ஒரு காலத்தில் 10க்கு 10 அறையில் ஒரு சிலர் மட்டும் இரவு பகல் பாராமல் வேலை பார்த்த நிறுவனங்கள், இன்று உலகையே ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. கூகுள், அமேசான், ஃப்ளிப்கார்ட், ஆப்பிள் என பட்டியலைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அப்படி நாமும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு வளர வேண்டும் என்கிற ஆசை நம்மில் பலருக்கு இருக்கும் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.
ஆனால் அதற்கு முன் உலகின் மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை செய்தால், அது நம் நிறுவனத்தையே அற்புதமாகக் கட்டமைக்க உதவிகரமாக இருக்கும் என்று கருதியே பலர் பெரிய நிறுவனங்களில் வேலைக்குச் சேர்வர் அல்லது சேர முயற்சிப்பர். அப்படி முயற்சி கூட செய்யாதவர்கள் பெருநிறுவனங்களில் வேலை பார்க்க வேண்டும் என்றாவது ஆசைப்பட்டிருப்பர்.
அப்படி உலகின் முன்னணி ஸ்மார்ட்ஃபோன், மேக்புக், ஐபாட், ஸ்மார்ட்வாச் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? ஆப்பிள் நிறுவனம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் என ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி டிக் குக் பட்டியலிட்டுள்ளார்.
சமீபத்தில் இத்தாலி நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தைத் திறந்து வைக்கச் சென்றவர், தங்கள் நிறுவனம் ஒருவரை நேர்காணல் செய்யும் போது எதையெல்லாம் கவனிக்கும் என்பதைப் பட்டியலிட்டுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிக்கும், நிறுவன கலாச்சாரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று பேசினார்.
அப்படி ஆப்பிள் எதிர்பார்க்கும் முக்கிய குணநலன்களில் மற்றவர்களோடு கலந்து ஒன்றிணைந்து வேலை பார்ப்பதை (Collaboration) முதல் பண்பாகக் கூறினார்.
நான் என் யோசனையை உன்னிடம் பகிர்ந்தால், அது பல்கிப் பெருகி இன்னும் பெரிதாகும், இன்னும் நல்ல திட்டமாக உருவெடுக்கும் என்கிற அடிப்படை எண்ணத்தைக் கொண்டவராக இருக்க வேண்டும் என்கிறார் டிம் குக்.
இரண்டாவது & மூன்றாவதாகப் படைப்பு ஆற்றல் (Creativity) & ஆர்வத்தைப் (Curiosity) பட்டியலிட்டார்.
வித்தியாசமாகச் சிந்திக்கக் கூடியவர்களை ஆப்பிள் நிறுவனம் எப்போதும் தேடும். ஒரு விஷயத்தில் உள்ள பிரச்னை என்னவென்பதை அறிந்து, அதை எப்படி தீர்த்தார்கள் அல்லது அது போன்ற பிரச்னைக்கு இதற்கு முன் எப்படித் தீர்வு காணப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். சட்ட திட்டங்கள் அல்லது வழக்கங்களுக்கு மத்தியில் சிக்கக் கூடாது.
ஒரு குழந்தை போல ஒரு நபர் எத்தகைய கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம். அது முட்டாள்தனமானது அல்ல. அது வரவேற்கத்தக்கது என பேசினார் டிம் குக்.
நான்காவது விஷயம் நிபுணத்துவம் (Expertise) என்று கூறினார். இது ஊழியர்களை பெரிய இலக்கு கொண்டவர்களாகவும், அதே நேரத்தில் பலருக்கும் உதவக் கூடியவர்களாக மாற்றும், ஒட்டுமொத்த வேலைக் கலாச்சாரத்தையும் செழுமை அடையச் செய்யும் எனக் கூறியுள்ளார்.
உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமாகத் திகழும் ஆப்பிளில் வேலை செய்ய வேண்டும் என்பது பலரின் கனவு. ஆனால், தற்போது நிலவும் பொருளாதார சூழல் காரணமாகவும், ரெசசன் அச்சத்தினாலும் அத்தனை பெரிய நிறுவனமே புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பதைக் குறைத்துள்ளது.
அதோடு, ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தில் பணியிலிருந்த பல ஒப்பந்த பணியமர்த்துபவர்களை வெளியேற்றியது இங்கு நினைவுகூரத்தக்கது. கடந்த காலங்களில் ஆப்பிள் நிறுவனம் இப்படி செய்ததில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust