Valentine's day : நா.முத்துக்குமார், கல்யாண்ஜி, சச்சிதானந்தம், மனுஷ், வெய்யில் கவிதைகள்

வாழ்க்கையில் ஒரு முறையேனும் நீங்கள் காதலை சந்தித்தே தீருவீர்கள். அப்படியான உங்கள் பிரியத்துக்கு உரியவரை சந்தித்து, நீங்கள் பேச்சற்று நிற்கும் போது இந்தக் கவிதைகள் துணை நிற்கட்டும்.
Valentines Day

Valentines Day

Pexels

Published on

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,

அவளைக் கல்லினுள்ளிருந்து

உயிர்ப்பிப்பது என்று பொருள்.

அடிமுதல் முடிவரை காதலால் நீவி

சாபமேற்று உறைந்து போன ரத்தத்தில்

கனவுகளின் சூடேற்றுவது என்று பொருள்.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,

கரியும் எண்ணெய்ப் பிசுக்கும் கலந்த அவளது பகலை

சொர்க்கத்து மகரந்தம் சுவாசிக்கின்ற

வானம்பாடியாக மாற்றுவது,

இரவில் அத்தளர்ந்த சிறகுகளுக்கு ஓய்வு தர

தோள் குனிந்து கொடுக்கும்

தளிர் அடர் மரமாக மாறுவதாகும்.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,

காற்றும் மழையும் நிறைந்த கடலில்

மேகங்களின் கீழே புதியதோர் பூமியைத் தேடி

காலம் செலுத்துதல் என்று பொருள்.

நமக்குச் சொந்தமான வீட்டு வாசலில்

முளைத்த ஒரு மலர்ச்செடியை

யாரும் இதுவரை கண்டிராத கடற்கரையில்

கொண்டுபோய் நட்டுவளர்த்தல் என்று பொருள்.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,

தன் தசைநார்களின் ஆற்றல் முழுவதையும்

ஒரு சௌகந்திகப் பூவின் மென்மைக்குக்

கைமாற்றம் செய்து கொள்வதாகும்.

மணிமுடியும் ராணுவ உடையும் கழற்றியெறிந்து

மற்றொரு வானம் கடந்து

மற்றொரு வீட்டிலுள்ள

காற்றிற்கும், மற்றொரு நீருக்கும்

தன் தசையை விட்டுக்கொடுப்பதாகும்.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,

அவளுடைய பழமையான காயங்களிலிருந்து

சூரிய கிரணம் போல் ஒரு வாளை உருவாக்க

அவளுக்கு உதவுவதாகும்.

பின்னர் இரத்தம் வடிந்து தீரும் வரை

அக்காயத்தில் நம் இதயத்தை அழுத்திக் கிடப்பதாகும்.

நான் ஒரு பெண்ணையும் காதலித்ததில்லை.

- சச்சிதானந்தம்

கதிர்பாரதி

ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்

வேட்டி மட்டுமே உடுத்தும் மாமனுக்கு

வாக்கப்பட்ட அத்தையொருத்தி

தன் மனசுக்குள் மடித்துவைத்திருக்கிறாள்

பெல்பாட்டம் பேண்ட் ஒன்றை.

யாருமற்ற பொழுதுகளில்

அதை வெளியே எடுத்து

உதறி

நீவிவிட்டு

மீண்டும் மடித்து வைத்துக்கொள்கிறாள்.

அப்போது மட்டும்

மிகச் சன்னமாக ஒலிக்கவிடுவாள்

யெஸ் ஐ லவ் திஸ் இடியட்

ஐ லவ் திஸ் லவ்வபிள் இடிய்யயட்

பாடலை.

மற்றபடி

மாமனுக்கு மூன்று பிள்ளைகள் பெற்றிருக்கிறாள்

அதிலொன்று இரட்டைப் பிரசவம்.

- கதிர்பாரதி

விடைபெறல்

கொஞ்சம் இளைப்பாற

அவன் பார்த்தான்

அவளது நாணம் சிவந்தது

அவள் பார்த்தாள்

அவனது ஆண்மைக்கு வேர்த்தது.

