நம்மைப் பொறுத்தவரை அன்றாடம் இரவு, பகல் என உண்டு. ஆனால் துருவப் பிரதேசமான அண்டார்காவில் அப்படி இல்லை. சில மாதங்கள் சூரியன் இருந்து கொண்டே இருக்கும். இரவு என்பதே கிடையாது. அதே போன்று சில மாதங்கள் பகல் என்பதே இருக்காது, ஒரே நீண்ட இரவாக இருக்கும். அங்கே வாழ நேர்ந்தால் நாம் இதற்கு தயாராக வேண்டும்.
அப்படித்தான் பல மாத தயாரிப்புக்குப் பிறகு, அண்டார்டிகாவில் உள்ள ஐரோப்பாவின் கான்கார்டியா ஆராய்ச்சி நிலையத்தில் 12 விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கொண்ட குழுவினர் தயாராகி விட்டனர். இனி அண்டார்டிகா வரும் நான்கு மாதங்களுக்கு இருட்டாக இருக்கப் போவதால் நீண்ட குளிர்கால இரவுகளுக்குத் தயாராக அவர்கள் உள்ளனர்.
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) நிறுவனத்திற்கு இந்தக் குளிர்ச்சியான கண்டத்தில் ஆறு மாதங்கள் தனிமையில் வாழவும் வேலை செய்யவும் வேண்டியிருக்கிறது. அண்டார்டிகாவின் நீண்ட இரவும் குளிர்காலமும் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்தக் காலத்தை தங்கச் சுரங்கத்தில் இறங்கி வேலை பார்ப்பது போல என்கிறார்கள். அவ்வளவு விசயங்கள் இக்காலத்தில் ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்படும்.
தற்போது கான்கார்டியா ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி நாளின் சூரிய அஸ்தமனம் என்பது நீண்ட இரவின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அப்பகுதி முழுவதும் முழு இருளில் மூழ்கியதால் கண்டத்தில் சூரிய ஒளி தென்படாது. டாக்டர் ஹென்னஸ் ஹெகசன் மற்றும் அவரது விஞ்ஞானிகளது குழுவினர் இதற்கு தயாராக இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கூறியது.
"இறுதியாக அண்டார்டிகாவில் நாங்கள் 'உண்மையான' பணி’யைத் தொடங்குகிறோம். விண்வெளிப் பயண ஆராய்ச்சி என்ற பெயரில் ஆறு மாதங்கள் தனிமையில் வாழ்வது மற்றும் வேலை செய்வதற்கு தயாராகி விட்டோம்," என்கிறார் ஹென்னஸ்.
கடல் மட்டத்திலிருந்து 3,233 மீட்டர் கிட்டத்தட்ட மூன்றே கால் கிலோ மீட்டர் உயரத்தில் வெப்பநிலை கிட்டத்தட்ட மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அண்டார்டிகாவில் உள்ள இத்தாலிய-பிரெஞ்சு புறக்காவல் நிலையமான கான்கார்டியாவின் அடிவானத்திற்குப் பின்னால் சூரியன் மறைந்து விடும்.
ஏனைய உலகம் நான்கு முக்கிய பருவங்களை அனுபவிக்கும் அதே வேளையில், அண்டார்டிகாவில் கோடை மற்றும் குளிர்காலம் என இரண்டு பருவங்கள் மட்டுமே உள்ளன. எப்போதும் அண்டார்டிகா கண்டமானது அடர்ந்த பனியால் மூடப்பட்டிருக்கும். இப்பகுதியில் கோடையில் ஆறு மாதங்கள் பகலும், குளிர்காலத்தில் ஆறு மாதங்கள் இருளும் இருக்கும். கோடை காலத்தில் இரவு கிடையாது. குளிர் காலத்தில் பகல் இருக்காது. ஆனால் இரண்டு காலத்திலும் குளிர் இருக்கும். குளிர் காலத்தில் கடுங்குளிர் இருக்கும்.
பூமியில் பருவங்கள் சூரியனுடன் தொடர்புடைய பூமியின் சுழலும் அச்சின் சாய்வினால் ஏற்படுகின்றன. மற்றும் பூமி சூரியனைச் சுற்றி வருவதால், உலகின் வெவ்வேறு பகுதிகளில் நேரடியாக சூரிய ஒளி வெளிப்படும். நாசாவின் கூற்றுப்படி, கோடையில், அண்டார்டிகா பூமியின் பக்கத்தில் இருந்து சூரியனை நோக்கி சாய்ந்து இருப்பதால் நிலையான சூரிய ஒளியில் இருக்கும். குளிர்காலத்தில், அண்டார்டிகா பூமியின் பக்கத்தில் இருந்து சூரியனை விட்டு விலகி இருப்பதால், அக்கண்டம் நிலையான இருட்டில் இருக்கும்.
நீண்ட குளிர்காலத்தில், பொருட்களையோ அல்லது மக்களையோ விமானத்தில் ஏற்றிச் செல்ல முடியாது. மேலும் அண்டார்டிகா கண்டம் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இருப்பதால் ஆய்வுக் குழுவினர் நாள்பட்ட ஹைபோபாரிக் ஹைபோக்ஸியா அல்லது மூளையில் ஆக்ஸிஜன் பற்றாக் குறையை அனுபவிக்கின்றனர்.
"இந்த நிலைமையில் பூமியில் மனிதர்கள் வாழ்வது என்பது வேறொரு கிரகத்தில் வாழ்வதற்கு நெருக்கமானது" என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கூறியது. இது விண்வெளிப் பயணத் தரவுகளைத் தரக்கூடிய தங்கச் சுரங்கம் போன்றதொரு காலமாகும்.
அண்டார்டிகாவின் குளிர்காலத்தில், மனிதர்கள் தீவிர தனிமையில் வாழ்வதை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்காக, ஹேன்னஸ் தனக்கும் தனது பணியாளர்களுக்கும் உயிரியல் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வார். மேலும் குழுவானது தூக்கம் பற்றிய ஆய்வுகளையும் நடத்தும். இதன் மூலம் உடல் நலம், ஆரோக்கிய அளவீடுகள் குறித்த நடைமுறைகள் கண்டறியப்படும்.
இப்படி இந்த நீண்ட குளிர்கால இரவுகள் குறித்து இக்குழுவினர் தம்மையே ஒரு ஆய்வுப் பொருளாக முன்வைத்து ஆய்வு செய்வதால் என்ன பயன்? மனித உடலால் வாழவே முடியாத சூழலில் ஒரு மனிதன் எப்படி வாழ முடியும், என்ன சவால்களை எதிர் கொள்ள நேரிடும் போன்ற விசயங்கள் இந்த ஆய்வில் தெரிய வரும். இதன் மூலம் விண்வெளி போன்ற புதிய சூழல்களில் வாழ்வதற்கு எதிர்கொள்ள வேண்டிய சவால்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பார்கள். இது நிகழ்கால மற்றும் எதிர்கால ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
பகலே இல்லாத நான்கு மாதம் கடுங்குளிரில் வாழும் அந்த விஞ்ஞானிகள் மனித குலத்திற்கு செய்யும் இந்த கடுமையான பணிக்காக அவர்களை வாழ்த்துவோம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust