அக்னிபத் - ராணுவம் : ஆயுதப் படைகள் இல்லாத 12 நாடுகள் குறித்து தெரியுமா?

உலக நாடுகளின் பலம் அவர்கள் வைத்திருக்கும் ராணுவப்படைகளை வைத்தே கணக்கிடப்படுகின்றன. தங்கள் நாட்டின் படையை வலுமிக்கதாக மாற்ற எல்லா நாடுகளும் தேவையான செலவுகளை செய்துக்கொண்டிருக்கையில், உலகில் சில நாடுகள் யுத்தத்தை நரகம் எனக் கருதி ஆயுதப்படைகளே இல்லாமல் செயல்படுகின்றன
Military Forces
Military ForcesTwitter
Published on

உலகின் அனைத்து நாடுகளிலும் ஆயுதப் படைகள் ஒரு முக்கியமான அங்கமாகிவிட்டன. இன்று, ஒரு நாட்டின் பலம் என்பது பெரும்பாலும் அதன் இராணுவத்தின் வலிமையினை வைத்தே அளவிடப்படுகிறது. ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளை விட அதிக சக்திவாய்ந்த போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களை வைத்திருக்க விரும்புகிறது.

பல நாடுகள் தங்கள் ஆயுதப் படைகளை வலுப்படுத்துவதற்காக, போட்டி போட்டுக்கொண்டு பல மில்லியன்களை செலவழிக்கும் போது, தங்கள் நாட்டில் எந்த இராணுவப் படையையும் வைத்திருக்காத நாடுகளும் இருக்கவே செய்கின்றன. “யுத்தம் நரகம்” என்று, எந்த ஆயுதப் படைகளும் இல்லாமல் வாழும் நாடுகளின் பட்டியல் இங்கே.

1. அண்டோரா :


அன்டோராவுக்கு நிலையான இராணுவம் என்று ஒன்று கிடையாது. ஆனால், அதன் பாதுகாப்பிற்காக ஸ்பெயின் மற்றும் பிரான்சுடன் சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஒரு சிறிய தன்னார்வ ராணுவ படையானது, சில அரசு விழாக்களில் சம்பிரதாயத்திற்காகச் செயல்படுகிறது. துணை ராணுவமான ஜிஐபிஏ (பயங்கரவாத தடுப்பு மற்றும் பணயக்கைதிகள் மேலாண்மையில் பயிற்சி பெற்ற) தேசிய காவல்துறையின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. மூன்று நாடுகளுக்கு இடையிலான முறைசாரா ஒப்பந்தத்தின் கீழ் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாதுகாப்பு உதவி வழங்கி வருகின்றன.

2. டொமினிகா :

டொமினிகா நாட்டிற்கு 1981-ஆம் ஆண்டிலிருந்தே நிலையான இராணுவத்தைக் கொண்டிருக்கவில்லை. நாட்டின் பாதுகாப்பு என்பது பிராந்திய பாதுகாப்பு அமைப்பின் பொறுப்பாகும்.


3. கோஸ்டாரிகா :

1948 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்ற பிறகு, கோஸ்ட்டாரிகா எல்லா ஆயுதப் படைக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 அன்று, இராணுவ ஒழிப்பு தினம் கொண்டாடப் படுகிறது. தற்போது கோஸ்ட்டாரிகாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை காவல்துறையே கவனித்துக் கொள்கிறது.

4. வாட்டிகன் :


உலகின் மிகச்சிறிய நாடான வாட்டிகன் நகரில், போப் ஆண்டவரின் பாதுகாப்பிற்காகவும், நகரத்தின் பாதுகாப்பிற்காகவும் பல ஆயுதப் படைகள் இருந்தன. ஆனால், போப் பால் VI 1970-ஆம் ஆண்டு அனைத்து படைகளையும் ஒழித்தார். இருப்பினும், இந்த சிறிய நாடு ரோமில் அமைந்துள்ளதால், இத்தாலி ராணுவமே வாடிகன் நகரத்தைப் பாதுகாக்கிறது.


5. ஐஸ்லாந்து :


ஐஸ்லாந்தில் 1869 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு இராணுவம் இருந்தது. ஆனால் அதன் பிறகு, 1951 முதல் 2006 வரைக்கும் ஐஸ்லாந்து பாதுகாப்புப் படையை பராமரிக்க அமெரிக்காவுடன் சில பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்துகொண்டது. 2006 ஆம் ஆண்டில், உள்நாட்டில் எந்தவிதமான படைகளையும் நிறுத்தாமல் வெளியிலிருந்து பாதுகாப்பை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவும், ஐஸ்லாந்தும் கையெழுத்திட்டன.

6. சமோவா :


1962-ஆம் ஆண்டு சமோவா மற்றும் நியூசிலாந்து இடையே கையெழுத்திடப்பட்ட நட்பு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே முறைசாரா பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்தியது. சமோவா ஒரு பாலினேசிய நாடு என்பதால், அதற்கு சொந்தமாக ஆயுதப் படைகளை வைத்திருக்க அனுமதிக்கவில்லை. இருப்பினும், ஒப்பந்தத்தின் தன்மை முறைசாராததாக இருப்பதால், தனியாக ஆயுதப் படை நிறுவும் முன்பு சமோவா நியூசிலாந்திடம் உதவி கேட்க வேண்டும்.


7. வனுவாது :


ஆயுதப் படை என்று பெரிய அளவில் இல்லாவிட்டாலும், இந்நாட்டிற்குள் பாதுகாப்பை கவனித்துக் கொள்ளும் சிறிய படை ஒன்று இருக்கிறது. “Vanuatu Mobile Force” என்றழைக்கப்படும் அந்தப் படை சிறிய அளவில் ஆயுதங்களைக் கொண்டு இயங்குகிறது.

8. சாலமோன் தீவுகள் :


ஆரம்பத்தில், இந்த நாடு தனக்கென்று சொந்தமாக ராணுவத்தை வைத்திருந்தது. உள்நாட்டில் ஏற்பட்ட கடுமையான இன மோதலை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் தலையிட்டு நிறுத்தின. அதற்குப் பிறகு இந்த நாடு தனக்கென எந்த இராணுவத்தையும் பராமரிக்கவில்லை. இருப்பினும், நாட்டில் பெரிய போலீஸ் படை ஒன்று உள்ளது.


9. லிச்டென்ஸ்டீன் :


1868-ஆம் ஆண்டு இந்நாட்டில் நிலையான இராணுவம் கலைக்கப்பட்டது. ஏனெனில் அதன் பராமரிப்பு செலவு மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்பட்டது. ஒரு இராணுவம் போர் காலங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது, ஆனால் அந்நாட்டிற்கு அந்த நிலை ஒருபோதும் ஏற்படவில்லை. லிச்டென்ஸ்டீன் ஒரு போலீஸ் படையைப் பராமரிக்கிறது. உள்நாட்டு பாதுகாப்பிற்காக சிறிய அளவில் ஆயுதங்களை வைத்திருக்கிறது. மூன்று நாடுகளுக்கு இடையே ஒரு முறைசாரா ஒப்பந்தத்தின் கீழ் ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளால் பாதுகாப்பு உதவி வழங்கப்படுகிறது.

10. கிரிபாட்டி :

அரசியலமைப்பின் கீழ், உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான கடல்சார் கண்காணிப்புப் பிரிவை உள்ளடக்கிய காவல்துறை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. கடல்சார் கண்காணிப்பு பணிகளுக்காக சிறிய அளாவு ஆயுதங்கள் பராமரிக்கப்படுகிறது. மூன்று நாடுகளுக்கு இடையே ஒரு முறைசாரா ஒப்பந்தத்தின் கீழ் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் மூலம் பாதுகாப்பு உதவி வழங்கப்படுகிறது.


11. செயிண்ட் லூசியா :


ராயல் செயிண்ட் லூசியா காவல்துறை சார்பில் 116 பேர் கொண்ட இரண்டு சிறிய துணை ராணுவப் படைகள் பராமரிக்கப்படுகிறது. சிறப்பு சேவை பிரிவு மற்றும் கடலோர காவல்படை ஆகிய இரண்டு அமைப்புகள் உள்நாட்டு பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ளன.

12. செயின்ட் வின்சென்ட் & கிரெனடைன்ஸ் :

செயின்ட் வின்சென்ட் & கிரெனடைன்ஸ் ஒரு கரீபியன் நாடு. அதற்கு சொந்தமாக இராணுவம் இல்லை. மற்ற கரீபியன் நாடுகளைப் போலவே, இந்த நாடும் பிராந்திய பாதுகாப்பு அமைப்பிலிருந்து பாதுகாப்பைப் பெறுகிறது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com