Bermuda Triangle : உண்மையில் இங்கு கப்பல்கள் காணாமல் போகிறதா? - விலகும் மர்மம்

சமீபத்தில் மலேசியன் ஏர்லைன் விமானம் எம்ஹெச் 370 மறைந்து போனபோது கூட சிலர் இதற்கும் பெர்முடா முக்கோணத்திற்கும் தொடர்பு உள்ளதென நினைத்தனர். இவ்வளவிற்கும் மலேசிய விமானம் மறைந்த இடம் பெர்முடா இருக்கும் உலகின் மறுபாதியில் இருக்கிறது.
Bermuda Triangle
Bermuda Triangle sven bachstroem

பெர்முடா முக்கோணம் என்பது அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் மற்றும் மத்திய அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோவை எல்லைகளாகக் கொண்ட கடல் பகுதி. இங்கே விமானங்களும், கப்பல்களும் மர்மமான முறையில் காற்றிலோ இல்லை கடலிலோ மறைவதாக நம்பப்படுகிறது. இதனால் இதை பேய் முக்கோணம் என்றும் அழைக்கிறார்கள்.

சமீபத்தில் மலேசியன் ஏர்லைன் விமானம் எம்ஹெச் 370 மறைந்து போனபோது கூட சிலர் இதற்கும் பெர்முடா முக்கோணத்திற்கும் தொடர்பு உள்ளதென நினைத்தனர். இவ்வளவிற்கும் மலேசிய விமானம் மறைந்த இடம் பெர்முடா இருக்கும் உலகின் மறுபாதியில் இருக்கிறது.

Bermuda Triangle
வேடர்கள்: இலங்கையின் கடைசி பழங்குடி மக்களின் அவல வாழ்க்கை
NewsSense

பெர்முடா முக்கோணம்

“பெர்முடா முக்கோணம்" என்ற சொல் 1964 இல் எழுத்தாளர் வின்சென்ட் காடிஸ் என்பவரால் ஆண்களின் மசாலா பத்திரிகையான ஆர்கோசியில் வெளியிடப்பட்டது. பத்தாண்டுகளுக்கு பிறகு சார்லஸ் பெர்லிட்ஸ் என்பவரால்தான் இது பிரபலமானது. இவர் அமானுஷ்ய சக்திகள் குறித்த ஆர்வம் கொண்டிருந்தார். பண்டைய கிரேக்க இலக்கியங்களில் வரும் கற்பனை நகரமான அட்லாண்டிஸை உண்மை என்று இவர் நம்பினார். இந்நகரத்தின் மறைவிற்கும் பெர்முடா முக்கோணத்திற்கும் தொடர்பு உண்டு என்றும் அவர் நம்பினார்.

இதை முன் வைத்து 1974 இல் " தி பெர்முடா டிரையாங்கிள்" பெர்முடா முக்கோணம் என்ற புகழ்பெற்ற நூலை எழுதி வெளியிட்டார். அதன் பிறகு இந்த மர்மக் கதை ஆயிரக்கணக்கான புத்தகங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி தொடர்கள், இணையதளங்கள் வழியாக முன்னெடுக்கப்பட்டது.

Bermuda Triangle
Bermuda TriangleNewsSense

நம்பிக்கைகள்

பிறகு பலவருடங்களாக பெர்முடா முக்கோணத்தை நியாயப்படுத்தி பல கட்டுக்கதைகள் உருவாகின. சிலர் பெர்லிட்ஸின் அட்லாண்டிஸ் நகரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இந்த புராதான நகரம் கடலின் கீழ் மூழ்கி தனது படிக ஆற்றல்களால் விமானங்கள், கப்பல்களை மூழ்கடிக்கிறது என்று கூறுகின்றனர். சிலர் பிரபஞ்சத்தின் விண்வெளி நேர அமைப்பு இக்கடல் பகுதியில் மட்டும் பிளவுபட்டு விபத்து ஏற்படுகிறது என்று அடித்து விடுகிறார்கள். மற்றும் சிலர் வேற்றுகிரகவாசிகள், ஏலியன்கள் கடலின் ஆழத்தில் இருப்பதாக வதந்திகளை கிளப்புகிறார்கள்.

இன்னும் சிலர் இயற்கையான புவியியல் - நீரியியல் விளக்கத்தை தருகின்றனர். கடலுக்கு அடியிலுள்ள எரியக்கூடிய மீத்தேன் வாயுவால் கப்பல்கள், விமானங்கள் அழிக்கப்படலாம் என்கிறார்கள். மின்னல் அல்லது ஒரு மின் தீப்பொறி ஒரு பெரிய மீத்தேன் குமிழியைப் பற்ற வைத்து அதன் மூலம் கப்பலோ, விமானமோ ஒரு தடயமும் இல்லாமல் மூழ்கிவிடும் என்கிறார்கள். இந்த வாதத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால் மீத்தேன் உலகம் முழுவதும் உள்ளது. இவர்கள் விளக்குவது போன்ற ஒரு சம்பவம் இதுவரை எங்கேயும் நடக்கவில்லை.

மற்றவர்கள் திடீரென்று கடலில் உருவாகும் முரட்டு அலைகளை காரணமாகக் கூறுகின்றனர். மேலும் சிலர் சில மர்மமான புவியின் காந்த ஈர்ப்பு ஒழுங்கின்மை காரணமாக திசை காட்டும் சிக்கல்களை உருவாக்கி விமானிகளை குழப்பி அவர்களை கடலில் மூழ்கச் செய்யலாம் என்கிறார்கள். உண்மையில் இத்தகைய திசை அல்லது வழி செலுத்துதல் வேலை செய்யாமலேயே விமானங்களை இயக்குவதற்கு விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்படி ஒரு விபத்தும் இதுவரை நடந்ததில்லை.

உலகிலேயே பெர்முடா முக்கோணம் பகுதியில்தான் காந்தத்தில் செயல்படும் காம்பஸ் கருவி உண்மையான வடக்கு திசையை காட்டும் என்று சிலர் கூறுகிறார்கள். இது உண்மையல்ல. காம்ப்ஸ் எல்லா இடங்களிலும் வடக்கு திசையைத்தான் காட்டும். சில நேரம் பூமியின் காந்தப் புலத்தின் சில வேறுபாடுகளால் காம்பஸின் முள் சற்றே மாறுபட்டு காண்பிக்கும். இதுவும் 19ம் நூற்றாண்டிற்கு பிறகு பூமியில் நடக்கவில்லை.

Bermuda Triangle
உலகை நடுங்க வைத்த செங்கிஸ்கான் கல்லறை - ஒரு மர்ம வரலாறு!

உண்மைகள் மறைந்து போகும் மர்மம்

ஆனால் இந்த விளக்கங்களில் ஏதேனும் ஒன்றை நாம் ஏற்றுக் கொள்வதற்கு முன், ஒரு நல்ல சந்தேகம் உள்ளவர் அல்லது ஒரு விஞ்ஞானி அடிப்படையான கேள்வியைக் கேட்க வேண்டும். பெர்முடா முக்கோணத்தில் விளக்குவதற்கு தோதாக ஏதேனும் மர்மம் உள்ளதா?

லாரி குசே என்ற பத்திரிகையாளர் அந்தக் கேள்வியை சரியாக் கேட்டார். பெர்முடா முக்கோணத்தில் விசித்திரமாக காணமால் போனது பற்றி எந்த மர்மமும் இல்லை என்பதை அவர் ஆதாரத்துடன் விளக்கினார். மர்மமாக காணாமல் போன சம்பங்களை ஆராய்ந்து அவற்றின் தவறுகளை விளக்கினார். இந்தக் கதைகள் அனைத்தும் புனையப்பட்டது என்பதை கண்டறிந்தார்.

குசே அவரது " பெர்முடா முக்கோண மர்மம் - தீர்க்கப்பட்டது" என்ற நூலில் எப்படி மற்ற எழுத்தாளர்கள் இந்தப் பிரச்சினை குறித்து உண்மையான விசாரணையில் ஈடுபடவில்லை என்பதை எடுத்துரைக்கிறார். பலரும் அவர்களுக்கு முந்தைய எழுத்தாளர் கூறிய கதைகளையே ஆதரமாக காட்டுகிறார்கள். சார்லஸ் பெர்லிட்ஸின் பெர்முடா முக்கோணம் நூலில் உள்ள பிழைகள், தவறுகள், அறிவியலற்ற கோட்பாடுகள், அமானுஷ்யம் பற்றிய அவரது தவறான கருத்துக்கள் ஆகியவையே மற்ற எழுத்தாளர்களின் நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.

ஆகவே பெர்முடா முக்கோணம் பெரும்பாலும் சார்லஸ் பெர்லிட்ஸின் தவறுகளால் உருவாக்கப்பட்ட கற்பனையாகும். சில மோசமான புயல்களின் போது மூழ்கிய கப்பல்களைப் பற்றி இவர்கள் மறைக்கின்றனர். சில நேரங்களில் கப்பல்கள் பெர்முடா முக்கோணத்திற்கு வெளியே வெகு தொலைவில் மூழ்கின. இவற்றையெல்லாம் இவர்கள் பெர்முடா முக்கோண மர்மத்தில் சேர்த்து விட்டனர்.

அடுத்து பெர்முடா முக்கோணப் பகுதிக்குள் பயணக் கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்கள் அதிக அளவில் பயணிக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டம். இங்கே தற்செயலான விபத்துக்களால் கப்பல்கள் மூழ்குவது உண்டு. ஆனால் அதிக போக்குவரத்து இல்லாத இடமான தெற்கு பசிபிக்கில் இத்தகைய விபத்துக்கள் குறைவு. ஆகவே அதிக போக்குவரத்து நடக்கும் இடத்தில் விபத்துக்களின் விகிதம் அதிகம் என்பதில் மர்மம் ஏதுமில்லை.

பெர்முடா முக்கோணம் பற்றி பல பத்தாண்டுகளாக அறிவியல் விளக்கம் சொல்லப்பட்டிருந்தாலும் புதிய புதிய புத்தகங்களில் அது இன்னும் தீர்க்கப்படாத மர்மமாகவே நீடிக்கிறது. உண்மைகளை விடுத்து பரபரப்பான கதைகளில் ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் பழைய கட்டுக்கதைகளை இன்னும் எழுதுகின்றனர். டைம் போர்டல்கள், அட்லாண்டிஸ் நகரம் மூழ்கியது, கடலின் அடியில் இருக்கும் வேற்று கிரக விண்கலங்கள், புவிகாந்த முரண்பாடுகள் போன்றவை திரும்பத் திரும்ப கூறப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் அறிவியலாளர்கள் விளக்கம் கூறியும் இந்த மர்ம கட்டுக்கதைகள் ஓய்வதில்லை.

பேய், சாத்தான், தீய சக்திகள் போன்றவை மனிதரின் பயத்தின் காரணமாக இன்றும் உலகில் நம்பப்படுகின்றன. அதே போன்றதொரு உணர்ச்சிதான் பெர்முடா முக்கோண மர்மக் கட்டுக்கதையிலும் நிலவுகிறது. மூடநம்பிக்கைகள் உள்ள வரை இத்தகைய பொய்கள் நிலவினாலும் அறிவியலாளர்கள் இவற்றை எப்போதும் கேள்வி கேட்டு இல்லை என நிரூபித்திருக்கின்றனர். ஆகவே பெர்முடா முக்கோணம் எனும் மர்மம் ஏதுமில்லை. அது மனிதனின் மனதில் உருவானது மட்டுமே.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com