அதிமுக பொதுக்குழு வரலாறு: அன்று முடிக்க சொன்னார்,இன்று வெடிக்க சென்றார் - OPS vs EPS அலசல்

பாதியிலேயே கூட்டத்தைவிட்டு வெளியேறினார், பன்னீர்செல்வம். அவர் வந்தபோது வசைபாடியதைத் தாண்டி, தண்ணீர்க் குடுவைகள் எல்லாம் வீசப்பட்ட தகவல் அங்கு யாரின் கை ஓங்கியிருந்தது என்பதைக் காட்டுகிறது.
Edappadi Palanisamy
Edappadi PalanisamyTwitter
Published on

அதிமுக என்றாலே அதிரடியும் அசாதாரணமுமான கட்சி என்பது, இன்றைக்கு மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. ஜெயலலிதா தலைமை வந்தது முதலே இது அந்தக் கட்சியின் இயல்பான குணமாக ஆகிவிட்டது. சென்னையை அடுத்த வானகரத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திலும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை.

பலமான எதிர்க்கட்சியாக இருந்த நிலை மாறி, பற்றைக் கிடங்கு போல ஆகிப்போன கட்சியில், ஒற்றைத்தலைமை என சிலர் பற்றவைக்க, ஒரு வாரமாக சரவெடிபோல காட்சிகள் அரங்கேறின அதிமுகவில்! மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் இரண்டு முறை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அந்த கோதாவிலேயே வண்டியை ஓட்டிவிட முடியும் என நம்பி, தன்பாட்டில் நாள்களை நகர்த்திவந்தார்.

OPS-EPS
OPS-EPS

எதிரணி எடப்பாடி பழனிசாமியோ களத்தில் தீயாய் வேலைசெய்திருக்கிறார் போல. முக்கால்வாசி அதிமுகவினர் அவருடைய பக்கம்தான் என்பதான ஒரு பலமான கருத்து உருவாகிவிட்டது. ஒரு வார நாடகத்தில் நடைபெற்ற உச்சபட்சக் காட்சிகள் பலவும் நாளைய வரலாற்றில் பேசப்படக்கூடும். பன்னீரின் பாசமிகு சகாவாக வலம்வந்த கூவத்தூர் காலத்து கூட்டாளி மாஃபா பாண்டியராஜன், தடாலடியாக, பழனிசாமியைப் பார்த்து பாதம் பணிந்து ஆசி வாங்கியதெல்லாம்... பெரிய அப்ளாஸ்தான்!

இருவர் தரப்பும் நீதிமன்றப் படியேறியபோதும் பொதுக்குழு நடப்பதில் தடை ஏதும் வரவில்லை. நேரலைகள் பரபரப்பை மேலும் கூட்ட, படையுடன் வந்த பன்னீர்செல்வமும் பழனிசாமியும் மேடை ஏறினர். ஆனால் பாதியிலேயே கூட்டத்தைவிட்டு வெளியேறினார், பன்னீர்செல்வம். அவர் வந்தபோது வசைபாடியதைத் தாண்டி, தண்ணீர்க் குடுவைகள் எல்லாம் வீசப்பட்ட தகவல் அங்கு யாரின் கை ஓங்கியிருந்தது என்பதைக் காட்டுகிறது.

General Body Meeting
General Body Meeting

இந்த மண்டபம் எத்தனையோ அதிமுக பொதுக்குழுக்களைக் கண்டிருக்கிறது. ஜெயலலிதா எனும் மனிதர் நடமாடியவரைக்கும் பெரும்பாலான பொதுக்குழுக் கூட்டங்கள் இங்குதான் நடந்திருக்கின்றன. அப்போதைய காட்சிகளே தனி ரகம்தான். மேடையில் அவர் மட்டுமே முன்வரிசையில் ஒரு மகாராணியைப் போல வீற்றிருப்பார்.

அவருக்குப் பக்கவாட்டில் தலைவர்களுக்காக இருக்கும் நாற்காலிகள் இரண்டு இடம் தள்ளியேதான் இருக்கும். மேடையில் அவருக்கு அடுத்து அதிகபட்சம் இரண்டு வரிசைகளே இருக்கும். பொதுக்குழுத் தீர்மானங்கள் எல்லாம் சிவகாசி அச்சகத்திலே அச்சிடப்பட்டதைப்போல தனிமாதிரியான சிறு புத்தகம்போல இருக்கும்.

தீர்மானத்தை முன்மொழிவது, வழிமொழிவது எல்லாம் அவ்வளவு பக்காவாக இராணுவக் கட்டுப்பாட்டுடன் நடக்கும். அல்லது நடப்பதாகக் கருதப்படும். முதலமைச்சராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஜெயலலிதா காலத்துப் பொதுக்குழுவின் பொதுவான நடப்புகள் இப்படித்தான் இருக்கும்.

ஜெயலலிதா மறைந்தார். அவர் இல்லாத முதல் பொதுக்குழு, இதே வானகரம் மண்டபத்தில், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற்றது.ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிப்பது என முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றிய நாள், அது.

அப்போது முதலமைச்சராக இருந்தார், ஓ.பன்னீர். அம்மா மறைந்துவிட்டாரே என கண்ணீர்விடாமல் யாரும் பேசவில்லை, பன்னீர் உள்பட.

Edappadi Palanisamy
அதிமுக - பாஜக கூட்டணி பிரிவு, நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் பாஜக

அன்றைய உச்சகட்டத் தீர்மானத்தை நிறைவேற்றி, தன்னுடைய அசைன்மெண்டையும் நிறைவேற்றிய ஓ.பன்னீர்செல்வம், நேரடியாக போயஸ் தோட்டத்துக்குச் சென்றார். சசிகலாவிடம் பொதுக்குழுத் தீர்மானத்தை ஒப்படைத்தார். மீண்டும் சம்பிரதாயத்துக்குகூட அவர் மீண்டும் வானகரத்துக்குச் செல்லவில்லை. பொதுக்குழுவை முடித்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டார்.

வழக்கமாக நிர்வாகிகள் சாப்பிட்டுவிட்டு கருத்தையும் கேட்டுவிட்டு பொதுக்குழு மண்டபத்திலிருந்து புறப்படுவார், ஜெயலலிதா. அவரில்லாத முதல் பொதுக்குழுவில் சோகமயம் ஆகிவிட, உணவுக்கூடத்தில் பேச்சுமூச்சைக் காணோம்.

General Body Meeting with Ex CM Jayalalitha
General Body Meeting with Ex CM Jayalalitha

கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா, ஆட்சிக்கும் தலைமைக்கும் முயன்றார். ஊழல் வழக்கு தண்டனை தேடிவர, சிறைவாசம். அதுவே வனவாசமாகவும் ஆகிவிட்டது. பன்னீர் ஆட்சி மாறி, பழனிசாமி வந்தார். பன்னீர் தரப்பு எதிரானது. பிறகு இரட்டைக் குழல் துப்பாக்கியாக மாறி, கட்சியை ஓட்டிவந்தனர்.

கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுக தலைமைக்கழகத்தில் ஒரு செயற்குழுக் கூட்டம். அதிலேயே இரண்டு பேருக்கும் முட்டிக்கொண்டது. தேர்தல் நெருங்கப்போன சமயத்தில் சசிகலாவை சின்னம்மா என வாஞ்சையோடு குறிப்பிட்டார், பழனிசாமி.

நெஞ்சத்திலிருந்து நெருப்பை உமிழ்ந்ததைப் போல, மன்னார்குடி வகையறாவைப் பேசினார், பன்னீர்செல்வம்.

OPS Meets Sasikala
OPS Meets Sasikala

சிறையிலிருந்து வந்த சசிகலா மீண்டும் அதிமுகவிலா எனப் பேச்சு எழுந்தது. கட்சிக்குள் காட்சிகள் மாறின. சசிகலாவை அறவே கூடாது என நின்றார், பழனிசாமி. தேர்தல் முடிந்தது, எதிர்க்கட்சித் தலைவர் யாரென விவகாரம் வெடித்தது.

முதல் வெற்றியைப் பெற்றார், எடப்பாடி பழனிசாமி.

இடையிடையே பன்னீர்செல்வம் கட்சிக்கு லீவு போட, எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்றம் தொடர்ந்தது. மாற்றம் எதுவுமில்லாமல் ஓட்டிவிட நினைத்த பன்னீருக்கு பளீர் வைத்தியம் தந்தது, பழனிசாமி தரப்பு. மாவட்டச்செயலாளர் கூட்டத்தில் மாதவரம் மூர்த்தியை வைத்து ஒற்றைத்தலைமைத் திரியைக் கொளுத்திப்போட, பற்றிக்கொண்டது!

எந்தத் தண்ணீரையும் ஊற்றி பன்னீரால் அதை அணைக்க முடியவில்லை.

OPS- Sasikala
OPS- Sasikala

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், இதே மண்டபத்தில், பன்னீர் வருவாரா ஏதாவது சொல்வாரா என அமைச்சர்களாக இருந்த அனைவருமே காத்திருந்தார்கள். ஆனால், அவர் ரிமோட்டிலிருந்து முடிக்கச் சொன்னார், பொதுக்குழுவை!

அதே இடம்... அதே பொதுக்குழு... அதே பன்னீர்செல்வம்... மனம் புழுங்கி அதிருப்தி கோஷமிட்டு வெளியேற... தண்ணீர் பாட்டிலை வீசி அவரை வழியனுப்பி வசைபாடியது, அதிமுக கண்டிராத அசாதாரணம்.

இரண்டாவது முறையாக எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்றம் கிடைத்திருக்கிறது! அடுத்த கட்டம் என்னவாகும் என்பது இப்போதைக்கு இன்னொரு சஸ்பென்ஸ்... நீதிமன்றத்தின் உத்தரவால்!

Edappadi Palanisamy
அதிமுக பொதுச் செயலாளர் பதவி: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் - சசிகலா அதிரடி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com