1953-ம் ஆண்டு சோவியத் தலைவர் ஸ்டாலின் மறைந்த வாரத்தில் கருணாநிதிக்கு மகனாகப் பிறந்தார் ஸ்டாலின். அதன் காரணமாகத்தான் தன் மகனுக்கு `ஸ்டாலின்’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார் கருணாநிதி.
1966-ம் ஆண்டு, தனது 14-வது வயதில் `கோபாலபுரம் தி.மு.க இளைஞர் குழு' என்ற சிறு குழுவை கோபாலபுரத்தில் தொடங்கினார் ஸ்டாலின்.
1971 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்காக முதன்முறையாகப் பிரசாரம் செய்தார். அப்போது அவருக்கு வயது 18 மட்டுமே.
இளைஞராக இருந்தபோது `முரசே முழங்கு', `நீதி தேவன் மயங்குகிறான்', `நாளை நமதே' உள்ளிட்ட சில மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார் ஸ்டாலின். திராவிடக் கொள்கைகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்லும் கொள்கை விளக்க நாடகங்கள்தாம் இவை.
அதேபோல சமூக கருத்துகள் நிறைந்த `ஒரே ரத்தம்', `மக்கள் ஆணையிட்டால்' ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
1974-ம் ஆண்டு தி.மு.க-வின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
1976-ல் எமெர்ஜென்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, சிறை சென்றார். `கைதாகிறார் ஸ்டாலின்' என்ற செய்தி தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பரவியதால் கோபாலபுரத்தில் கூட்டம் அலைமோதியது. அப்போது கருணாநிதியின் மகன் என்பதைத் தாண்டி அரசியலில் முக்கிய நபராக மிளிரத் தொடங்கியிருந்தார்.
தி.க., தி.மு.க., சி.பி.எம் ஆகிய கட்சிகளின் முன்னணித் தலைவர்களுடன் சென்னை மத்தியச் சிறையில் ஓராண்டு காலத்தைக் கழித்தார் ஸ்டாலின். சிறையில் பல்வேறு கொடுமைகளை அனுபவித்த ஸ்டாலின், மூத்த அரசியல் தலைவர்களின் நெருக்கத்தையும் பெற்றார்.
1980, ஜூன் 26-ம் தேதி மதுரை ஜான்ஸி பூங்காவில் தி.மு.க இளைஞர் அணியைத் தொடங்கிவைத்தார் கருணாநிதி. இரண்டு ஆண்டு காலம் நிர்வாகிகள் இல்லாமல் செயல்பட்ட இளைஞரணியின் அமைப்பாளராக, 1982-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின்.
1984 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களமிறங்கினார். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
1989-ம் ஆண்டு மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
1991 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். 1991 தேர்தலுக்குப் பிறகு, இவர் போட்டியிட்ட ஆறு தேர்தல்களிலும் வெற்றிபெற்றிருக்கிறார்.
1994-ம் ஆண்டு தி.மு.க-விலிருந்து பிரிந்து ம.தி.மு.க-வைத் தொடங்கினார் வைகோ. ஸ்டாலின் முன்னிறுத்தப்படுவதைக் காரணம் காட்டித்தான் தி.மு.க-விலிருந்து விலகினார் வைகோ.
1996 சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்த கையோடு, சென்னை மாநகராட்சியின் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்டாலின். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் அவர்தான்.
இவர் மேயராக இருந்த காலகட்டத்தில்தான் சென்னையை, `சிங்கார சென்னை' என்று அழைக்கத் தொடங்கினர்.
இளைஞரணிக்காக ஒரு கட்டடம் வேண்டுமென நினைத்து கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு எதிரில் உள்ள அன்பகம் கட்டடத்தைக் கேட்டபோது, அதற்கென பத்து லட்ச ரூபாய் வசூலித்துக் கொடுத்தால்தான் இளைஞரணிக்கு அந்த கட்டடத்தை ஒதுக்க முடியுமென கட்சியின் சார்பில் சொல்லப்பட்டது. இதையடுத்து 11 லட்ச ரூபாய் வசூலித்து, அந்தக் கட்டடத்தை இளைஞரணிக்காகப் பெற்றார் மு.க. ஸ்டாலின். 1988லிருந்து அன்பகத்திலிருந்த பிரம்மாண்டமான கட்டடத்தில் இயங்க ஆரம்பித்தது தி.மு.க. இளைஞரணி.
2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்றதை அடுத்து முதன்முறையாக அமைச்சர் பொறுப்பேற்றார் ஸ்டாலின். 2009-ம் ஆண்டு துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார்.
2003-ம் ஆண்டு தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராக பதவியேற்றார்.
2008-ம் ஆண்டு தி.மு.க பொருளாளராகவும் பதவிப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
2016 முதல் தமிழக சட்ட சபையின் எதிர்க்கட்சித் தலைவராகச் செயலாற்றிவந்தார் ஸ்டாலின்.
கருணாநிதியின் வயது மூப்பு காரணமாக 2017-ல் தி.மு.க-வின் செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதற்கு முன்பு, திமுகவில் செயல் தலைவர் பதவி இல்லாத நிலையில், 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அக்கட்சியின் முதல் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
2018-ம் ஆண்டு கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு தி.மு.க-வின் தலைவரானார்.
தொடர்ந்து 2021-ல் கழக ஆட்சி அமைய வேண்டும் என்ற குறிக்கோளோடு தமிழகத்தில் சுற்றுப்பயணங்கள் சென்று தீவிர பிரசாரங்கள் மேற்கொண்டார். அந்த பிரசாரங்களின் பலனாக 159 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது தி.மு.க கூட்டணி!
மகளிருக்கு இலவச பேருந்து பயணம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற முக்கியச் சட்டங்களை இயற்றியிருக்கிறார் ஸ்டாலின்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust