420 மனிதர்கள், 24 கோயில், செருப்பு அணியாத கால்கள்: கொடைக்கானல் அருகே ஓர் ஆச்சர்ய கிராமம்

கொடைக்கானலுக்கு அருகிலிருக்கும் இந்த ஊருக்குள் யாரும் செருப்புடன் நுழையக் கூடாது, மது அருந்தக் கூடாது என கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இந்த ஊரை ஆன்மிக பூமியாக கருத இவற்றைத் தவிர மற்றொரு காரணமும் இருக்கிறது.
வெள்ளகவி
வெள்ளகவி News Sense

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளமான கொடைக்கானலுக்கு மிக அருகில் இருக்கிறது இந்த ஆன்மிக பூமி. பெரிதாக வெளியில் தெரியாத வெள்ளகவி கொடைக்கானல் மலையிலிருந்து 7 கிலோ மீட்டர் கீழே அமைந்திருக்கிறது. சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க காபி வாசமும் ஏல வாசனையும் ஊருக்குள் அழைத்துச் செல்கிறது.

400-600 ஆண்டுகளுக்கு முன்னர் கொடைக்கானல், வில்பட்டியில் இருந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுயம்புவாகத் தோன்றிய வைரவர் சிலையை மலைக்கு மேல் எடுத்துச் சென்றனர். அவர்களுக்கு வாழ வழிகாட்டுவதாக கனவில் கூறிய வைரவர் அவர்களை அழைத்துச் சென்றார் என்கின்றன வாய்வழிக் கதைகள்.

ஆனால் போகும் வழியில் அவர்கள் கள் இறக்கி குடித்தனர். அதனால் கோபமடைந்த வைரவர் அந்த இடத்திலேயே நிலை கொண்டார். அங்கு அவருக்கு கோவில் எழுப்பப்பட்டது. வெள்ளகவி ஊரும் உருவானது.

வெள்ளகவிக்கு பச்சை நிரம்பிய ஒத்தையடி பாதை வழியாக நுழையும் போது பெரிய மரமொன்று வரவேற்கும். அது தான் ஊரின் எல்லை. அந்த இடத்திலிருந்து ஊர் மக்களும் ஊருக்கு வரும் மற்றவர்களும் தங்கள் செருப்புகளை கழட்டிக்கொள்ள வேண்டும். செருப்பு வைரவருக்கு உகந்தது அல்ல என்கிறார்கள் ஊர் மக்கள்.

மலைக் கிராமமான வெள்ளகவியில் தார் ரோடு கூட கிடையாது, காடுகளிலும், ஊரின் கரடு முரடான பாதைகளிலும் மக்கள் செருப்பு இல்லாமலேயே நடக்கின்றனர்.

விநாயகர் கோவில்
விநாயகர் கோவில் News Sense

வெள்ளகவி மக்களுக்கு பெரும்பாலும் குடிப்பழக்கம் இல்லை. அப்படியே குடித்தாலும், ஊருக்குள் அனுமதி இல்லை. அன்றிரவு வெளியிலேயே தங்கிக்கொள்ள வேண்டும் என்பது விதி. இந்த ஊரின் சாமிகளுக்கு போதைப் பழக்கங்கள் எதிரானவை.

வெள்ளகவியை ஆன்மிக பூமியாக கருத இது போன்ற தீவிர நடைமுறைகள் மட்டுமின்றி இன்னொரு காரணமும் உண்டு. இங்கு ஏறத்தாழ 110 குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள் 24 கோவில்களில் இருக்கும் பல தெய்வங்களை வணங்குகின்றனர்.

இந்த ஊரின் உருவாக்கம் வைரவரல் இருந்தாலும் ஊரின் நடுவிலிருக்கும் பிள்ளையார் கோவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. தவிர பன்னிரண்டு சாமி எனப்படும் பெரியசாமி மீது அளப்பரிய பக்தியுடன் இருக்கின்றனர்.

குறைந்தபட்சம் காடு, மலை வழியாக 6 கிலோ மீட்டர் பயணித்தால் தான் கொடைக்கானலுக்கோ அல்லது பெரிய குளத்துக்கோ வர முடியும். காடுகளின் நடுவில் தீவு போலிருக்கும் இந்த ஊரில் மருத்துவ வசதி கூட கிடையாது. அவசரமான மருத்துவ தேவைக்கு அல்லது பிரசவத்துக்கு தூளி கட்டி மலைமேல் தூக்கிச் செல்ல வேண்டும். இந்த கடினமான சூழலில் வசிக்கும் மக்கள் நோய் நொடி இல்லாமல் இருக்கவும், வெள்ளாமைக்காகவும் கடவுள்களையே நம்பியிருப்பதாக கூறுகின்றனர்.

ஏலம், காபி, வாழை, அவகாடோ போன்ற பயிர்களை முதன்மையாக வளர்த்து வருகின்றனர். இவற்றை தெய்வங்கள் காப்பதாக நம்புகின்றனர்.

வெள்ளகவியின் தெய்வங்கள்

வெள்ளகவியின் தெய்வங்கள் குறித்து ஊர் மக்களிடம் கேட்டறிந்தோம். ஊரின் தொடக்கத்தில் வைரவர் கோவில். அவருக்கு அருகில் பூம்பறையாண்டி. பக்கத்தில் பேச்சியம்மன், கருப்பண்ண சாமி. கொஞ்சம் உள்பக்கம் சென்றால் பூதநாச்சியம்மன்.

வைரவர் கோவில் மற்றும் பூம்பறையாண்டி கோவில்
வைரவர் கோவில் மற்றும் பூம்பறையாண்டி கோவில்News Sense

ஊரின் மற்றொரு புறத்தில் அருகருகே கருப்பன்ன சாமி, மதுரவீரன் கோவில்கள். அங்கிருந்து ஊருக்குள் வந்தால் முனீஸ்வரன். அங்கேயே மற்றொரு விநாயகர் கோவிலும் இருக்கிறது.

புதுக்கோட்டையை ஆண்ட மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான் கட்டிய முருகன் கோவில். அங்கிருந்து கீழே வந்தால் ஊரின் ஒவ்வொரு தெருவிலும் ஆங்காங்கே கோவில்களைக் காண முடியும்.

வேட்டைக்காரன்
வேட்டைக்காரன்News Sense

காடுகளிலும் காவலாக தெய்வங்கள் இருக்கின்றனர். அவரவர் காடுகளில் கோவில்கள் எழுப்பியுள்ளனர். இந்த கோவில்களில் ஆண்டுக்கு ஒருமுறை விழா நடத்துகின்றனர். அப்போது பூ, பழம் வைத்து வணங்குவதுடன் சிலர் அபிஷேகமும் செய்கின்றனர்.

அடுக்கம், மூலையூர், வடகுறிஞ்சி, வில்பட்டி உள்ளிட்ட பன்னிரண்டு ஊர்கள் இணைந்து வணங்கும் சாமி, கொப்பேரன் பன்னிரெண்டு தெய்வம். பெரிய சாமி எனக் கூறப்படும் இந்த தெய்வம் சிவனின் அவதாரங்களில் ஒன்று. இந்த சாமிக்கு பங்குனியில் எடுக்கப்படும் திருவிழா வெள்ளகவியில் பிரசித்தி பெற்றது.

பேச்சியம்மன்
பேச்சியம்மன்News Sense

பங்குனி திருவிழா

பங்குனித் திருவிழாவுக்கு வடகரைப்பட்டியில் இருந்து பழங்குடி மக்கள் வந்து மேளம் அடித்தால் மட்டுமே சாமி வரும் என்பது அவர்களின் நம்பிக்கை.

முன்னொரு காலத்தில் வெள்ளகவி மக்கள் தெய்வத்தின் வழியைப் பின்பற்றி காப்பாற்ற முடியாததால் பழங்குடி மக்களுக்கு அந்த தெய்வத்தைக் கொடுத்துவிட்டனர்.

