சீனா: விலைவாசி குறைவால் அவதிப்படும் நாடு - எப்படி உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும்?

Deflation காலத்தில், நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்கள் தொடங்கி சொத்து பத்துக்களின் விலைவாசிகள் காலப்போக்கில் சரிவைக் காணும். மறுபக்கம் மக்கள் கையில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் திறன் அதிகரிக்கும்.
சீனா: விலைவாசி குறைவால் அவதிப்படும் நாடு - எப்படி உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும்?
சீனா: விலைவாசி குறைவால் அவதிப்படும் நாடு - எப்படி உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும்?canva

இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மிகப்பெரிய தலைவலி விலைவாசி. இதற்கு சமீபத்தைய உதாரணம்,

சராசரியாக 40 - 50 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த ஒரு கிலோ தக்காளி, கடந்த சில வாரங்களுக்கு முன் கிலோ 200 ரூபாயைத் தொட்டது தான்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றைத் தொடர்ந்து பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா போன்ற உலகின் பல முன்னணிப் பொருளாதாரங்களே விலைவாசிப் பிரச்சினையை சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் போது, சீனாவில் பல பொருட்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

விலைவாசி குறைந்தால் மகிழ்ச்சி தானே? இதில் மேற்கொண்டு யோசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா ?

எப்படி விலைவாசி உயர்வு (பணவீக்கம் Inflation) ஒரு பொருளாதாரத்தை பாதிக்குமோ, அப்படி விலைவாசி குறைவும் (பணவாட்டம் Deflation) பொருளாதாரத்தை பாதிக்கும் வல்லமை கொண்டது.

விலைவாசி குறைவு - பணவாட்டம் என்றால் என்ன?

ஒரு பொருளாதாரத்தில் பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைவாசி குறைவது அல்லது சரிவதை பணவாட்டம் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.

பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான டிமாண்ட் குறைவது அல்லது பொருட்கள் மற்றும் சேவைகளின் சப்ளை சந்தையில் அதிகமாக இருக்கும்.

சந்தையில் அதிக சப்ளை இருந்து, டிமாண்ட் சரிந்தால், தன்னிச்சையாக பொருட்கள் அல்லது சேவைகளின் விலையும் சரியும். இது பொருளாதாரத்தின் அடிப்படை விதி.

அது எப்படி பொருட்களுக்கான தேவை கணிசமாக சரியும்?

ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் விலைவாசி ஏற்றத்தைத் தடுக்க அந்தந்த நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிப்பர். அப்படி ஒரு கட்டத்தில் அளவுக்கு அதிகமாக வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் போது, மக்கள் மேற்கொண்டு செலவழிக்காமல் பணத்தை சேமிக்கத் தொடங்க வாய்ப்புகள் அதிகம்.

அதே போல அதிக வட்டிக்கு கடன் வாங்கி பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறுவதற்கு பதிலாக கடனே வாங்காமல் தன் தேவைகளை சுருக்கிக் கொள்வர், இதனால் பணவாட்டம் ஏற்படலாம்.

அல்லது,

கொரோனா வைரஸ் பெருந்தொற்று போல ஒரு உலகளாவிய நெருக்கடி ஏற்படும் போது, மக்கள் மிக மிக அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பணத்தை செலவழிப்பர்.

கார், பைக், வீட்டை அழகுபடுத்தும் பொருட்கள், சுற்றுலா, சினிமா தியேட்டர், எலெக்ட்ரானிக் பொருட்கள், போன்ற பலவித எக்ஸ்ட்ரா செலவுகளை முற்றிலும் நிறுத்திவிடுவர். இதை நாமே கடந்த 2020ஆம் ஆண்டில் நம் வாழ்கையில் அனுபவித்திருப்போம். இப்படியும் சந்தையில் திடீரென டிமாண்ட் சரியும்.

கடந்த காலங்களில் பணவாட்டம் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக தலை தூக்கியுள்ளதா என்று கேட்டால்…

1929ஆம் ஆண்டு அமெரிக்கா எதிர்கொண்ட The Great Depression-ஐ சொல்லலாம். ஒரு சில வாரங்களில் அமெரிக்க சந்தையில் பொருட்களின் விலை கடுமையாகச் சரிந்து, வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி, மக்கள் அன்றாட தேவைகளுக்கே அரசை எதிர்பார்த்த கொடூர காலமது.

பணவாட்டத்தின் போது என்ன ஆகும்?

Deflation காலத்தில், நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்கள் தொடங்கி சொத்து பத்துக்களின் விலைவாசிகள் காலப்போக்கில் சரிவைக் காணும். மறுபக்கம் மக்கள் கையில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் திறன் அதிகரிக்கும்.

உதாரணத்துக்கு இன்று 100 ரூபாயைக் கொண்டு 1 லிட்டர் பெட்ரோல் போட முடியும் என்றால், நாளை இதே 100 ரூபாயைக் கொண்டு 1.1 லிட்டர் பெட்ரோல் போட முடியும்.

எனவே, பணவாட்ட காலத்தில் தொடர்ந்து பொருட்களின் விலை குறையும் என்கிற நம்பிக்கையில், மக்கள் தங்களுக்கான பொருட்களை இன்னும் விலை குறைந்த பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று ஒத்திப் போடுவர்.

எடுத்துக்காட்டாக, ஒருவர் தன் வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனத்தை வாங்க விரும்புகிறார் என வைத்துக் கொள்வோம். பணவாட்ட காலத்தில் தொடர்ந்து விலை குறைந்து வரும் போது, இன்னும் விலை குறையட்டும் பிறகு வாங்கிக் கொள்ளலாம் என தன் கையில் இருக்கும் பணத்தை மேலும் மேலும் பத்திரப்படுத்திக் கொண்டே போவார். அவர் கையில் இருக்கும் பணம் பொருளாதார சந்தைக்கு வராமல் தேங்கி நிற்கும்.

சீனா: விலைவாசி குறைவால் அவதிப்படும் நாடு - எப்படி உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும்?
உக்ரைன் போருக்கு பிறகு ரஷியாவின் பொருளாதாரம் எப்படி இருக்கும்? - விரிவான தகவல்கள்

பொருளாதார சுழற்சி தேக்கம் காணும்:

இப்படி அரிசி பருப்பு, பால் தயிர் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கடந்து பொருளாதாரத்தில் மற்ற பொருட்கள் & சேவைகள் வாங்கப்படவில்லை என்றால், அந்தப் பொருட்களை விற்கும் டீலர்கள் தொடங்கி, உற்பத்தி செய்யும் நிறுவனம் வரை பலரின் வியாபாரம் அடிபடும். அந்த டீலர்கள் & நிறுவனங்களின் வருவாய் முதல் லாபம் வரை எல்லாமே குறையும், மறுபக்கம் கையில் தங்கும் பொருட்களின் அளவு அதிகரிக்கும்.

இதனால் டீலர்கள் மேற்கொண்டு புதிய பொருட்களை உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து வாங்கமாட்டார்கள். உற்பத்தியாளர்கள் ஏற்கனவே கையில் இருக்கும் பொருட்கள் விற்கப்படவில்லை என்பதால் மேற்கொண்டு பொருட்கள் உற்பத்தியைக் குறைப்பர்.

உற்பத்திப் பிரிவு, சந்தைப்படுத்தல் பிரிவு, விற்பனைப் பிரிவு என எல்லா துறையிலும் வேலை மந்தமாகும். இருக்கும் பொருட்களையே மக்கள் வாங்கவில்லை என்றால் புதிய பொருட்கள் & சேவைகளுக்கான ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் எல்லாம் கூட நிறுத்தப்பட அதிக வாய்ப்பு உண்டு.

விளைவு, வேலையில் இருந்து ஊழியர்கள் நீக்கப்படலாம். நிறுவனங்கள் தன்னால் லாபமீட்ட முடியாமல் போவதை தடுக்க ஊழியர்களின் சம்பளத்தில் கூட கை வைக்கலாம். இதனால் பொருளாதாரத்தில் புழங்கும் பணத்தின் அளவு மேலும் குறையும்.

விலைவாசிக் குறைவு - பொருட்கள் அல்லது சேவைகளை வாங்குவதை ஒத்திப் போடுவது - டிமாண்ட் சரிவு - உற்பத்தி குறைப்பு - வேலையின்மை அல்லது சம்பளக் குறைவு…. என ஒரு பொருளாதார சுழலுக்குள்ளேயே ஒட்டுமொத்த சந்தையும் சிக்கித் தவிக்கும்.

சுருக்கமாக, விலைவாசிக் குறைவு ஒரு அளவுக்கு மேல் அதிகமாகி பணவாட்டமாக உருவெடுத்தால், அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்துவிடும். இப்போது அது தான் சீனாவில் நடந்து கொண்டிருக்கிறது. அது மற்ற நாட்டு பொருளாதாரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு விஸ்வரூபமெடுக்கலாம்.

சீனாவில் நிலவரம் என்ன?

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா, பணவாட்டப் பிரச்சினையில் சிக்கியுள்ளது. அதாவது பொருட்களின் விலை சரிவைக் கண்டு வருகின்றன. தற்போது சீன மக்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் பணத்தை செலவு செய்வதில்லை.

சீனாவில், ஜூலை 2023 நுகர்வோர் பணவீக்கக் குறியீடு கடந்த ஆண்டை விட 0.3 சதவீதம் குறைந்துள்ளது. அதே போல ஜூலை 2023 காலத்தில் சீனாவின் ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 14.5 சதவீதம் சரிந்துள்ளன.

அதே காலகட்டத்தில் இறக்குமதிகளும் 12.4 சதவீதம் சரிந்துள்ளன. சீனாவில் காய்கறிகளின் விலை 1.5 சதவீதம் குறைந்துள்ளது.

சீனா: விலைவாசி குறைவால் அவதிப்படும் நாடு - எப்படி உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும்?
பிரிட்டன் : சரியும் இங்கிலாந்து பொருளாதாரம், வீழும் வல்லரசு - என்ன நடக்கிறது அங்கே?

சீன மக்களின் பிரதான உணவுகளில் ஒன்றான பன்றி இறைச்சியின் விலை தடாலடியாக 26 சதவீதம் சரிந்திருப்பதாக மிண்ட் பத்திரிகைச் செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சீனாவில் வரலாறு காணாத அளவுக்கு இளைஞர்கள் வேலையின்மை 21.3 சதவீதத்தைத் தொட்டுள்ளது. அதாவது 16 - 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 21.3 சதவீதத்தினருக்கு வேலை இல்லை.

இதோடு, இந்த ஆண்டின் முடிவுக்குள் 11.58 மில்லியன் சீன இளைஞர்கள் தங்களுடைய கல்லூரி படிப்பை நிறைவு செய்துவிட்டு வேலை வாய்ப்பு தேடி களத்தில் குதிக்க உள்ளனர். ஒற்றை வரியில் சீனாவின் நிலையைச் சொல்ல வேண்டுமானால், சீனாவில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான டிமாண்ட் இல்லை.

சீனாவின் ஜிடிபி கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் வெறும் 0.8 சதவீதமாக பதிவாகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் முகமையின் செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சீனாவின் பணவாட்டத்தால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

2020 காலகட்டத்தில் உலக நாடுகள் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டன. கொரோனா காலத்தில் பணத்தை சேமித்து வைத்திருந்த மக்கள், கொரோனா பிரச்சினைக்குப் பிறகு, அதை தாராளமாக செலவழித்தனர். அப்போது பல நிறுவனங்களும் தங்களால் சந்தையில் இருக்கும் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திணறின.

அது போக கடந்த 2022ஆம் ஆண்டில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஏற்பட்ட போர் காரணமாக, பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் எரிசக்தி, மின்சாரத்தின் விலை அதிகரித்தன. இதனால் பல்வேறு மேற்கத்திய நாடுகள் பணவீக்கப் பிரச்சினையை எதிர்கொண்டன.

ஆனால் சீனாவோ, இதற்கு நேர்மாறாக, கொரோனா காலகட்டத்தில் இருந்து மிக மெதுவாக மீண்டு வருகிறது. அது போக, உலகிலேயே மிகக் கடுமையான கொரோனா சட்ட திட்டங்களை சீனா கொண்டிருந்த காரணத்தால், உலகின் உற்பத்தி கேந்திரமாக இருந்த சீனாவில் இருந்து பல்வேறு நிறுவனங்களும் தங்கள் உற்பத்தியை பரவலாக்கிக் கொள்ள முடிவு செய்த காரணத்தாலும், சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான டிமாண்ட் சந்தையில் சரிந்துள்ளது.

பல்வேறு சீன உற்பத்தி நிறுவனங்களின் factory gate prices என்றழைக்கப்படும் ஆலை உற்பத்தி விலையே சரிவதாக பிபிசி வலைதளச் செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது போக சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான எவர்கிராண்ட் திவாலாகும் நிலையில் இருப்பது, அதிக வட்டி விகிதம் காரணமாக கடன் சுமை அதிகரித்திருப்பது போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகிறது சீனா.

இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் உலகச் சந்தையில் பல்வேறு பொருட்களை மிகக் குறைந்த விலையில் சீனா களமிறக்கும் போது, இந்தியா போன்ற வளரும் நாடுகளால் சீனா அளவுக்கு விலையில் போட்டி போட முடியவில்லை.

இதனால் மற்ற நாடுகளின் வியாபாரம் அடிபடும். சீனாவை எதிர்த்து போட்டி போட முடியாமல் பல நாட்டு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சம்பளத்தில் கை வைக்கலாம்.

இது வேலை இல்லா திண்டாட்டத்தை அதிகரிக்கலாம். மறுபக்கம், சீனாவோடு போட்டி போட முடியாத போது, அந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் முதலீடுகள் கிடைக்காமல் போகலாம். முதலீடுகள் கிடைக்கவில்லை என்றால், நிறுவனங்களின் விரிவாக்கப் பணிகள் தொடங்கி வளர்ச்சி வரை எல்லாமே பாதிக்கப்படும்.

இப்படித் தான் சீனாவில் ஏற்பட்டுள்ள பணவாட்டம், இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளை பாதிக்கும்.

- கெளதமன் முராரி

சீனா: விலைவாசி குறைவால் அவதிப்படும் நாடு - எப்படி உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும்?
silicon valley bank: திவாலான வங்கி, சரியும் பொருளாதாரம் - என்ன சொல்கிறார் அதிபர் ஜோ பைடன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com