Thums Up : உலகின் பிரமாண்ட நிறுவனம் Coke -க்கு சவால் விட்ட இந்திய கம்பெனி - நம்பிக்கை கதை

அதனைத் தொடர்ந்து எலுமிச்சையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட லிம்கா, ஆரஞ்சுப் பழங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கோல்ட் ஸ்பாட் போன்ற பானங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. தொடக்கத்தில் தம்ஸ் அப்பை விட லிம்கா ஜோராக விற்பனை ஆனது.
ThumsUp
ThumsUpNewsSense

'எவராலும் நிராகரிக்க முடியாத உங்களின் வெற்றி தான், எதிரிகளுக்குக் நீங்கள் கொடுக்கும் மிகப் பெரிய பதிலடி' என ஊரில் ஒரு வாசகம் சொல்லிக் கேட்டிருப்போம்.

அப்படி ஒரு சிறிய இந்திய நிறுவனம், உலகின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து போரிட்டு தோற்றுப்போனது. ஆனால் அந்த இந்திய நிறுவனத்தின் பொருட்கள், இன்று வரை வெளிநாட்டு நிறுவனத்தின் வருவாயில் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கிறது.

இந்திய நிறுவனத்தை காலி செய்து தன் நிறுவன பொருட்களை விற்க விரும்பிய அந்த ராட்சத கம்பெனி, கடைசியில் இந்திய நிறுவன பொருட்களைப் பயன்படுத்தினால் மட்டுமே இந்தியாவில் தன் எதிர்காலத்தை உறுதி செய்து கொள்ள முடியும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டது.

அந்த இந்திய நிறுவனம் எது? இன்று வரை அந்நிறுவனத்தின் பானத்துக்கு மக்கள் சொக்கிப் போவது ஏன்? வாருங்கள் பார்ப்போம்.

1970களில் இந்தியா லைசென்ஸ் ராஜ் என்று அழைக்கப்பட்டது. ஒரு தொழிற்சாலையில் எத்தனை பொருட்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் தொடங்கி என்ன விலைக்கு விற்கப்பட வேண்டும் என்பது வரை அரசாங்கம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். அப்போது அமெரிக்காவின் கோகா கோலா நிறுவனமும் இந்தியாவில் வியாபாரம் செய்து வந்தது.

இந்த இக்கட்டான சூழலில், இந்திய அரசு ஒரு கடுமையான உத்தரவைப் பிறப்பித்தது. அந்த உத்தரவில் 1. கோகா-கோலா நிறுவனம் தன் இந்திய நிறுவனத்தின் 60 சதவீதப் பங்குகளை இந்திய பங்குதாரர்களிடம் கொடுக்க வேண்டும். 2. கோகா-கோலா தன் பானத்தை உருவாக்கும் சூத்திரத்தை இந்திய தரப்பிடம் பகிர வேண்டும்... என குறிப்பிடப்பட்டிருந்தது.

என்னது, என் வியாபார ரகசியத்தை இந்திய தரப்போடு பகிர்வதா..? என கொந்தளித்த கோகா-கோலா, இனி இந்தியா வேலைக்கு ஆகாதென மீதமிருந்த கோகா-கோலா பாட்டில்கள் மற்றும் கிளாஸ் டம்ளர்களோடு அமெரிக்காவுக்கு புறப்பட்டது.

அதுநாள் வரை கடைத் தெருக்களுக்குச் சென்றால் தாகத்துக்கு குளிர்பானங்களைக் குடித்துப் பழகி இருந்த இந்திய மக்களுக்கு, கோகா-கோலா போன்ற சோடா பானங்களின் சுவை நாக்கில் ஒட்டிக் கொண்டது. அப்போது பெப்ஸி நிறுவனமும் இந்தியாவில் இல்லை.

பார்லே பிஸ்லரி நிறுவனத்தை நடத்தி வந்த ரமேஷ் செளஹான், இந்த வெற்றிடத்தை உணர்ந்து கொண்டார். 1976ஆம் ஆண்டு மாம்பழங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மாசா பானம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1977ஆம் ஆண்டு கோகா- கோலா வீட்டை நோக்கி புறப்பட்ட பின் தம்ஸ் அப் (Thums Up) கோலா பானத்தை அறிமுகப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து எலுமிச்சையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட லிம்கா, ஆரஞ்சுப் பழங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கோல்ட் ஸ்பாட் போன்ற பானங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. தொடக்கத்தில் தம்ஸ் அப்பை விட லிம்கா ஜோராக விற்பனை ஆனது.

தம்ஸ் அப்பை கோகா-கோலாவுக்கு மாற்றாக மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த லட்சக் கணக்கில் செலவழித்து பல விளம்பரங்கள் செய்யப்பட்டன. அவை எதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

ஆம்பியன்ஸ் விளம்பர முகமையைச் சேர்ந்த அஷோக் குரியன் தம்ஸ் அப் பானத்தை 'Taste the Thunder' என்கிற டேக் லைனோடு விளம்பரப்படுத்த யோசனை கூறினார். அதன் பிறகு தம்ஸ் அப் விற்பனை எண்ணிக்கையில் இடி இடிக்கத் தொடங்கியது.

