உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 24ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா இந்த போரைக் கைவிட வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றனர்.
உக்ரைன் போரினால் உக்ரைன் மக்கள், ரஷ்ய-உக்ரேனிய மக்கள் எனப் பலர் உயிரிழந்துள்ளனர். போரினால் இரு நாட்டுப் பொருளாதாரமும் மிகுந்த சரிவைச் சந்தித்துள்ளது. இரு நாட்டு மக்களும் போருக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் இதுவரையில் ரஷ்யா மீது விதித்த பொருளாதாரத் தடைகள் பாதிப்பை ஏற்படுத்தினாலும். போரில் வெற்றி பெறும் புதினின் எண்ணத்தை அவை மாற்றவில்லை.
இதனால், உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், உக்ரைனை ஆக்கிரமித்ததற்காக ரஷ்யாவிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்துள்ளதாக அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் இன்று அறிவித்தார்.
அமெரிக்கா ஒரு நாளைக்கு சுமார் 7,00,000 பீப்பாய்கள் ரஷிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்த நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் மிக முக்கியமான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அமல்படுத்தியுள்ளது, மேலும் இது ரஷ்யாவின் பொருளாதாரத்திற்குக் கணிசமான சேதத்தை ஏற்படுத்தும் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.
இந்த தடையில் ரஷிய எரிவாயு, எண்ணெய் மற்றும் எரிசக்தி ஆகியவை அடங்கும். ரஷிய எண்ணெய் இறக்குமதியை அமெரிக்காவை விட அதிகமாக நம்பியிருக்கும் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.