உக்ரைனில் போர் 8-வது நாளாகத் தொடர்கிறது. அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பல சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். மாணவர்களை மீண்டும் அழைப்பதற்கு இந்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் சார்பிலான குழு உக்ரைனின் அருகில் உள்ள நாடுகளுக்கு விரைந்திருக்கிறது. மாணவர்கள் போலந்து, ஹங்கேரி போன்ற நாடுகளின் வழியே தாயகம் திரும்புகின்றனர்.
இதற்கிடையில் நேற்று உக்ரைனிலிருந்து வந்த தமிழ்நாட்டு மாணவர் கௌதம் அவரது வளர்ப்பு பிராணியான பூனைக் குட்டியை நாடுகள் கடந்து அழைத்து வந்துள்ள நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் தனி விமானம் மூலம் டெல்லியை அடுத்த காஜியாபாதில் உள்ள ஹிண்டான் விமானப்படைத் தளத்துக்கு வந்தனர். அங்கிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். ஹிண்டான் விமானப்படைத் தளத்தில் தர்மபுரியைச் சேர்ந்த கௌதமின் ஜாக்கெட்டுக்குள் இருந்த சாம்பல் நிற உக்ரேனியப் பூனை அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மனித நேயத்துடன் தான் வளர்த்த பூனையையும் உடன் அழைத்து வந்த கௌதமை இந்திய அதிகாரிகளும் உக்ரேனிய அதிகாரிகளும் பூனையுடன் செல்ல அனுமதித்துள்ளனர்.
கௌதம் மற்றும் அவரின் பூனையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஹிண்டானில் வந்திறங்கும் மாணவர்களை வரவேற்ற தமிழக அரசு அதிகாரிகள், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர்களின் பெயர் மற்றும் முகவரிகள் பதிவு செய்யப்பட்டு, டெல்லி விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.