நவம்பர் மாதம் என்றாலே நம் மனதிற்கு நினைவு வரும் முக்கியமான நாள் குழந்தைகள் தினம். குழந்தைகள் தினம் என்றாலே நாம் நம் பள்ளிகளில் வண்ண உடைகளை அணிந்து சந்தோஷமாக கொண்டாடிய குழந்தைகள் தின விழாக்கள் நினைவில் வந்து செல்லும்.
குழந்தை பருவம் என்றாலே கவலை இல்லாத பருவம். வளர்ந்த பின்னர் ஏன் தான் வளர்ந்தோமோ என்று பலர் கூறுவோம். இந்த பசுமையான நினைவுகளைக் கொண்டாடுவது தவறு இல்லை.
ஆனால், இன்றைய குழந்தைகள் நிஜமாகவே மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்களா என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். பிறந்து 3 வருடங்களே ஆன பிஞ்சு குழந்தைகளை கல்விக்காக பள்ளிகளை நம்பி சேர்க்கிறோம்.
ஆனால், அந்த பள்ளியில் இருக்கும் சூழல் ,பள்ளிகளில் தினமும் என்ன நடக்கின்றன என்பதைப் பல பெற்றோர்களால் சரியாக அறிந்துகொள்ள முடிவதில்லை என்பதே உண்மை. சமீப காலமாக பள்ளிகள் பற்றி வரும் செய்திகளே இதற்கு சாட்சி.
பள்ளிகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் ,கொடூரமான தண்டனைகள், அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவது என்று அடுக்கடுக்காக தினம் செய்திகளில் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இதில் பெரும்பாலான பிரச்னைகள் மிகவும் முற்றிய பின்னரே பெற்றோர்களுக்கு தெரிய வருகிறது .பெரும்பாலான பிள்ளைகள் பள்ளிகளில் அவர்களுக்கு நடப்பதை வீட்டில் சொல்வதற்கே பயப்படுகிறார்கள். சொன்னால் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு விடுமோ,படிப்பு பாதித்து விடுமோ என்று எண்ணிப் பல பிள்ளைகள் இந்த கொடுமைகளை மெளனமாக தினமும் அனுபவிக்கிறார்கள்.
2000 ஆம் ஆண்டு செக்ஷன் 75 ஜூவினைல் ஜஸ்டிஸின்(prevention of cruelty against children) படி குழந்தைகளைத் துன்புறுத்துவதும் உடல் ரீதியாக/ மனரீதியாக எந்த விதமான வலியை ஏற்படுத்தும் செயல்களை செய்யும் ஆசிரியர்கள்/ பெற்றோர்கள் குற்றம் நிரூபணம் ஆனால் குறைந்தது 3 வருடம் சிறைக்கு செல்ல வேண்டும் என்பது விதி.
ஆனால் இதை பெரும்பாலானோர் துளியும் கண்டுகொள்வதில்லை. இன்றளவும் செய்திகளில் ஆசிரியர்கள் அடித்து பார்வை போனது முதல் உயிரிழக்கும் பிள்ளைகள் வரை செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.
இது தொடர்வதற்கு முக்கியமான காரணம் ,இதைப் போன்று நடந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு தகுந்த தண்டனைகள் வழங்கப்படாதது தான்.
இது ஒரு பக்கம் என்றால் பள்ளிகளில் நடக்கும் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளோ தலை சுற்ற வைக்கின்றன. பள்ளிகளை கோவில் போல் நம்பி ஆசிரியர்களைக் கடவுள் போல் நம்பி தினமும் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் விட்டு செல்கிறார்கள்.
ஆனால் ,சில வக்கிர எண்ணம் கொண்ட மிருகங்கள் பாலியல் சீண்டல் என்றாலே என்னவென்று தெரியாத அளவிற்கு இருக்கும் சிறு குழந்தைகளிடம் கூட தவறாக நடந்து கொள்கிறார்கள். சற்று வளர்த்த பிள்ளைகளாக இருந்தால் மார்க்கில் கை வைத்துவிடுவேன், பெற்றோர்களிடம் கூறக் கூடாது என்று எதையாவது சொல்லி ,அவர்களை மிரட்டி, பாலியல் ரீதியாக துன்புறுத்தும் கொடுமையான சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
இதைப் போன்ற குற்றங்களை லேசாக எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக இதை செய்பவர்களை POCSOவின் கீழ் கைது செய்வதே இதற்கு சரியான நடவடிக்கை . பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே குட் டச் பேட் டச் என்ன வென்று சொல்லி கொடுக்க வேண்டும்.
