"ஈட்டிகளை எறிந்தேன், பே ஸ்பால்களை எறிந்தேன், தற்போது எதிரிகளை வளையத்திலிருந்து எறிகிறேன். வாழ்கை என் மீது பல விஷயங்களை எறிந்துள்ளது. வாழ்கை எதை எறிந்தாலும் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்" என சமீபத்தில் ஒரு ட்விட் செய்திருந்தார் வீர் மகான் என்றழைக்கப்படும் ரிங்கு சிங்.
மாநிறம், அகண்ட நெத்தி, அதில் ஒழுங்காய் பூசப்பட்ட திருநீறு + குங்குமத் திலகம், இந்திய கருப்பு பூசிய கண்கள், ஷாம்பூ போட்டு கண்டீஷன் செய்யப்பட்ட ஜடா முடி, கே ஜி எஃப் நாயகன் யஷ் போன்ற தாடி, சுமார் 52 இன்ச் மார்பு அதில் 'மா' என்கிற தேவ நகரி சொல், கழுத்தில் ருத்திராட்சம், சிக்ஸ் பேக் எதுவும் இல்லாத அடக்கமான வயிறு, ஐயப்ப சாமிக்கு மாலை போட்டது பொன்ற கருப்பு நிற அரை டிராயர், காவலர்கள் அணிந்திருப்பது போல கருப்பு நிற சாக்ஸ் உடன் ஒரு பெரிய கருப்பு ஷூ... இப்படி வேண்டுமானால் வீர் மஹானின் உருவத்தை விளக்கலாம்.
அதீத கோபம், WWE ரசிகர்களை இருக்கையிலிருந்து துள்ளி குதிக்கச் செய்யும் ஆக்ரோஷ நாதம், தேனி வேகத்தில் செயல்படும் யானை போன்ற வேகம் எதிரியை வீழ்த்துவதில் கவனம்... என வீர் மஹானின் குணாதிசயங்களைக் கூறலாம்.
தோராயமாக 6 அடி 4 அங்குள உயரத்தில் சுமார் 125 கிலோ உடல் எடையோடு அஜானுபாகுவாக தற்போது வீர் மஹான் என்கிற பெயரில் WWE உலகில் வலம் வரும் இந்த மனிதரின் பூர்வீகம் கோபிகன்ச், உத்தரப் பிரதேசம், இந்தியா.
தந்தை ஒரு டிரக் ஓட்டுநர் என்பதால், இளம் வயதிலிருந்தே பற்றாக்குறை வாழ்கை தான். வீர் மஹானையும் சேர்த்து மொத்தம் 9 குழந்தைகள் என்பதால், அந்த கீழ் நடுத்தர குடும்பத்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் எவ்வளவு பணம் செலவழித்து, அக்கறை காட்டி வளர்த்திருக்க முடியும் என்பதை இன்னும் விரிவாக விளக்கத் தேவை இல்லை. அதுவே அவர்கள் வறுமையின் சான்று.
ரிங்குவுக்கு குழந்தை பருவத்திலிருந்தே விளையாட்டு மீது அதீத ஆர்வம் இருந்தது. தொடக்கத்தில் ஈட்டி எறிதல் விளையாட்டில் முறையாக பயிற்சி பெற்று, இந்திய தேசிய அளவில் (ஜூனியர் வயதுப் பிரிவில்) எல்லாம் பங்கெடுத்து பதக்கம் எல்லாம் கூட வென்றார்.
2008ஆம் ஆண்டு உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்த ஆண்டு தான் ரிங்கு சிங்கின் வாழ்வையே புரட்டிப் போட்ட ஒரு நிகழ்வு நடந்தது.
ஜே பி பெர்ன்ஸ்டெயின் மற்றும் அவரது கூட்டாளி ஆஷ் வாசுதேவன், வில் சாங் ஆகியோர் இணைந்து 'தி மில்லியன் டாலர் ஆர்ம்' என்கிற இந்திய ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தினர்.
யார் துல்லியமாக, அதீத வேகத்தில் பேஸ் பாலை எறிகிறார்கள் என்பது தான் போட்டி. தற்போதைய கின்னஸ் உலக சாதனை விவரங்கள் படி அரொல்டிஸ் சாப்மேன் என்பவர் தான் மணிக்கு 105.1 மைல் வேகத்தில் வீசியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், 2008ஆம் ஆண்டு தன் 20ஆவது வயதிலேயே ரிங்கு 87 மைல் வேகத்தில், துல்லியமாக பேஸ் பாலை வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், ரிங்கு அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நாள் வரை, முறையாக பேஸ் பாஸ் விளையாடியதே கிடையாது.
போட்டியில் வெற்றி வீரனாகிய ரிங்கு சிங், முறையாக பேஸ் பாலை கற்றுக் கொண்டு, தொழில்முறை வீரராக விளையாட அமெரிக்கா சென்றார். அமெரிக்கா வந்த பிறகு தான் அவர் ஆங்கிலமும் கற்றுக் கொண்டார். உத்தரப் பிரதேசத்தில் ஏதோ ஒரு மூளையில் வறுமையோடு போராடிக் கொண்டிருந்த 6 அடி 4 அங்குல மனிதனுக்கு தற்போது வாழ்வில் முன்னேறக் கூடிய வாய்ப்புகளோடு விளையாட வாய்ப்பு கிடைத்தது.
திறமையை பட்டை தீட்டிக் கொண்டே, மறுபக்கம் அமெரிக்காவின் தொழில்முறை பேஸ்பால் அணிகளில் வாய்ப்பு தேடினார் ரிங்கு. கடைசியில் பீட்டர்ஸ்பர்க் பைரேட்ஸ் என்கிற அணியில் இடம் கிடைத்தது.
முதல் முறையாக அமெரிக்க பேஸ்பால் அணியில் விளையாடிய இந்திய வீரர் என்கிற பெருமையை பெற்றார் ரிங்கு சிங். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நாட்களுக்கு நீடிக்கவில்லை. 2009ஆம் ஆண்டு முதல் பல்வேறு பேஸ் பால் போட்டிகளில் விளையாடிய ரிங்கு 2018ஆம் ஆண்டு அவ்விளையாட்டிலிருந்தே வெளியேறினார் என்கிறது பிபிசி வலைதளம்.
இந்தியா, ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை ஹாக்கி போட்டியில் தான் அதிக (12) பதக்கங்களை வென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து அதிக பதக்கங்களை வென்ற போட்டி அல்லது விளையாட்டு என்றால் அது மல்யுத்தம்தான். அந்த அளவுக்கு இந்தியர்களின் ரத்தத்தில் ஊறிய விளையாட்டை கையில் எடுத்தார். 2018 ஆம் ஆண்டு, WWE உடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அந்த புதிய உலகில் வலது கால் எடுத்து வைத்தார் ரிங்கு. தொடக்க காலத்தில், தனது இயற்பெயரான ரிங்கு என்கிற பெயரிலேயே விளையாடினார்.
வீர், ஷாக்கி, ஜிந்தர் ஆகிய வீரர்கள் அணியும் உருவானது, அவ்வணி தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்றதாகவும், ஆனால் 2021 ஆம் ஆண்டில், சில காரணங்களால் தனது அணியிலிருந்து பிரிந்து, WWE ராவுடன் தனி நபராக ஒப்பந்தம் செய்துகொண்டதாக பிபிசி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முறை தன் பெயரை 'வீர் மஹான்' என்று மாற்றிக்கொண்டார் ரிங்கு.
கடந்த 2022 ஏப்ரல் 4ஆம் தேதி ரே மிஸ்டீரியோ மற்றும் டாமினிக் மிஸ்டீரியோ உடனான WWE ரா போட்டியில் அவர்களை வென்று அதகளப்படுத்தினார். ஒட்டுமொத்த WWE ரா உலக ரசிகர்களும் 'யார் சாமி இவன்' என உச்சி முகர்ந்து கொண்டாடத் தொடங்கியுள்ளது. தி கிரேட் காலி போல, இவரும் WWE உலகில் ஒரு பெரிய சுற்று வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
WWE போட்டிகளில் பங்கெடுத்தாலும், இந்த மாமலை மனிதர் ஒரு சைவர் (சைவ உணவு சாப்பிடுபவர்). இவர் வாழ்கைக் கதை 'Million Dollar Arm' என்கிற பெயரில் ஒரு படமாகவே வெளியாகிவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அப்படத்தை இப்போது கூட டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow Us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu