வாங்கியது. அணிக்கு கேப்டனாகவும் தோனியை நியமித்தது நிர்வாகம்.

2010ல் முதல் ஐ பி எல் கோப்பையை சென்னை அணி தோனி தலைமையில் வென்றது. மாஹி 'தல' ஆனார். கேப்டன் கூல் என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் இவரை கொண்டாடியது.

2011ல் 50 ஓவர் உலக கோப்பை, அதே வருடம் ஐபிஎலில் இரண்டாவது முறையாக கோப்பை வென்றது என நீண்டது வெற்றிப்பயணம்.

2011 உலகக்கோப்பையின் வின்னிங் ஷாட்டில் இவர் அடித்த சிக்ஸர், இவரது 'கேப்டன் கூல்' என்ற பெயரை அனைவரது மனதிலும் பச்சை குத்தியது.

சென்னை அணி நிறுவப்பட்டதிலிருந்து தோனி மட்டுமே அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். மற்ற ஐபிஎல் அணிகளெல்லாம் அவர்களது தலைமையை மாற்றிக்கொண்டே தான் இருந்தனர். இந்த பெருமையும் தோனிக்கு சேரும்.

2008ல் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட தோனி, 2010 மற்றும் 2011ல் Test Mace ஐ வென்று தந்தார். அதுவரை இந்த செங்கோல் ஆஸ்திரேலியாவிடம் இருந்தது. 2014ல் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து இவர் விலகிக்கொண்டார்.

அதன் பின்னர், 2013ல் இங்கிலாந்திற்கு எதிராக சாம்பியன்ஸ் டிராஃபியையும் வென்றுக்கொடுத்தார் தல. இதன் மூலம் ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையை தோனி படைத்தார்.

இது மட்டுமல்லாமல், 2010லும், 2016லும் ஆசிய கோப்பையை இந்தியா இவரது தலைமையில் வென்றது.

2017ல் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளின் தலைமையிலிருந்து தோனி விலகினார். 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு புதிய கேப்டன் தன்னை தயார்படுத்திக்கொள்ளவே இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிடிருந்தார்.

இரண்டு வருட தடைக்கு பின் 2018ல் மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி களமிறங்கினார். அந்த பருவத்தின் கோப்பையை சென்னை அணி வென்றது, அவருக்கும் அவரது அணிக்குமான கம் பேக்காக அமைந்தது.

2020ல் கொரோனா காரணமாக துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில், சென்னை அணி மிக மோசமான நிலையில் லீக் ஸ்டேஜுடன் வெளியேறியது. அதே ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தோனி தனது ஓய்வையும் அறிவித்திருந்தார்.

இந்த இரண்டு விஷயங்களும் ரசிகர்களுக்கு பெருந்தொற்றைவிட பேரடியாக வந்து விழுந்தது. 2020ல் அணி வெளியேறிய போது, தோனி ஐபிஎல் தொடர்களில் விளையாடுவதிலிருந்தும் ஓய்வு பெறுவாரா என்ற கேள்வி ரசிகர்கள், கிரிக்கெட் வட்டாரங்கள் என எல்லோரையும் வதைக்க, 2021ல் மீண்டும் சிஎஸ்கேவின் கேப்டனாக அவர் வந்து நின்றது பெரும் ஆறுதலாக அமைந்தது. அந்த ஆண்டு மீண்டு வந்த சிஎஸ்கே, நான்காவது கோப்பையை வென்றது.

தான் முதன் முதலாக விளையாடிய சர்வதேச போட்டியில் ரன் அவுட் உடன் துவங்கிய இவரது பயணம், 2019ல் நியூசிலாந்திற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இவர் ரன் அவுட்டான போது தான் பிரேக் அடித்தது. அந்த விக்கெட், அன்றைய இந்திய அணியின் தோல்வி, கோலியின் கேரியரை விட, தோனியின் நிலை அணியில் என்னவாக இருக்கும் என்பதாக தான் இருந்தது.

இந்த தருணங்களிலும் தல தன்னிலையை இழக்காமல், கேப்டன் கூலாகவே வலம் வந்தார்

ரசிகர்களின் தளராத அன்பும், இந்திய அணி வீரர்கள், இந்திய கிரிக்கெட் வாரியம் இவர் மீது காண்பித்த நம்பிக்கையும் இவருக்கு பக்கபலமாக நின்றது.

2021ல் கோப்பையை வென்ற பிறகு "Job Done" என்றவர், "I still haven't left behind" என்று கூறியபோது, பெருமூச்சு விட்டது ரசிகர் கூட்டம்.

2022 ஐபிஎல் சீசன் மற்றுமொரு ஏமாற்றமாக அமைந்தாலும், தல தோனி தான் அடுத்த முறையும் கேப்டன் என்பதால், அடுத்த ஆண்டு ஐபிஎல் ஐ எதிர்நோக்கி காத்திருந்தது தோனியின் ரசிகர் பட்டாளம்.

2023ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பிருந்தே, இது அவரது கடைசி ஐபிஎல் சீசன் என அனைவரும் பேசத் தொடங்கிவிட்டனர். சென்னை அணி மட்டுமல்லாது மற்ற அணிகளின் ரசிகர்களும் தோனிக்கு பிரியாவிடைக் கொடுக்க மைதானங்களில் கூட, தோனியோ வழக்கம்போல சிரித்து சமாளித்தார்.

2023ஆம் ஆண்டின் ஐபிஎல்லை சென்னை அணி வெல்லவும் வழிவகுத்தார்.

ஓய்வு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக இவர் அறிவிக்காததால், மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது ரசிகர் கூட்டம்

MS Dhoni
IPL 2022: "இது தான் இளைஞர்களுக்குத் தேவை" CSK -ன் கடைசி போட்டிக்கு பிறகு தோனி பேச்சு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com