இதை போன்று பிள்ளைகள் சிறு வயதில் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளானால் வளரும்போது பல மன நோய்கள் இவர்களைத் தாக்கக் கூடும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபணம் ஆகியுள்ளது.
அடிப்படையில் இவர்கள் பாதுகாப்பு இல்லாமல் உணரும் தன்மையால் தன்னம்பிக்கையை இழப்பார்கள் . இதைப் போன்ற குற்றங்கள் தெரிய வந்தால் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும் , அங்கு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல் நிலையம் , மனித உரிமை ஆணையம் ஆகிய இடங்களில் உங்கள் புகார்களை தெரிவிக்க வேண்டும்.
இது போன்ற குற்றங்களை பெரிது படுத்தாமல் விடுவதே இக்குற்றங்கள் அழியாமல் மீண்டும் மீண்டும் நடக்க வித்திடுகின்றது.
பள்ளியில் பயில வரும் பிள்ளைகளை தன் பிள்ளைகள் போல் எண்ணி சிறப்பாக வழிநடத்தும் ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஆனால், எல்லோரும் அவ்வாறு இல்லை என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். சில ஆசிரியர்கள் அடித்தால் தான் பிள்ளைகள் திருந்துவார்கள் அவர்கள் நல்லதிற்கு அடிக்கிறேன் என்று அவர்கள் செயல்களை நியாயப்படுத்துவார்கள் ,பிள்ளைகளை திருத்த பல வழிகள் உள்ளன. அதையெல்லாம் சற்று பொறுமையுடன் செயல்படுத்துவது சிறந்தது.
வளர்ந்த நாடுகளான அமெரிக்கா ,ஐரோப்பா போன்ற பல நாடுகளில் இதை போன்ற துன்புறுத்தல்கள் அனுமதிக்கப்படுவதே இல்லை இவ்வாறு செய்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது அங்கு நன்கு உணர்த்தப்பட்டுள்ளது. அடியாத மாடு படியாது என்பது மாட்டிற்கு பொருந்தும் ,சிறு பிள்ளைகளுக்கு அல்ல என்பதை ஆசிரியர்கள் உணரவேண்டும்.
பெற்றோர்கள் தினமும் தங்கள் பிள்ளைகளிடம் பள்ளியில் நடப்பதை கேட்டறிய வேண்டும் . பல நேரங்களில் பிள்ளைகள் வாய் திறக்க மாட்டார்கள். எனவே ,பிள்ளைகளின் நண்பர்களிடமும் அடிக்கடி பேசி பள்ளியில் நடப்பவற்றை தெரிந்து கொள்ளவது நல்லது . அவ்வப்போது பள்ளிகளுக்கு நேரில் சென்று அழைத்து வருவதும் நல்லது ,அப்போது தான் பிற மாணவர்களிடமும்,ஆசிரியர்களிடமும் , மற்ற பெற்றோர்களிடமும் பேசி என நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
நம் பிள்ளை நன்றாகத் தான் உள்ளது,நம் பிள்ளை படிக்கும் பள்ளி நல்ல பள்ளி என்று கண் மூடி தனமாக எதையும் நம்பாமல் எப்போதும் சற்று விழிப்புடன் இருப்பதே நல்லது. பிள்ளைகளுக்கு எதையும் பெற்றோர்களிடம் தயக்கமில்லாமல் பேசும் தைரியத்தை நாம் கொடுக்க வேண்டும்.
இந்த தைரியத்தை வளர்த்தால் தான் இதைப் போன்ற குற்றங்கள் ஒழியும். இந்த குழந்தைகள் தினத்தில் வாழ்த்து கூறுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் நம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி கொடுக்க நம்மால் என்ன முடியுமோ அதை செய்ய உறுதி எடுத்துக்கொள்வோம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust