ஒவ்வோர் ஆண்டும் பல புதிய தொடக்கங்களை உருவாக்கிச் செல்வது வழக்கம்தான். 21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய மாற்றங்கள் நம்மை மிகச் சாதாரணமகக் கடந்து செல்கின்றன. அந்த வகையில் 2021-ம் ஆண்டு நாம் கடந்து வந்த விஷயங்களைத் திரும்பிப் பார்ப்போம். இந்த ஆண்டு வரலாற்றில் முதல்முதலாக நடைபெற்றிருக்கும் 8 சம்பவங்கள் இதோ!
உலக வர்த்தக அமைப்பின் தலைவராக நைஜீரியா நாட்டின் பொருளாதார நிபுணரும், முன்னாள் நிதியமைச்சருமான நிகோஸி ஒகோன்ஜோ இவீலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வரி போன்றவற்றை உலக வர்த்தக அமைப்பு கட்டுப்படுத்தி வைக்கிறது. நிகோஸி ஒகோன்ஜோ இவீலா உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவர் ஆவார். ஆப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பதவிக்கு வருவதும் இதுவே முதல் முறை.
நெதர்லாந்தில் உள்ள புகழ் பெற்ற ராஜ்க்ஸ் மியூசியம் 200 வருடப் பாரம்பரியம் கொண்டது. ஆனால், இந்த ஆண்டுவரை அங்கே பெண்களின் ஓவியங்கள் எதுவும் காட்சிப்படுத்தப்பட்டதில்லை.1800-களின் முற்பகுதியில் நெதர்லாந்து மக்களின் பெருமைகளைக் கூறும் வண்ணம் அமைக்கப்பட்ட இந்த மியூசியம் பெண்களின் பெருமைகளை மட்டும் ஏனோ ஒழித்து வைத்திருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம்தான் முதல்முறையாக அந்த மியூசியத்தின் முக்கிய அறை முழுவதும் பெண்களின் ஓவியங்களால் நிரப்பப்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மனித மூளையை கம்பி (வயர்) வழியாகக் கணினியுடன் வெற்றிகரமாக இணைத்தனர். 2021-ம் ஆண்டில் ஒரு படி மேலே சென்று வயர் இல்லாமல் மனித மூளையை கணினியுடன் இணைத்துக் காட்டியுள்ளனர். அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய இந்த அமைப்புக்கு 'பிரைன் கேட்' என்று பெயர். வரலாற்றில் முதல்முதலாக 35 மற்றும் 63 வயதுடைய பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு பங்கேற்பாளர்களுக்கு இந்தச் செயல்பாடு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. வயர் வாயிலாக மூளையின் நரம்புடன் கணினி இணைக்கப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட அதே அல்காரிதத்தையே இதிலும் சாத்தியப்படுத்தியுள்ளனர்
உலகப் புகழ்பெற்ற வைர நகை நிறுவனமான பண்டோரா முதன்முதலாக ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட நகைகளை பயன்படுத்தத் தொடங்கியது.
சுரங்கங்களில் வெட்டியெடுப்பதைவிட ஆய்வகங்களில் உருவாக்குவதன்மூலம் மலிவுவிலையில் ஆபரணங்களை உருவாக்க முடியும் என்ற காரணத்துக்காக இந்த முடிவை எடுத்ததாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சுரங்கத்தொழிலில் ஈடுபடுவதில் இருக்கும் சிக்கல்கள், சுரங்கங்களால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் தீங்குகள் ஆகியவற்றை இந்த நடைமுறை குறைக்கும் எனவும், வைரக் கற்களுக்கான தேவை, சுரங்கங்களில் கிடைக்கும் வைரங்களைவிட அதிகமாக இருப்பதால், அதையும் ஆய்வகங்களிலிருந்து உருவாக்கும் வைரங்களின் மூலம் சமன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது
சட்ட மன்றத்தில் திருநங்கைகள்
மெக்சிகோவில் 1985-ம் ஆண்டு தன் 17 வயதில் தன்னை திருநங்கை என பகிரங்கமாக அறிவித்ததற்காகக் கைது செய்யப்பட்டவர் சல்மா லுவானோ. அதன் பின்னர் பாலின சமத்துவம் மற்றும் ஒரு பால் ஈர்ப்பினர் திருமணம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்பாட்டாளராக உள்ளார்.
2021-ம் ஆண்டு மெக்சிகோவில் திருநங்கை மரியா கிளெமென்டே கார்சியா உடன் சல்மா லுவானோவும் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்றில் மெக்சிகோ சட்ட மன்றத்தில் திருநங்கைகள் நுழைவது இதுவே முதல்முறை.
அமெரிக்கக் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பார்சன் தனது விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் ஸ்பேஸ்ஷிப்பில் விண்வெளி சுற்றுலாப் பயணம் மேற்கொண்டதன் மூலம் வரலாற்றில் முதல்முதலாக விண்வெளிக்குச் சுற்றுலாப்பயணம் செய்த நபர் என்ற பச்ருமையைப் பெற்றார். இவருடன் இந்தப்பயனத்தில் ஐந்து பேர் கலந்துகொண்டனர். 2021-ம் ஆண்டில் மூன்று முறை பயணிகளை விண்வெளிச் சுற்றுலாவுக்கு அழைத்து சென்றுள்ளது விர்ஜின் கேலடிக்.
விண்வெளி ஆராய்ச்சிகள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன. அதன் மற்றொருபடியாக 2021-ம் ஆண்டு முதன்முறையாக கருந்துளைக்குப் பின்னால் வலிமையான எக்ஸ்-ரே போன்ற ஒளி வருவதைக் கண்டறிந்தனர். இதை ஐரோப்பிய விண்வெளி முகமையின் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் (XMM-Newton) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் நுஸ்டார் (NuSTAR - Nuclear Spectroscopic Telescope Array) ஆகியவற்றின்மூலம் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேன் வில்கின்ஸ் தலைமையிலான பன்னாட்டு அறிவியலாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. நமது பால்வெளி பேரடைக்கு (Milkyway galaxy) அருகிலுள்ள I Zwicky 1 எனும் பேரவையின் மையத்தில் உள்ள கருந்துளையில் இந்த ஒளி கண்டறியப்பட்டது.
மத்திய அமெரிக்காவில் உள்ள சிறிய நாடான எல் சால்வடார் அரசு, பிட் காயினை அதிகாரப்பூர்வமாக்கியுள்ளது. பெரிய நாடுகளே கிரிப்டோ கரன்சியை சட்டப்பூர்வமாக ஏற்க தயக்கம் காட்டி வரும் சூழலில், ஒரு சிறிய நாடு அதை அதிகாரப்பூர்வமாக்கியது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்தது. வர்த்தகப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் நாணயமாகவும் முதலீடாகவும் சொத்தாகவும் கிரிப்டோ கரன்சிகள் பயன்படுத்தப்படுகின்றன