1970 மற்றும் 1980களில், இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர் மற்றும் பாகிஸ்தானின் ஸ்டார் பந்துவீச்சாளர் இம்ரான் கான் என பலரும் தம்ஸ் அப்பின் விளம்பரத்தில் நடித்தனர். போதாக்குறைக்கு சல்மான் கான் போன்ற பாலிவுட் பிரபலங்கள் தம்ஸ் அப் பாட்டிலோடு இந்திய வீடுகளின் மைய மண்டபத்திலிருந்த டீவிக்குள் புகுந்தனர்.

இன்றுவரை தம்ஸ் அப் பானத்தின் டேக் லைன் 'Taste the Thunder' தான். இந்தியாவில் தசாப்தங்களைக் கடந்து நீண்ட காலமாக ஒரே டேக்லைனைக் கொண்டு விளம்பரப்படுத்தப்பட்டு வரும் பொருளும் தம்ஸ் அப் தான். சரி மீண்டும் கதைக்குச் செல்வோம்.

இந்திய மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருந்த தம்ஸ் அப், இளைஞர்களைக் கடந்து, சாமானியர்களையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. இதற்கு 3 விஷயங்களை முக்கிய காரணமாகக் குறிப்பிடுகிறார் அனுபம் ரோங்தா என்கிற முதலீட்டாளர்.

சுவை, எளிதில் தம்ஸ் அப் கிடைப்பது, மிகப் பெரிய பிரபல விளம்பரத் தூதர்கள் என பட்டியலிடுகிறார். ஒருவர் மனதில் ஒரு சுவை பதிந்துவிட்டால், அதிலிருந்து மக்களை மாற்றுவது அத்தனை எளிதல்ல என்கிறார்.

அதற்கு மேகி நூடுல்ஸை உதாரணமாகக் காட்டுகிறார். இன்று சந்தையில் டாப் ராமன், சன் ஃபீஸ்ட் யிப்பி, ஸ்னாக் டாக், வெய் வெய், சிங் சீக்ரெட் நூடுல்ஸ், பதஞ்சலி... என பல பிராண்டுகள் அதே நோடுல்ஸைத் தான் விற்கின்றன. ஆனால் இந்தியாவில் மேகியை எவராலும் நெருங்கக் கூட முடியவில்லை.

இதை எல்லாம் விட, தம்ஸ் அப் மக்களைச் சென்றடைய அதன் அளவு மிக முக்கிய காரணமாக இருந்தது. கோகா-கோலா உட்பட பல குளிர்பான நிறுவனங்கள் 250 மில்லியை விற்று வந்த போது, கிட்டத்தட்ட அதே விலைக்கு 300 மில்லி குளிர்பானம் கொடுத்து இந்தியர்களின் பல்ஸை பசெக்கென பிடித்தது தம்ஸ் அப்.

1991ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக மன்மோகன் சிங் பதவியிலிருந்த போது, தாராளமயம், தனியார்மயம், உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. பல சட்ட திட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாகத் திருத்தப்பட்டன. வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை ஈர்க்க இந்திய அரசு முனைப்பாகச் செயல்பட்டது.

1993 ஆம் ஆண்டு தொடக்கத்தில், கோகா-கோலா மீண்டும் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தது. முதல் நாள் பூஜை போட்டு கடையை முழுமையாகத் திறப்பதற்குள் தம்ஸ் அப் தன் சந்தையைப் பிடித்திருந்ததைப் புரிந்து கொண்டது கோகா-கோலா.

தம்ஸ் அப் பானம் பிடித்திருக்கும் இடத்தை கோகா-கோலா நிரப்ப, பார்லே நிறுவனத்தின் பாட்டில் வினியோகஸ்தர்களை தன் பக்கம் இழுத்ததாக தி பிரின்ட் பத்திரிகை வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அப்போது பார்லே நிறுவனம் தன் பாட்டில் தேவைகளுக்கு பல பாட்டில் வினியோகஸ்தர்களை தான் நம்பி இருந்தது. இப்படி கோகா-கோலா முட்டுக் கட்டை போட்டதால், உற்பத்தி செய்த தம்ஸ் அப் பானத்தை, பாட்டில்களில் அடைத்து வினியோகஸ்தர்கள் வழி இந்தியா முழுக்க அனுப்ப முடியவில்லை.

1993ஆம் ஆண்டிலேயே பார்லே நிறுவனம், தங்களுடைய குளிர்பானங்கள் அனைத்தையும் சுமார் 40 மில்லியன் டாலருக்கு கோகா-கோலாவிடம் விற்று வெளியேறியது.

இதுநாள் வரை கோகா-கோலா தம்ஸ் அப் பானத்தை காலி செய்யவில்லை என அந்நிறுவன தரப்பில் மறுக்கப்பட்டு வருகிறது. "வதந்திகள் வதந்திகளாகவே இருக்கட்டும். கோகா-கோலா தம்ஸ் அப் அல்லது வேறு எந்த பானத்தையும் அழிக்க நினைக்கவில்லை" என கோகா- கோலா நிறுவனத்தின் தகவல் தொடர்புத் துறை அதிகாரி தீபக் ஜாலி சில பத்திரிகைகளிடம் கூறியுள்ளார்.

1990களில் இந்தியாவின் குளிர்பான சந்தையில் கோகா-கோலா சுமார் 60.5% சந்தையை வைத்திருந்தது. இதில் தம்ஸ் அப் உட்பட பார்லேவின் பானங்களை நீக்கினால், கோகா-கோலா நிறுவனத்திடம் வெறும் 28.7% சந்தை மட்டுமே இருந்தது.

தம்ஸ் அப் உட்பட பல பானங்களை பார்லே நிறுவனத்திடமிருந்து வாங்கிய கோகா-கோலா, தம்ஸ் அப்பை பின்னுக்குத் தள்ளி, அந்த வெற்றிடத்தை கோகா-கோலாவைக் கொண்டு நிரப்ப முயன்றது. தம்ஸ் அப் உற்பத்தி, சந்தைப்படுத்தல், விநியோகம் என அனைத்து தரப்பிலும் சுணக்கம் ஏற்பட்டது. சந்தையில் தம்ஸ் அப் கிடைக்கவில்லை. மக்கள் தம்ஸ் அப்புக்கு பதிலாக பெப்ஸியைத் தேர்வு செய்தனர்.

ThumsUp
சோடா வியாபாரி டூ 650 கோடி ரூபாய் ஐஸ் கிரீம் சாம்ராஜ்ஜியம் - வாடிலாலின் வியக்க வைக்கும் கதை

ஐயய்யோ... இதென்ன கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ஒட்டுமொத்த கோகா-கோலாவின் வியாபாரமும் சரிகிறதே என 1997ஆம் ஆண்டு முதல், முறையாக தம்ஸ் அப் மீண்டும் கோகா-கோலாவாலேயே தயாரிக்கப்பட்டு, சிறப்பாகச் சந்தை படுத்தப்பட்டது.

இன்று வரை இந்தியாவின் கோலா பானங்களில் 42 சதவீத சந்தையையும், ஒட்டுமொத்த குளிர்பான சந்தையில் 15 சதவீத சந்தையையும் தம்ஸ் அப் தன் கட்டை விரலில் வைத்திருப்பதாக இந்தியா.காம் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதே போல பார்லே நிறுவனத்திடமிருந்து கோகா-கோலா வாங்கிய லிம்கா, மாசா ஆகிய பானங்கள் இன்றும் இந்தியாவில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கின்றன. பார்லேவிடம் இருந்து வாங்கப்பட்ட சிட்ரா என்கிற எலுமிச்சை பானம், இந்திய கிராம புறங்களுக்கு மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுவதாக தி பிரின்ட் வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கோகா-கோலா காசுகொடுத்து வாங்கிய பார்லேவின் பானங்களில், கோல்ட் ஸ்பாட் தவிர, தம்ஸ் அப், லிம்கா, மாசா, சிட்ரா என அனைத்து பானங்களும் இன்றுவரை கோகா-கோலாவுக்கு கோடிக் கணக்கில் வருவாயைக் குவித்துக் கொண்டிருக்கின்றன.

கோகா-கோலாவே தம்ஸ் அப்பை வாங்கிய பிறகும், தம்ஸ் அப் பானத்தை நிறுத்த முடியாமல் போனது. அந்த பானத்துக்கும் மக்களுக்கும் இடையிலிருந்த உணர்வுப் பூர்வமான பிணைப்பை எவராலும் மறுக்க முடியாது. மகாராஷ்டிராவில் ஒரு மலைக்கே தம்ஸ் அப் என பெயரிடப்பட்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

உண்மையில், இது பார்லேவின் தோல்வி அல்ல. தம்ஸ் அப் பானத்தை காலி செய்து விட வேண்டும் என்கிற நோக்கில் வாங்கிய பிறகு கூட அதை அழித்தொழிக்க முடியாமல், மீண்டும் தம்ஸ் அப்பை வைத்தே இந்தியாவில் தன் தொழிலை நிறுவிக் கொண்ட கோகா-கோலாவின் தோல்வி.

மக்கள் மனதில் ஒரு பிராண்ட் இடம் பிடித்துவிட்டால், அதை மாற்ற கோகா-கோலா போன்ற கார்ப்பரேட் கோலியாத்களால் கூட முடியாது என்பதை பார்லேவின் தம்ஸ் அப் இடி முழக்கமாக உலகுக்கு உரக்கச் சொல்லி இருக்கிறது. கத சொல்லி தொண்ட வத்திருச்சுப்பா... ஒரு தம்ஸ் அப் குடுங்க.

ThumsUp
கரடியின் சாணத்தில் தயாரிக்கப்படும் டீ - இவ்வளவு Demand ஆ ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com