பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் அல்லோல் கல்லோலமாக நடந்து வருகின்றன. புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் கலந்து கொண்ட காளையர்களை மிரட்டி விட்டது அன்னலட்சுமி எனும் இளம் பெண்ணின் காளை!
வாடிவாசல் களத்தில் மாடுபிடி வீரர்களுக்கு மத்தியில் சிகப்பு துண்டை தலைக்கு மேல் சுற்றி தன் மாட்டுக்கு ஆராவாரம் செய்தார் அன்னலட்சுமி. மாடு வென்றதாக அறிவிக்கப்பட்டதும் ஓடிச் சென்று அமைச்சரின் தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகளை கமிட்டியில் பெற்றுக்கொண்டு அப்பாவுடன் கெத்தாகத் திரும்பினார் அந்த பெண். அரங்கமே அந்த பெண்ணை வியந்து பார்த்தது.
அன்னலட்சுமி 9ம் வகுப்பு படித்துவரும் சிறுமி. கடந்த 4 ஆண்டுகளாகச் செல்லமாகவும் வீரமாகவும் தன் காளைக்குப் பயிற்சியளித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் தனது காளை தோல்வியை தழுவியபோது அடுத்த ஆண்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் எனப் பத்திரிக்கைகளில் சபதம் எடுத்தார். அவரது சபதத்தைக் காப்பாற்றியுள்ளது பெரிய கருப்பன் காளை.
பெரியகருப்பன் காளையைப் பிடிக்கச் சிலர் அதன் மீது ஏறி விழுந்தாலும் தூசி தட்டுவதைப் போல வீரர்களை உதிறிவிட்டு ஜெட் வேகத்தில் பறந்தது பெரியகருப்பன். வீரர்கள் மண்ணைக் கவ்வ, பரிசுகளுடன் மகிழ்ச்சியாகத் திரும்பினார் அன்னலட்சுமி.