அடர் கருப்பு நிறத்தில் மஞ்சள் கொம்பும் பெரிய திமிலுமாக சில வினாடிகள் வாடிவாசலில் நின்று முறைத்தது சசிகலா-வின் காளை. அப்பாதிருந்தே பாதி இளைஞர்களுக்கு அந்த காளையை அடக்கும் எண்ணம் தோய்ந்து விட்டது. அப்படியான மிரட்டல் அந்த பார்வையில்!
வாடிவாசலிலிருந்து காளை பாய சிலர் வேலி மீது ஏறிக்கொண்டனர். இன்னும் மற்றவர்கள் ஒதுங்கிக்கொள்ள ஒரே ஒருவர் மட்டும் காளையின் மீது கைவைத்தார். ஆனால் அவரும் தொட்டுத் தான் பார்க்க முடிந்தது. திமிலிலிருந்து ஆரஞ்சு புகை பறக்கப் பாய்ந்து ஓடியது காளை!
திமிலில் கருப்பு, உடலில் வெள்ளை மஞ்சள் பூசிய கொம்புடன் வாடிவாசலில் தயங்கி நின்றது காளை. வெளி வந்ததும் மூன்று இளைஞர்கள் அதன் மீது ஏறி விழ லேசாக உடலை ஆட்டியது இரண்டு பேர் வழுக்கி விழ அடுத்த துள்ளலில் மூன்றாவது ஒருத்தர் குப்புற விழுந்தார். வெற்றிகரமாக வீரர்களை வென்று களத்தைத் தாண்டியது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதன்முறையாக ஒரு வீரருக்கு கார் வழங்கப்படுகிறது. வழங்குவது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். கார் வெல்லும் உற்சாகத்துடன் களத்தில் நிற்கின்றனர் மாடுபிடி வீரர்கள்!