கப்பல் விபத்து என்றாலே டைட்டானிக் மட்டும் தான் என்பது போல நம் மனதில் மிக ஆழமாகப் பதிந்திருக்கிறது. இன்று வரை போர் அல்லாத, அமைதி காலத்தில் உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் (1,500க்கும் மேற்பட்டவர்கள்) உயிரிழந்த கப்பல் விபத்தும் டைட்டானிக் தான் என பல வலைதளங்கள் பட்டியலிடுகின்றன.
ஆனால், டைட்டானிக் போல மற்ற பல விபத்துகளும் நம் உலகில் நடந்திருக்கின்றன. அப்படி நடந்த விபத்துகள் என்ன? எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
மிசிகன் ஸ்டீம்ஷிப் என்கிற நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த கப்பலை ஜென்க்ஸ் ஷிப் பில்டிங் கம்பெனி என்கிற நிறுவனம் கட்டமைத்தது. 1903ஆம் தன் சேவையைத் தொடங்கிய ஈஸ்ட்லேண்ட் கப்பல் 1915ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி சிகாகோ ஆற்றங்கரையில் உருண்டு விழுந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் சுமார் 844 பேர் உயிரிழந்தனர். இது அமெரிக்காவில் உள்ள கிரேட் லேக்ஸ் பகுதியில் ஏற்பட்ட, மிகப்பெரிய ஒற்றை கப்பல் விபத்து உயிரிழப்பு சம்பவம் என்று கூறப்படுகிறது.
காலப் போக்கில், இந்த கப்பலை மீட்டு, பட்டி டிங்கரிங் எல்லாம் பார்க்கப்பட்டு அமெரிக்க கப்பற்படையில் யூ எஸ் எஸ் வில்மெட் (USS Wilmette) என்கிற பெயரில் இரண்டாம் உலகப் போர் வரை பயன்படுத்தப்பட்டது.
ஐரோப்பிய கண்டத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையில் இருக்கும் கடற்பகுதியை இங்கிலிஷ் சேனல் என்றழைப்பர். இன்று அப்பகுதியைக் கடப்பது ஏதோ நம் ஊர் குளம், குட்டைகளைக் கடப்பது போலாகிவிட்டது. ஆனால் 12ஆம் நூற்றாண்டு காலத்தில், சூழல், தொழில்நுட்பம் எதுவும் அப்படி இல்லை.
இங்கிலீஷ் சேனலைக் கடக்க, கடல் சீற்றம், காற்றின் வேகம்… போன்ற பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
அப்படி 1120ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி, பிரான்ஸ் நாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு பயணித்துக் கொண்டிருந்த வொயிட் ஷிப் நார்மண்டி கரையோரத்தில் மூழ்கியது. சுமார் 300 பேர் (இதில் அரசர் முதலாம் ஹென்றியின் மகன் வில்லியன் அட்லினும் அடக்கம்) உயிரிழந்தனர்.
வில்லியம் அட்லின் அடுத்த இங்கிலாந்து மகாராஜா ஆகிய இருக்க வேண்டியவர் என்றும், அவரே உயிரிழந்துவிட்டதால் இங்கிலாந்தில் வாரிசுப் பிரச்னைகள் தலைவிரித்தாடியதாகவும், அதனைத் தொடர்ந்து சிவில் போராட்டங்கள் வெடித்ததாகவும் பல்வேறு வலைதளங்கள் சொல்கின்றன.
1948ஆம் ஆண்டு சீனாவில் நடந்து கொண்டிருந்த சிவில் போரில் கம்யூனிசப் படைகள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தன. அப்போது ஷாங்காய் நகரத்தை விட்டு பலரும் வெளியேறிக் கொண்டிருந்தனர்.
1948ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி எஸ் எஸ் கியாங்க்யா கப்பல் அதிகாரப்பூர்வமாக 2,150 பேரை ஏற்றி வந்ததாக பிரிட்டானிகா வலைதளம் சொல்கிறது. ஆனால் எதார்த்தத்தில் அதை விட இரு மடங்கு அதிக மக்கள் அக்கப்பலில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதில் பலரும் முறையாக அனுமதியின்றி நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் ஏறி பயணித்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. கப்பல் ஹுவாங்பு (Huangpu) ஆற்றின் முகத்துவாரத்தில் நுழைந்த போது திடீரென வெடித்துச் சிதறி மூழ்கியது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் வைக்கப்பட்ட கடல் கண்ணி வெடியில் இந்தக் கப்பல் மோதி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 1,000 பேர் காப்பாற்றப்பட்டதாகவும், சுமார் 4,000 பேர் உயிரிழந்ததாகவும் பிரிட்டானிகா வலைதளம் சொல்கிறது.
அமெரிக்காவில் சிவில் போர் முடிவுக்கு வந்திருந்த காலகட்டமது. 1865ஆம் ஏப்ரல் 27ஆம் தேதி ஆண்டு, ராணுவ வீரர்கள் தங்கள் வீட்டுக்குச் செல்ல எஸ் எஸ் சுல்தானா கப்பல் போக்குவரத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்தக் கப்பலில் ஒட்டுமொத்தமாக 375 - 400 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால் கப்பல் நிர்வாகம், விதிகளை எல்லாம் மீறி, அதிக லாபம் ஈட்ட, சுமார் 2,100 - 2,300 பேரை ஏற்றிக் கொண்டு பயணித்தது.
அதே போல சுல்தானா கப்பல் முறையாக பராமரிக்கப்படவில்லை. அக்கப்பலில் இருந்த பாய்லர்கள் (எஸ் எஸ் சுல்தானா ஒரு நீராவி இன்ஜின் கப்பல்) பாதுகாப்பாக இருக்கிறதா என்றும் சரி பார்க்கப்படவில்லை.
இதன் காரணமாக, ராணுவ வீரர்கள் அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லப்பட்ட போது, நான்கில் மூன்று பாய்லர்கள் வெடித்து கப்பல் மூழ்கியது.
இந்த விபத்தில் சுமார் 1,150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பல்வேறு வலைதளங்கள் சொல்கின்றன. 1,800 பேர் உயிரிழந்ததாக பிரிட்டானிகா வலைதளம் சொல்கிறது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற அதிபர் ஆப்ரகாம் லிங்கன் அதே 1865ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி கொல்லப்பட்டதால், பத்திரிகைகளும் சுல்தானா கப்பல் விபத்துச் செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் கடந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆர் எம் எஸ் லுசிடானியா (R M S Lusitania)
பிரிட்டனைச் சேர்ந்த குனார்ட் லைன் என்கிற நிறுவனம் ஆர் எம் எஸ் லுசிடானியா என்கிற கப்பலையும் இயக்கி வந்தார்கள். முதலாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த 1915ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி, நியூயார்க் நகரத்தில் இருந்து புறப்பட்டு, பிரிட்டனை நோக்கி பயணம் செய்தது.
7ஆம் தேதி லுசிடானியா கப்பல் அயர்லாந்தின் தெற்குக் கடற்கரையில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில், ஜெர்மனியின் யூ போட் என்றழைக்கப்பட்ட கப்பல்களால் டார்பிடோ குண்டு ஏவி தகர்க்கப்பட்டது.
இதனால் அந்தக் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்த 1,198 பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்தக் கப்பலில் 100க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களும் பயணித்ததால், அமெரிக்க அரசாங்கமும் ஜெர்மனி மீது கடும் கோபம் கொண்டது. இந்த சம்பவத்துக்குப் பிறகு தான், அமெரிக்கா, ஜெர்மனிக்கு எதிராக போர் களம் புகுந்தது என்றும் சிலர் சொல்கிறார்கள்.
1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி ஜப்பானைச் சேர்ந்த டொன பஸ் என்கிற கப்பல், எம் டி வெக்டர் என்கிற கச்சா எண்ணையை சுமந்து வந்த கப்பலோடு மோதி பெரிய விபத்து ஏற்பட்டது.
இரண்டு கப்பல்களிலும் மொத்தமாகச் சேர்த்து சுமார் 4,400 பேர் பயணித்ததாகவும், இந்த கோர விபத்தில் வெறும் 26 பேர் மட்டுமே உயிரோடு தப்பித்ததாகவும் பிரிட்டானிகா உட்பட பல வலைதளங்கள் சொல்கின்றன.
எண்ணெய் டேங்கரில் இருந்த எரிபொருள் காரணமாக கப்பல்கள் மோதிய உடனேயே தீ பரவி மனித இறப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த விபத்து, பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் இருந்து தெற்குப் பகுதியில் சுமார் 110 மைல் தொலைவில் தப்லாஸ் ஜலசந்தியில் (Tablas Strait) நடந்தது. இந்த இரு கப்பல்களிலும் பல்வேறு குளறுபடிகள் இருந்தன.
டொன பஸ் கப்பலில் மூத்த அதிகாரிகள் இல்லை. வெக்டர் கப்பலில் லுக் அவுட் என்றழைக்கப்படும் எதிரில் வரும் தடைகள், கப்பல்கள் போன்றவற்றை கண்கானித்து கப்பலை ஓட்டும் கேப்டனிடம் எடுத்துச் சொல்லும் நபர் இல்லை.
இரு கப்பல்களிலுமே சரியாக வேலை செய்யும் ரேடியோ கருவிகள் இல்லை என்று கூறப்படுகிறது. கடல் தெளிவாக இருந்தும், வானிலை நன்றாக இருந்தும் ஏற்பட்ட இந்த விபத்து, இன்று வரை பலராலும் மறக்க முடியாது, மனிதனின் அலட்சியத்தால் ஏற்பட்ட மோசமான விபத்தாக நினைவுகூரப்படுகிறது.
தொடக்கத்தில் ஒரு சொகுசுக் கப்பலாக கட்டமைக்கப்பட்ட எம் வி வில்ஹெல்ம், 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் வெடித்த பிறகு, ஒரு மருத்துவமனை கப்பலாக உருமாற்றப்பட்டது. அதன் பிறகு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வரும் தருவாயில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த துருப்புகள் மற்றும் ஜெர்மன் பிரஜைகளை போலாந்து உட்பட பல பால்டிக் நாடுகளில் இருந்து மீட்க (ரஷ்யா முன்னேறிக் கொண்டிருந்ததால்), அப்பகுதிகளில் இருந்து மீண்டும் ஜெர்மனிக்கு அழைத்து வரும் பணி வில்ஹெல்ம் கப்பலுக்குக் கொடுக்கப்பட்டது.
1945 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி, போலாந்தில் உள்ள கொடென்ஹஃபென் (Gotenhafen) நகரத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான பயணிகளோடு எம் வி வில்ஹெல்ம் புறப்பட்டது. அப்படிப் புறப்பட்ட கப்பல் மீது மருத்துவக் கப்பல் என்பதைக் குறிக்கும் குறியீடுகள் ஏதுமின்றி, ஜெர்மானிய துருப்புகளோடு, விமானத்தை தாக்கி அழிக்கும் ஆயுதங்களோடும் கடலில் பயணிக்க தொடங்கியது. இந்த தவறுகளால், ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலுக்கு வில்ஹெல்ம் கப்பல் ஒரு இலக்காகவே தெரிந்ததில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.
அன்று இரவே ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலால் டார்பிடோ ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டது. கடுங் குளிர் காரணமாக எம் வி வில்ஹெல்ம் கப்பலில் இருந்த பாதுகாப்புப் படகுகளை கடலில் உடனடியாக இறக்க முடியவில்லை. இந்த விபத்தில் சுமார் 9,000 பேர் மரணித்து இருக்கலாம் என்கிறது பிரிட்டானிகா வலைதளம். போர் காலத்தில் ஒரே ஒரு கப்பல் மீதான தாக்குதலில் அதிக நபர் உயிரிழந்த சம்பவத்தில் எம் வி வில்ஹெல்ம் கப்பலும் ஒன்று என இன்று வரை வருத்தத்தோடு நினைவுகூரப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust