பசுமையான மலைகள் மற்றும் அடர்ந்த மூங்கில் காடுகளுக்கு பெயர் பெற்ற மிசோரம் வடகிழக்கு இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது. நீல மலைகளின் நிலம் என்று அழைக்கப்படும் இங்கே, மலைகளின் மீது பாய்ந்து செல்லும் ஆறுகளும், உயரமான நீர்வீழ்ச்சிகளும் அழகூட்டுகின்றன.
மணிப்பூர், அஸ்ஸாம், திரிபுரா, மியான்மர் மற்றும் பங்களாதேஷ் ஆகிய பகுதிகளால் மிசோரம் சூழப்பட்டுள்ளது. மாநிலத்தின் மையப்பகுதி வழியாக மியான்மர் எல்லையை நோக்கிச் சென்றால், பசுமையான நெல் வயல்களின் அழகு நம்மை வழிநடத்தும். இப்படி ஒரு புவியியல் பன்முகத்தன்மை மிசோரம், வடகிழக்கு இந்தியாவில் பார்க்க வேண்டிய மிக அழகான இடங்களில் ஒன்றாகும்.
மிசோரத்தின் மக்களைப் பொறுத்தவரையில், அவர்கள் யாவரும் அண்டை மனிதரிடத்தில் மிகுந்த பிணைப்பு கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தின் வளர்ச்சியில் பெரும்பாலான மக்கள் தங்களை நேரடியாக இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்து விதிகள் முதல் மாநிலத்தின் சிறந்த கல்வியறிவு விகிதம் வரை மிசோ மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விசயங்கள் உள்ளன.
ட்ராஃபிக்கில் காத்திருப்பது பெரும்பாலானோருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் ஒன்று. இதுபோன்ற சூழ்நிலையில் பயணிகள் நிதானத்தை இழப்பதை வழக்கமாகக் காணலாம். சமீபத்தில் மிசோரமில் இருந்து, பெரும் போக்குவரத்து நெரிசலில் காத்திருப்பது மாதிரியான புகைப்படம் ஒன்று ஆன்லைனில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
தேதி குறிப்பிடப்படாத புகைப்படத்தில், ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நிற்கின்றன. இருப்பினும், முற்றிலும் காலியாக உள்ள அதே சாலையின் மறுபுறத்தில் ஒரு ஓட்டுநர் கூட கடக்க முயற்சிப்பதைக் காண முடியவில்லை. இதன்மூலம், மற்ற மாநிலங்கள் எப்படி போக்குவரத்து விதிகளைப் பின்பற்றலாம் என்று மிசோரம் மக்கள் கற்றுத் தருகிறார்கள்.
91.3 சதவீத எழுத்தறிவு விகிதத்துடன், மிசோரம் நாட்டிலேயே மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இங்குள்ள செர்ச்சிப் மாவட்டம் தான் இந்தியாவிலேயே கல்வியறிவு அதிகம் உள்ள மாவட்டமாகும். இது 97.91% எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது.
பல நாடுகளின் காடுகள் வேகமாக அழிந்து வரும் நிலையில், இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் 84 சதவீத காடுகளைப் பேணி பாதுகாக்கிறது.
மிசோரம் மாநிலத்தில் சிறந்த நெசவாளர்கள் உள்ளனர். பாரம்பரியமாகத் திறமையான இந்த கைவினைஞர்கள் மூங்கில் தயாரிப்புகளான கூடைகள், பாத்திரங்கள், தொப்பிகள், கைவினைப்பொருட்கள் மற்றும் மலர் குவளைகள் மற்றும் சால்வைகளை நெசவு செய்கிறார்கள். கரும்பு மற்றும் மூங்கில் கைவினைப் பொருட்கள் மாநிலத்தின் மிக முக்கியமான கைவினைப் பொருட்களாகும்.
மாநிலத்தின் தலைநகரில் பிளாஸ்டிக் பயன்பாட்டை அகற்ற, மிசோரமில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதைத் தடை செய்வது குறித்து ஐஸ்வால் முனிசிபல் கார்ப்பரேஷன் பரிசீலித்து வருகிறது. மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் செய்தித்தாள்களைக் கொண்டு பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பைகளைத் தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டன. உண்மையில், கையால் செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகள் மீதான காதல் பலருக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு அதிகரித்திருக்கிறது.
மாநிலத்தின் நீண்ட காலமாக இயங்கும் சமூக அமைப்புகளில் ஒன்றானThe Young Mizo Association மூலம் பல சமூக நல மேம்பாட்டு முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. இந்த அமைப்பின் செயல்பாடுகளில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குறைந்தபட்சம் ஒரு நபராவது பங்கேற்கிறார்.
1935 ஆம் ஆண்டு கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில், 14 வயதுக்கு மேற்பட்ட எவரும் உறுப்பினராக சேரலாம். மிசோரமில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திலும் YMA கிளை உள்ளது. அமைப்பில் உறுப்பினராவதற்கு 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதன் பிறகு நீங்கள் விரும்பும் செயலில் பங்கு வகிக்கலாம்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust