
முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக மு.க.ஸ்டாலின் கடந்த 24-ம் தேதி துபாய் சென்றார். அங்கு, துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் தமிழக அரங்கினைத் திறந்துவைத்தவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.நேற்று மாலை அபுதாபியில் நடந்த `நம்மில் ஒருவர் நம்ம முதல்வர்' நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பிறகு தனி விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினார். சென்னையில், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. தமிழகத்துக்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் விதமாகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரூ.6,100 கோடியில், 6 முக்கிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்” என்றார்.
மத்திய அரசைக் கண்டித்து தொழிலாளர்களின் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் இன்றும் தொடர்கிறது. தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக வங்கி பணிகள் முடங்கின.பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் அவதிக்குள்ளானர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவைக் கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தைத் தொடர வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும், உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய போராட்டம் நேற்று நடைபெற்றன.தமிழகத்தில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., எச்.எம்.எஸ். உள்பட 10 தொழிற்சங்கங்கள் இந்த பொது வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. காப்பீடு, எண்ணெய் நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள் போன்ற பொதுத்துறை ஊழியர்கள் சம்மேளனங்களும் பங்கேற்றன. இன்றும் இந்தப் போராட்டம் தொடர்கிறது.
சமீபத்தில் நடந்துமுடிந்த பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் முறையாக பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்திருக்கிறது. புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பகவந்த் மான், பஞ்சாபில் அதிரடித் திட்டங்களை அறிவித்துவருகிறார். இதுகுறித்து கூறிய அவர், "பஞ்சாப்பில் மக்களுக்கு வீட்டுக்கே சென்று நல்ல தரமான ரேஷன் பொருட்களை வழங்க அரசு முடிவுசெய்திருக்கிறது. எனவே, இனி ரேஷன் கடைகளில் வரிசையில் நிற்கவோ, மற்ற வேலைகளை ஒத்திவைக்கவோ தேவையில்லை. அரசு அதிகாரிகள், பொதுமக்களைத் தொலைப்பேசியில் தொடர்பு கொள்வார்கள். மக்களுக்கு வசதியான நேரத்தில், வீட்டுக்கே வந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இந்த வசதி கட்டாயம் அல்ல. விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பெற்றுக்கொள்ளலாம். முழு விவரங்களும் விரைவில் அறிவிக்கப்படும்." என்றார்
உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்திய போர் தாக்குதலால் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
மேலும், அங்குள்ள உயர்கல்வி படித்துவந்த வெளிநாட்டு மாணவர்கள் போரால் பரிதவித்து தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பினர்.
பல்வேறு உயர் கல்வி படித்துவந்த 20,000 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். அதில் பலரும், மருத்துவ மாணவர்கள்.
நாடு திரும்பிய மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது. இதுகுறித்து மத்திய அரசும் ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் போர் காரணமாகப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பிய மாணவர்களை தங்கள் நாட்டில் படிப்பைத் தொடர வைக்க ரஷ்யா தெரிவித்திருக்கிறது. இதற்காக, ரஷ்ய பல்கலைக்கழகங்கள் சிலவும் இந்திய மாணவர்கள் குறிப்பாக மருத்துவ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அணுகியுள்ளன.கூடுதல் கட்டணம் இல்லாமல், நுழைவுத்தேர்வு இன்றி தங்கள் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்வதாக ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவித்து வருகிறது. இலங்கையின் பொருளாதாரம், சுற்றுலாத் துறையை மட்டுமே பெரிதும் சார்ந்திருந்தது. சுற்றுலாத் துறை கொரோனா தொற்றால் 90 சதவிகித பாதிப்புக்குள்ளானது. அன்னியச் செலாவணி பொருட்களின் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக இலங்கையில் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர். இதன் காரணமாக இந்தியாவிடம் இலங்கை அரசு கடனுதவி கேட்டிருந்தது. இதன் காரணமாக இலங்கைக்கு ஒரு பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7,580 கோடி) கடன் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது மத்திய அமைச்சர்கள் பரிசீலனைக்குப் பிறகு கையெழுத்தானது. தற்போது, அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்காக இந்தியாவிடம் மேலும் 1 பில்லியன் டாலர் கடனுதவியை இலங்கை அரசு கோரியுள்ளது.
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின. இரண்டுமே நடப்பு ஐ.பி.எல் போட்டியில் அறிமுகமாகிய அணிகள் இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது. இதன் மூலம் ஐ.பி.எல்-லில் தனது முதல் வெற்றியைக் குஜராத் டைட்டன்ஸ் அணி பதிவு செய்தது. இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.