ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, கோபி, சத்தியமங்கலம், பவானி, புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் ஓட்டுப்பதிவு முடிந்து, இன்று காலை முதல் ஈரோடு மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை, சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாநகராட்சியில் முடிதிருத்தும் தொழிலாளியான சிவஞானம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிட்டு கவுன்சிலராக வென்றுள்ளார்.
அணைக்கட்டு பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் ச.சிவஞானம் 1999 -ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டார். ஏற்கனவே ஈரோடு மாநகராட்சி 48-வது வார்டில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்டார். ஆனால், அந்த தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. அதன் பின்பு திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக ச.சிவஞானம், “சலூன் கடை நடத்தி வந்ததால் இந்த பகுதி மக்களுடன் பழக வாய்ப்பு ஏற்பட்டது. எனவே மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எங்கள் கட்சி சார்பில் போராடினேன். அதன் பயனாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. இன்னும் எனது பணியைச் சிறப்பாகச் செய்வேன்” எனக் கூறினார்.