பின்னர் மீண்டும் மக்கள் அவர்களிடம் இருந்து வாங்கிய போது, "பழங்குடி மக்கள் மேளமடித்தால் மட்டுமே நான் வருவேன்" என தெய்வம் சத்தியம் செய்துகொடுத்ததாக வாய்வழிக்கதைகள் கூறுகின்றன.

இந்த சத்தியத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின் போது வடகரைப்பட்டி சென்று பழங்குடி மக்களை அழைத்து வந்து மேளம் அடித்து வணங்குகின்றனர். இந்த மேளத்தில் மாட்டுத் தோல் பயன்படுத்தப்படாது.

ஆட்டுத்தோலில் உப்புதடவி பதப்படுத்தி மேளத்தை ஊர் மக்களே தயாரிக்கின்றனர்.

முனீஸ்வரன்
முனீஸ்வரன்News Sense

பெண்கள் வழிபாடு

இந்த ஊரில் இருக்கும் 4 கோவில்களிலேயே பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான கோவில்களில் பெண்கள் வெளியில் இருந்தே பூசாரியிடம் திருநீறு, பிரசாதம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் ஊருக்குள் தங்குவதில்லை. ஒன்றைரைக் கிலோ மீட்டர் தள்ளி வசிக்கின்றனர். அவர்கள் தூரத்தில் உள்ள ஆற்றிலேயே குளிக்கவும் செய்கின்றனர். இங்கிருக்கும் கோவில்களின் அத்தனை சமாச்சாரங்களையும் ஆண்களே பார்த்துக்கொள்கின்றனர். மாதவிடாய் வரும் பெண்கள் 4 நாட்களுக்கு வீட்டுக்குள் நுழைவதில்லை. 7 நாட்கள் வரை காடுகளுக்கு செல்வதில்லை. ஊரின் எல்லா புறத்திலும் கோவில்கள் இருப்பதால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் வெளியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனாலேயே யாரும் செருப்பு அணிவதும் கிடையாது.

பெண்கள் வணங்கும் முக்கிய தெய்வமாக பேச்சியம்மன் இருக்கிறார். ஆடி மாதத்தில் மாவிளக்கு வைத்து பேச்சியம்மன் வழிபாடு நடைபெற்று வருகிறது.

பூம்பாறையாண்டி
பூம்பாறையாண்டிNews Sense

முன்னோர் வழிபாடு

வெள்ளகவியில் முன்னோர் வழிபாடும் இருக்கிறது. 1800களின் பிற்பகுதியில் வாழ்ந்த பூம்பறையாண்டி என்ற லெவிஞ்சி துரைக்கு வைரவர் கோவிலுக்கு அருகிலேயே கோவில் இருக்கிறது.

கொடைக்கானலை உருவாக்கிய லெவிஞ்சி துரையின் பெயர் தான் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் மதுரை மண்டலத்தின் கலெக்டராகவும் இருந்தார்.

ஆங்கிலேய அரசின் அதிகாரமிக்க பொறுப்பிலிருந்த துரை வெள்ளகவியை பார்வையிட்டார். அந்த காலத்தில் இப்போதைய கொடைக்கானலுக்கு வெள்ளகவியைத் தாண்டி தான் செல்ல வேண்டும்.

ஒரு முறை லெவிஞ்சி துரை தனது கட்டை விரலை தூரத்தில் இருந்து வில்லால் அடிக்க முடியுமா என சவால் செய்ததாகவும், அந்த சவாலில் பூம்பறையாண்டி வென்றார் எனவும் சொல்லப்படுகிறது.

அப்போது பூம்பறையாண்டியின் திறமையை மெச்சித்த துரை தனது பெயரை பட்டமாக வழங்கினார் என்று கூறப்படுகிறது.

கோவிலின் உள்ளே சீறுடை அணிந்து துப்பாக்கியுடன் நிமிர்ந்து நிற்கிறார் லெவிஞ்சி துரை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com