பாகிஸ்தான் வாழ் தமிழர்களின் வரலாறு - அட்டகாச தகவல்கள் இதோ

பாகிஸ்தானில் தமிழர்களா என்கிறீர்களா? ஆம், ஆதி தமிழன் பாகிஸ்தானில் வசிக்கிறான். பாகிஸ்தானில் இருக்கும் பலுச்சிகள், திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பேசும் மொழியானது திராவிட மொழி என்கிறது ஓர் ஆய்வு.
பாகிஸ்தான் தமிழர்கள்
பாகிஸ்தான் தமிழர்கள்Facebook

உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானிலும் சிறு அளவில் தமிழ் மக்கள் வாழ்வது நம்மில் பலருக்கும் அதிசயமாக இருக்கும்.

பாகிஸ்தானில் தமிழர்களா என்கிறீர்களா? ஆம், ஆதிதமிழன் பாகிஸ்தானில் வசிக்கிறான். பாகிஸ்தானில் இருக்கும் பலுச்சிகள் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பேசும் மொழியானது திராவிட மொழி என்கிறது ஓர் ஆய்வு.

நாம் இந்தக் கட்டுரையில் அவர்கள் குறித்து பேசவில்லை. நான் பேசுவது இங்கிருந்து புகம்பெயர்ந்த தமிழர்கள் குறித்து. எளிமையாக சொல்ல வேண்டுமானால், மதராஸ் தமிழர்கள் குறித்து.

பாகிஸ்தான் தமிழர்கள்
பாகிஸ்தான் தமிழர்கள்Facebook

இந்திய பிரிவினை

1947 சுதந்திரத்திற்கு பிறகு சிறு அளவிலான தமிழ் முஸ்லீம்கள் கராச்சியில் தஞ்சம் புகுந்தார்கள். பின்னர் அவர்கள் உருது பேசும் முஹாஜீர் சமூகத்துடன் கலந்தார்கள். ஆனால் 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே, பிரிட்டிஷ் ஆட்சியின்போது வேலை தேடி தமிழ் மக்கள் கராச்சி சென்றிருக்கிறார்கள். இலங்கை உள்நாட்டுப் போரின் போது இலங்கை தமிழ் மக்கள் சிலரும் அங்கே சென்றிருக்கிறார்கள்.

1947ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் தற்போதைய இந்தியாவின் தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாண தலைநகர் கராச்சி உள்ளிட்ட நகரங்களில் குடியேறியதாக ஆய்விதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இன்று வரை இந்த தமிழ் மக்கள் தமது கலாச்சாரத்தை இழக்காமல் வாழ்வது ஆச்சர்யம் தருகிறது. ஆவணங்களின் படி 1947 ஆம் ஆண்டில் அப்போதைய மதராஸ், மைசூர் உள்ளிட்ட மாகாணங்களில் இருந்து சுமார் 18,000 பேர் பாகிஸ்தான் சென்றதாக தெரிகிறது. அதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கராச்சி நகரில் குடியேறினர். இவர்களில் சிலர் நம்மிடம் பேசியதில் இருந்து அவர்களது வரலாறும், நடப்பும் புரிந்து கொள்ள முடிகிறது.

பாகிஸ்தான் தமிழர்கள்(ஸித்தரிப்பு)
பாகிஸ்தான் தமிழர்கள்(ஸித்தரிப்பு) Pexels

தமிழர் என்பதில் பெருமை

இன்றும் வயதானவர்கள் நன்கு தமிழ் பேசுகிறார்கள். இவர்கள் யாரும் தமது பூர்விக இடங்களைத் தேடி இதுவரை தமிழகம் வந்தது இல்லை. ஆனால் பாகிஸ்தானில் வாழ்ந்தாலும் தம்மை தமிழர் என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

“உண்மையில் நாங்கள் தமிழர் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஆதிவேர் எம் தமிழினத்துடையது என்பது எங்களை கர்வம் கொள்ள செய்கிறது,” என்கிறார் பொதுவில் தமது அடையாளத்தை வெளியிட விரும்பாத ஒரு முதியவர்.

"கராச்சியில் இப்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர,” என்று கூறும் அவர், . அதிகபட்சமாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் "மதராஸி பரா" (மதராஸ் பேட்டை) என்ற பகுதியில் வசிப்பதாக நம்மிடம் தெரிவிக்கிறார்.

தமிழ்நாடு - மும்பை - கராச்சி

தமிழ்நாட்டில் இருந்து வேலை தேடி மும்பைக்கு சென்ற தமிழர்கள் இன்றும் கணிசமாக இருக்கிறார்கள். இவர்களின் முன்னோடிகள் மும்பையிலிருந்து வேலை நிமித்தம் கராச்சிக்கும் சென்றுள்ளார்கள். கராச்சியில் மட்டும் 2000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர். மதராஸி பரா (மதராஸ் பேட்டை), டிரி சாலை, கோரங்கி ஆகிய கராச்சி நகரின் பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். சிலர் கராச்சிக்கு அருகேயுள்ள நகரங்களில் பணி நிமித்தமாக வாழ்கின்றனர்.

கராச்சி சென்ற காலம் தொட்டு, அங்குள்ள ஜின்னா அரசு மருத்துவக் கல்லூரியில் சுகாதாரப் பணியாளர்களாக தமிழ் மக்கள் வேலை செய்கிறார்கள். இந்தக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகில்தான் தமிழர்களின் குடியிருப்பும் உள்ளது. ஒரு சிலர் அங்குள்ள தொழிற்சாலைகளில் என்ஜினியர்களாகவும், அரசுப் பணிகளிலும் இருக்கின்றனர்.

பாகிஸ்தான் தமிழர்கள்
எரியும் இலங்கை : தீவுநாட்டை சிதைத்த ராஜபக்சே சகோதர்களின் கதை
பூஜைகள்
பூஜைகள்Pexels

மாரியம்மன் கோயில் திருவிழா

கராச்சியின் மதராஸி பரா பகுதியில்தான் பெரிய மாரியம்மன் கோவில் ஒன்று இருந்தது. கராச்சியின் பெரும்பாலான தமிழர்கள் இந்து மதத்தையே பின்பற்றுகிறார்கள். மாரியம்மன் கோவிலில் பொங்கல், ஆடி மாத வழிபாடு, தைப்பூசம் எல்லாம் வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. அங்கே காவடி எடுத்து அலகு குத்தும் பழக்கமும் கடைபிடிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் தமிழர்கள் தமக்குள் தமிழிலும் மற்ற இடங்களில் உருது மொழியிலும் உரையாடுவது வழக்கம். அங்கே குடியேறிய முதலிரண்டு தலைமுறை தமிழர்கள் சரளமாக தமிழில் எழுத, பேச முடிந்தாலும் தற்போது அந்த நிலை மோசமாகி வருகிறது என வருந்துகிறார் ஒரு தமிழ் முதியவர்.

தேயும் தமிழ் பழக்கம்

காரணம், தமிழ்ப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக இல்லை. பெற்றோரே பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தால்தால் உண்டு. அப்படித்தான் முதலிரண்டு தலைமுறையினர் தமிழ் பேசுவதை காப்பாற்றினர். காலப்போக்கில் அடுத்தடுத்த தலைமுறைகளில் இந்தப் பழக்கம் குறைந்து தற்போது குழந்தைகள் தாய்மொழி தமிழை அறிந்து கொள்ளும் வாய்ப்பு குன்றியிருக்கிறது.

சில தன்னார்வலர்கள் பல ஆண்டுகளாக மாரியம்மன் கோவிலில் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். ஆனால் இதில் அனைவரும் பங்கேற்பதில்லை.

ஆரம்ப கால தமிழர்கள் உடலுழைப்பு வேலைகளை பார்த்தார்கள். தற்போது நல்ல கல்வி பெருவதற்கான சமூக சூழல் அதிகரித்துள்ளது. உயர் கல்வி படிப்பதற்கு நாட்டம் அதிகரித்து வருவதால் தமிழ் கல்வி தேவையற்றதாக மாறிவிட்டது. அப்படியே விரும்பினாலும் அங்கே பள்ளி, கல்லூரிகளில் தமிழ் படிக்க வாய்ப்பில்லை. இதனால் எதிர்காலத்தில் தமிழர்கள் தமிழ் பேசுவார்களா என்பது சந்தேகம்தான். இதை சரிசெய்ய அரசும், தன்னார்வலர்களும் முயல வேண்டும். தமிழக அரசு கூட இந்த விசயத்திற்கு ஏதாவது செய்ய இயலுமா என்று யோசிக்க வேண்டும்.

திருமண உறவு

பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு (இந்தியாவுக்கு) வருவதற்கு விசா எனும் நுழைவு அனுமதி பெறுவதில் கெடுபிடிகள் உள்ளன. இது சீராக்கப்பட்டால் பாகிஸ்தான் தமிழர்கள் தமது பூர்வீக இடங்களை பார்வையிட தமிழகம் வருவார்கள் என்று சிலர் கூறுகின்றனர்.

ஒரு சிலர் தமிழகம் சென்று வந்தாலும் அவர்கள் அனைவரும் நிரந்தரமாக தமிழகம் திரும்பும் எண்ணம் இல்லை. ஏனெனில் பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்த முதல் தலைமுறையினரில் பெரும்பாலானோர் தற்போது இல்லை. பல ஆண்டுகளாக பாகிஸ்தான் தமிழர்களுக்குள்ளேயே மண உறவு நீடிக்கிறது. இதனால் இவர்களுக்கு தமிழகத்தில் உறவு என யாருமில்லை. மேலும் கராச்சி தமிழர்கள் வேற்று மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்களை மணப்பது அதிகரித்து வருவதால் அடுத்த சந்ததியினருக்கு தமிழ் செல்லுமா என்பது கேள்விதான் என்கிறார்கள் அங்குள்ள தமிழர்கள்.

மேலும் வேலை, திருமணம் போன்ற காரணங்களால் கராச்சியிலிருந்து பாகிஸ்தானின் மற்ற பகுதிகளுக்கு குடியேறுவதும் தமிழர்களிடம் தற்போது அதிகரித்துள்ளது.

எனினும் இக்கணம் வரை பாகிஸ்தான் தமிழர்கள் பல வகைகளில் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர். அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற கவலையும் அவர்களுக்கு இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com