அ.தி.மு.க ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடியே பத்து லட்சத்தை ஏமாற்றியதாகப் புகார் அளிக்கப்பட்டது .இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி தரப்பு மனு தாக்கல் செய்தது. ஜனவரி 7 ஆம் தேதி முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வர இருந்த நிலையில் ஜனவரி 6 ஆம் தேதி தனிப்படையினரால் கர்நாடகாவில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். ஜனவரி 7 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் தமிழக அரசு கைது நடவடிக்கையில் அவசரம் காட்டியது ஏன்? என ஜனவரி 6 ஆம் தேதி விசாரணையின் போது கேள்வி எழுப்பி இருந்தது.
இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் அந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் முகுல் ரோத்தகி மற்றும் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். ராஜேந்திர பாலாஜி மீது 32 புகார்கள் வந்ததாகவும், அதில் இரண்டு புகார்கள் அடிப்படையில் விருதுநகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது . 2021 ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை இந்த வழக்கில் விசாரணை நடந்து வந்த நிலையில் டிசம்பர் மாதம் கைது செய்ய முயற்சி செய்த போது ராஜேந்திர பாலாஜி தலைமறைவானதாகத் தமிழக அரசு தங்களில் வாதத்தில் கூறியிருந்தது.
அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் டேவ் " 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை விசாரணைக்கு ஆஜராகும் படி ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு காவல்துறை சம்மன் எதுவும் அனுப்பவில்லை . அதே போல ராஜேந்திர பாலாஜி நேரடியாக யாரிடம் பணம் பெற்றார் என்று அரசு தரப்பில் தெளிவுபடுத்தவில்லை .உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் ராஜேந்திர பாலாஜியின் உறவினர் மற்றும் வழக்கறிஞர் அலுவலர்களுக்குச் சென்று காவல்துறை வரம்பு மீறி விசாரணை செய்து இருக்கிறார்கள் என்று வாதிட்டனர்.
இந்த வழக்கு விசாரணையின் தலைமை நீதிபதி ரமணா,சூர்யா காந்த் , ஹிமா கோலி ஆகியோர் தமிழக அரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து இருக்கிறார்கள். ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கி தர 2 லட்சம் முதல் 30 லட்சம் வரை பணம் பெற்றதாகத் தமிழக அரசு சொல்கிறதே தவிர யாரிடம் நேரடியாகப் பெற்றார் என்பதை காவல்துறை நிரூபிக்கத் தவறி இருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த கைது நடந்தது போல உள்ளது. அதே போல ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. வழக்கு நிலுவையிலிருந்தும் அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? மேலும் உச்ச நீதிமன்றத்திலிருந்து வந்த உத்தரவுகளை மீறி வரம்பு மீறி காவல்துறை செயல்பட்டு இருக்கிறது.இதன் காரணமாகத் தமிழகக் காவல்துறை மீது "நீதிமன்றம் விசாரணைக்கு" Judicial Enquiry உத்தரவிட நேரிடும் எனவும் தலைமை நீதிபதி ரமணா குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் வாங்கப்பட்ட பணம் தொடர்பாக பதிலளிக்கத் தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கியும் கூட உங்களால் பதிலளிக்க முடிவில்லை. ஆகஸ்ட் மாதம் முதல் சம்மன் எதுவும் வழங்காமல் அனுமானத்தின் அடிப்படையில் கைது செய்யக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர் .இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட விருதுநகரில் சப்-ஜெயில் இருக்கும் போது ஏன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் எதற்கு 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சி சிறைக்கு ராஜேந்திர பாலாஜி மாற்றப்பட்டார் எனவும் நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்
பாதுகாப்பு காரணங்களால் மதுரை சிரையிலிருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டதாகத் தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் பின்னர் கொரோனா காரணங்களால் மாற்றப்பட்டதாகத் தெரிவித்தது. முன்னாள் அமைச்சருக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்ததா? யாரால் அச்சுறுத்தல் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள். பிரச்சனை சிக்கலாக இருப்பதாகவும், காவல்துறை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்தனர். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி கடும் குற்றம் புரியாத கைதிகளை விடுவிக்கக் கூறி நீதிமன்ற உத்தரவுகள் இருக்கும் போது அதைப் பின்பற்றாமல் சிறைகளைத் தமிழகக் காவல்துறை நிரப்பி வைத்துள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜி வழக்கறிஞர் தரப்புக்குச் சம்மன் கொடுக்காமல் அடாவடியாக காவல்துறை செயல்படுகிறதா எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறது.
இந்த நிலையில் 4 வாரங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள காவல்நிலையத்தின் எல்லைக்கு உட்பட்டு ராஜேந்திர பாலாஜி தங்க வேண்டும் , பாஸ்போர்ட்டை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்த வழக்கு தொடர்பாக 3 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.