அப்போது சிணுங்க ஆரம்பித்த மழை

பிறகு

மழைத்து

கிளைத்து

சடைத்து

இப்போது வரை

வெளுத்துவாங்குகிறது

என்னிலிருந்து கோடை

விடைக்கொண்டு போனது

இப்படித்தான்.

-கதிர்பாரதி

சக்தி தமிழ்ச்செல்வன்

சக்தி தமிழ்ச்செல்வன்

NewsSense

காதலென்பது...

விடுபட்டுப்போன

பிரியத்தின்

சுவடாய்

கல்லறையில் உருகிநிற்கும்

நினைவுதின மெழுகுக்கூம்பல்...

காதலென்பது...

வனாந்தரத்தில் தன் நிழலை

தானே துரத்தும்

சிறுவனின் மூச்சிரைப்பு. -

மட்கிப் போகாத

சுடுகாட்டுக் கோரிச் சேலையின்

கத்திரிப் பூ நிறம்

காதலென்பது...

கூலிஉயர்வு போராட்டத்தில்

லத்திகள் கூறுபோட்ட

கறுப்புத் தோலை இழுத்துக்கட்டும்

தர்மாஸ்பத்திரியின் நரம்பு!

காதலென்பது...

நேசத்துக்காய் பலிபீடத்தில்

தலை அறுபட்டவன் திமிரலில்,

பார்வைபெற்ற கூகையின்

செவிகிழிக்கும் மீஅலறல்....

காதலென்பது...

தற்கொலைக்காய்

கைகோர்ப்பவர்கள்

பூசிக்கொள்ளும்

வாசனைத் திரவியம்!

காதலென்பது...

கலவரத்தில்

உடைந்து சிதறிய

வயலினில் எஞ்சியிருக்கும்

ஒற்றை நரம்பு...

காதலென்பது...

சூதாட்டத்தில் தோற்றுப்போன

முதல்மாத ஊதியம்.- போர் சென்ற

தலைவனுக்காய் வைகறையில் பூத்த

வாகை மலர்...

காதலென்பது...

குலதெய்வத்துகாக நேந்துவிடப்பட்ட

புல்லினத்தின் கழுத்தில்தொங்கும்

செப்புமணி .

காதலென்பது

வாத்தியக்கலைஞனின்

வீட்டில் தொங்கும்

பதக்கத்தின் உலோகம்.- புழங்காமல் கிடக்கும்

அவன் தானியக் கலயத்தில்

உறைந்துவிட்ட பல்லி எச்சம்.

காதலென்பது...

போர்களத்தில் தன் வீரனையிழந்து

கொட்டில் திரும்பும் குதிரையின்

குழம்பொலி.

காதலென்பது...

நாள்பட்ட திருடன்

கொள்ளையில் தவறவிட்ட

பீடித்துண்டு. - துக்கவீட்டில் பால்வாசம்

நுகரும் பூனைக்குட்டி...

காதலென்பது...

தொலைந்து மீளும்

ஆட்டத்தில் தொலைந்து

மட்டுமே போக பூர்த்திசெய்யப்பட்ட

விருப்பமனு...

காதலென்பது...

மீன்களைத் தன்

அலகிடமிருந்து கவனமாயத்

தப்பிக்கவிடும்

சிச்சிலியின் பைத்திய மனம்...

காதலென்பது...

தொல்குடிகளின் வாத்தியத்துக்கு

தேவாங்குகள் போடும் குதியாட்டம்

முயங்குதலின் உச்சத்தில்

புழங்கப்படும் வசைச்சொல்.

- சக்தி தமிழ்ச்செல்வன்

கல்யாண்ஜி

கல்யாண்ஜி

NewsSense

இருந்தவை...தொலைந்தவை..

கார்த்திகை ராத்திரி

ஏற்றின கடைசி விளக்கை

வைத்துத் திரும்புமுன்

அணைந்துவிடுகிறது

முதல் விளக்குகளுள் ஒன்று.

எரிகிறபோது பார்க்காமல்

எப்போதுமே

அணைந்த பிறகுதான்

அதைச் சற்று

அதிகம் பார்க்கிறோம்.

எரிந்த பொழுதில்

இருந்த வெளிச்சத்தைவிட

அணைந்த பொழுதில்

தொலைந்த வெளிச்சம்

பரவுகிறது

மனதில் பிரகாசமாக.

- கல்யாண்ஜி

சாமக்கொடை

பதினெட்டு பட்டி சூழ

சந்நதம் கொண்ட மாரியாத்தா

சட்டென இறங்கினாள்

பெரியவீட்டு சாந்தி மீது

"என்ன வேண்டும்

கேள் மகனே" என்றாள்.

ஆவேசங் கொண்டாலும்

அழகு ததும்பும்

அவளிடம்

அத்தனை பேர் முன்

எப்படிக் கேட்பேன்

நீதான் வேண்டுமென்று.

- வித்யாஷங்கர்

நா. முத்துக்குமார்

நா. முத்துக்குமார்

NewsSense

திகட்ட,திகட்ட காதலி

அதிகம் பேசு

ஆதி ஆப்பிள் தேடு

மூளை கழற்றி வை

முட்டாளாய் பிறப்பெடு

கடிகாரம் உடை

காத்திருந்து காண்

நாய்க்குட்டி கொஞ்சு

நண்பனாலும் நகர்ந்து செல்

கடிதமெழுத கற்றுக்கொள்

வித,விதமாய் பொய் சொல்

விழி ஆற்றில் விழு

பூப்பறித்து கொடு

மேகமென கலை

மோகம் வளர்த்து மித

மதி கெட்டு மாய்

கவிதைகள் கிறுக்கு

கால்கொலுசில் இசை உணர்

தாடி வளர்த்து தவி

எடை குறைந்து சிதை

உளறல் வரும் குடி

ஊர் எதிர்த்தால் உதய்

ஆராய்ந்து அழிந்து போ

மெல்ல செத்து மீண்டு வா

திகட்ட,திகட்ட காதலி

- நா முத்துக்குமார்

வெய்யில்

வெய்யில்

NewsSense

காதல் கொள்கிறவனின் மனம் அப்படித்தானே?

திரௌபதி எதற்காக

பீமனை அதிகம் நேசித்தாளோ

அதே காரணத்திற்காகத்தான்

நான் உன்னை அதிகம் நேசித்தேன்.

கர்ணன் சுடலையில் எரியும்போது

எந்தக் காதலை உணர்ந்து

திரௌபதி நெஞ்சிலடித்துக்கொண்டாளோ

அந்தக் காதலின் பொருட்டே

நான் கிடந்து மாய்கிறேன்.

ஏழாயிரம் மைல் நீளமுள்ள

அவள் சேலையின் முந்தியில்

முடிந்துவைக்கப்பட்டிருக்கிறது

காதலில் பைத்தியமானோர்

பூசிக்கொள்வதற்கான

ரத்தம் தோய்ந்த திருமண்.

திரௌபதியை ரகசியமாய் வெறுத்த

தர்மா... சொல்!

குருஷேத்திரம் என்பது

ஒரே நேரத்தில் இருவர்மீது

காதல் கொள்கிறவனின் மனம்

அப்படித்தானே?

- வெய்யில்

மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன்

NewsSense

நீ இன்று கொஞ்சம் மீட்டெடுக்கிறாய்

வேட்கையின் தடத்தில்...

சாம்பல் குவியலில்

எங்கோ கனல்கிறது

மிச்சமிருக்கும்

ஒரேயொரு கங்கு

என் காமத்தின் சுடரை

நீ மெல்லத் தூண்டுகிறாய்

தரிசு நிலத்தில்

சட்டென கண் விழிக்கிறது

எங்கிருந்தோ வந்து சேர்ந்த

ஒரேயொரு விதை

என் காமத்தின் நிழலில்

நீ கொஞ்சம் இளைப்பாறுகிறாய்

வீடு திரும்பும்

வழியை தொலைத்தவர்களுக்கு

கூடவே வந்துகொண்டிருக்கிறது

ஒரேயொரு நட்சத்திரம்

என் காமத்தின் தடத்தில்

நீ உன் வீட்டிற்குத் திரும்பி நடக்கிறாய்

யாருமற்ற அறைகளில் வசிப்பவர்கள்

இரவெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்

தங்கள் ஒரேயொரு நிழலுடன்

என் காமத்தின் கைகளால்

நீ ஒரு கனத்த இரவை உதறுகிறாய்

சொல்ல வந்த ஏதோ ஒன்றை

சொல்ல முடியாமல் போனவர்கள்

ஒரேயொரு சந்தர்ப்பம் வேண்டி

மனமுடைந்து போகிறார்கள்

என் காமத்தின் சொற்களை

நீ ஒரு பிரகடனம்போல சுவரில் எழுதுகிறாய்

ஒரு கனத்தை நினைவை

இறக்கி வைக்க முடியாதவர்கள்

தேடியலைகிறார்கள்

ஒரேயொரு இடத்தை

என் காமத்தின் வழியே

நீ ஒரு கனத்த மனதிலிருந்து வெளியேறிச் செல்கிறாய்

காமத்தின் பலிபீடத்தில்

ஒவ்வொருவரும் இழக்க விரும்புகிறார்கள்

ஒரேயொரு முறை தங்கள் உடலை முழுமையாக

என் காமத்தின் வாசனையில்

வரலாற்றில் யாரிடமோ இழந்த

உன் உடலை

நீ இன்று கொஞ்சம் மீட்டெடுக்கிறாய்

- மனுஷ்ய புத்திரன்

உன்னை உன்னை உன்னை

கடலளவு நேசிக்கிறேன்

மலையளவு வெறுக்கிறேன்

உன்னை உன்னை

உன்னைத்தவிற வேறெதுவும் இல்லை

இது உன்னிடம் நான்

ஒத்துக்கொள்வதாய் இல்லை

தனிமை தனிமை

தனிமை இன்றி வேறெதுவும் இல்லை

இது உன்னிடம் நான்

ஒத்துக்கொள்ள நீ யோக்கியனில்லை

எந்த நேரத்தில் எங்கு நின்றால்

நீ வருவாய்

என்று எனக்குத் தெரியும்

ஆனால் நிற்பதாய் இல்லை

எந்த சாலையில் எங்கு திரும்பினால்

உன் வீடு வரும்

என்று எனக்குத்தெரியும்

ஆனால் வருவதாய் இல்லை

நினைத்த நொடியில்

நினைத்தபடியே

உன் குரலை என்னால்

கேட்கவும் முடியும்

ஆனால் கேட்பதாய் இல்லை

நீ சிரித்து மயக்கும்

முகநூல் படங்களுக்கு

என் ஆன்மாவில் இருந்து

அரைவரி எடுத்து

எழுதினால் போதும்

நீ like செய்வாய்

ஆனால் நான் எழுதுவதாய் இல்லை

உன்னை கடலளவு

நான் நேசிக்கிறேன்

உன்னை மலையளவு

நான் வெறுக்கிறேன்

பசு தோல் போர்த்திய

புலி... நீயா...

நானா...

- நா.முத்துக்குமார்

குடையளவு மேகம்

ஒரு துண்டு பூமி

இரண்டு துண்டு வானம்

சிறு கீற்று நிலவு

சில துளிகள் சூரியன்

ஒரு பிடி நட்சத்திரம்

கால்படிக் கடல்

ஒரு கிண்ணம் பகல்

ஒரு கிண்ணிப்பெட்டி இருள்

மரக்கூந்தல் காற்று

நூலளவு பசும் ஓடை

குடையளவு மேகம்

ஒரு கொத்து மழை

குட்டியாய் ஒரு சாத்தான்

குழந்தை மாதிரி கடவுள்

உடல் நிறைய உயிர்

மனம் புதிய காதல்

குருதி நனைய உள்ளொளி

இறவாத முத்தம்

என் உலகளவு எனக்கன்பு...

- ஃபிரான்சிஸ் கிருபா

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com