வேலைக்கு என்றில்லை வாழ்க்கைக்கு என்றே சென்னையை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கின்றனர். வேலை வாய்ப்புகள், கல்வி வாய்ப்புகள், மெட்ரோவில் அமைதியான பயணம், பீச்சில் ஓய்வு, அப்பார்ட்மெண்ட்களில் வீடு... சென்னை வசதியான வாழ்க்கையின் அடையாளமாக அல்லவா இருக்கிறது.
ஆனால் மேலே கூறப்பட்ட சென்னையின் எந்த அடையாளமும் தீண்டப்படாமல் தலைமுறை தலைமுறையாக மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். அவர்களைப் பற்றி விளக்கும் ஆவணப்படம் தான் "ரூட்ஸ் வித்அவுட் ரூஃப்".
22 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியப் போட்டி நடைபெற இடைஞ்சலாக இருப்பதாகக் கூறி ரிப்பன் மாளிகை பிளாட்பாரத்தில் வசித்த மக்களை இந்த திடலில் அடைத்தது அரசாங்கம்.
கண்ணப்பர் திடலுக்கு House of Houseless என்றுப் பெயர் இருக்கிறதாம். ஆனால் இங்கு வாழும் குழந்தைகள், அவர்களின் அம்மாக்கள், அப்பாக்கள், பாட்டிகள் எல்லாரும் இன்றும் வீடற்றவர்கள் தான்.
ஆம், ஒரு படிகட்டின் கீழுள்ள இடைவெளியில் ஒரு எண்ணை ஒட்டி இது தான் உங்கள் கதவு எண், இது தான் உங்கள் வீடு என்றால் ஒரு மனைவி, ஒரு கணவன், ஒரு குழந்தை அங்கு அடைந்துகிடக்க ஒத்துக்கொள்வீர்களா? அப்படி தான் இங்கு குடும்பங்கள் வாழ்கின்றனர்.
இது போன்ற வீடற்றோர் இல்லத்தில் பொதுவாக தனிநபர்கள்தான் தங்கவைக்கப்படுவர். ஆனால் இங்கோ குடும்பம் குடும்பமாக மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.
இங்கிருக்கும் பெண்களுக்கு உண்டாகும் பாலியல் சீண்டல்களைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. பெண்களின் வாழ்க்கை நரகத்திலும் நரகமானது.
7,8 குடும்பங்கள் ஒரே குளியலறை, கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும். பல குடும்பங்கள் பொதுக்கழிப்பறையைத்தான் நம்பியிருக்கின்றன. அதுவும் காலை 7 மணி வரை மட்டும் தான் செயல்படும். அதிகாலை 2,3 மணிக்கு எழுந்து போய்விட்டு வந்தால் தான் உண்டு.
மனித வாழ்க்கையின் மிகவும் முக்கியமான பகுதி குடும்ப வாழ்க்கை. அது இந்த மக்கள் கூட்டத்துக்கு கொடுத்து வைக்காத ஒன்று. குழந்தைகளுடன் கொஞ்ச முடியாது. கணவன் மனைவி பேசிக்கொள்ள முடியாது.
தினமும் கொசுக்கடியை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் ஒவ்வொரு இரவும் எலிக்கடிக்கு பயந்து பயந்து விழித்துக்கொண்டே உறங்குகின்றனர் இங்கிருக்கும் இந்த குழந்தைகள்.
இடிந்து விழும் நிலையில் இருக்கும் இந்த கட்டடம், மரப்பலைகளாலும் தார்பாய்களாலும் மறைக்கப்பட்ட வீடுகள் இதற்கிடையில் சுகாதாரம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை.
வறுமையிலும் ஏழ்மையிலும் துவளும் இந்த மக்கள் தங்களின் அடுத்த தலைமுறைக்காவது நல்ல வாழ்க்கை கிடைக்காதா என ஏங்கித் தவிக்கின்றனர். இந்த குழந்தைகளின் முகத்தில் இருக்கும் வெள்ளந்தி சிரிப்பு மாறிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. அவர்கள் வசிப்பது வீட்டில் இல்லை சிறையில் என்பதை உணரும் போது அவர்கள் மனம் என்னவாகும்?
இதற்காக மனுக்கள், போராட்டங்கள் பல பார்த்தாயிற்று. எந்த மாற்றமும் இல்லை. இந்த இடத்துக்குள் ஒரு குடும்பம் அதிகரிக்கும் போது அதிகாரிகள் வந்து கால் நீட்டக் கூட இடமில்லாத ஒரு அறையை இரண்டாக பிரித்து இன்னொரு வீட்டு எண்ணை ஒட்டவைத்துவிட்டு செல்கின்றனர். அப்பட்டமான மனித வாழ்வுரிமை மீறல் என்பது நம் அதிகாரிகள் செய்வது தான்.
இங்கிருக்கும் இளைஞர்கள் தவறான பழக்க வழக்கங்களுக்குள் இழுக்கப்படுகின்றனர். பள்ளிக் கூட படிப்பைக் கூட யாரும் நிறைவு செய்வதில்லை. நன்றாக படித்து முன்னேற நினைப்பவர்களுக்கு வறுமைத் தடையாக வந்து நிற்கிறது.
அரசுக்கு இந்த மக்கள் அலட்சியம். அரசியல்வாதிகளுக்கு குறைந்த விலை (சில வழக்கமான பொய்களுக்கு) கிடைக்கும் வாக்கு. பொதுவில் இவர்கள் தீண்டத்தகாதவர்கள். பெரிய பெரிய கட்டடங்கள், மெட்ரோ ரயில் சேவைக்கு நடுவில் வாழும் இவர்களின் நிலையை மழைக்காலத்தில் கற்பனை கூட செய்துபார்க்க முடியாது.
இவர்களின் கனவெல்லாம் ஒரு நாள் ஒரு தனி வீட்டில் குடும்பத்துடன் இருக்க வேண்டும். குழந்தைகள் விளையாட வேண்டும். தங்களுக்கென தனி கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். யார் பார்ப்பார்களோ அடுத்தது யார் வரிசையில் நிற்கிறார்களோ என படபடப்பில்லாமல் குளிக்க வேண்டும்.
நம் அன்றாட வாழ்க்கையை இந்த மக்களுக்கும் வழங்குவதில் கட்சி பேதமின்றி 22 ஆண்டுகள் தயக்கம் காட்டுகிறது நம் அரசு. இந்த நிலை என்று மாறும் எனத் தெரியவில்லை. குறைந்தபட்சம் இந்த மக்களைத் தெரிந்துகொள்ளவும் அவர்களின் வாழ்க்கையில் பொது வெளியில் எடுத்துக் கூறவும் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust