மீண்டும் கொரோனா : இதுதான் சீனாவின் இப்போதைய நிலை - கள தகவல்கள்

2019ஆம் ஆண்டின் முடிவில் சீனாவின் வுஹான் நகரில் கொரோனா தோன்றிய காலத்திற்குப் பிறகு, முதன்முறையாக தற்போது ஷாங்காயில் மிக தீவிரமாக தொற்று பரவி வருகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மீண்டும் கொரோனா
மீண்டும் கொரோனாPexels
Published on

2019ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கி உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்து தற்போது தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது கொரோனா.

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. 2.5 கோடி மக்கள் வாழும் ஷாங்காய் நகரம்தான் சீனாவின் நிதி மையமாகச் செயல்படுகிறது.

ஆனால் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாலும் அதனால் விதிக்கப்பட்டுள்ள கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகளாலும் நகரமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது.

NewsSense

அதிகரிக்கும் அறிகுறி இல்லா தொற்றுகள்

ஷாங்காய் நகரில் ஏப்ரல் 5ஆம் தேதியன்று 16 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அத்தனை பேரும் எந்த வித கொரோனா அறிகுறியும் அற்றவர்கள். கொரோனாவுக்கான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 311.

2019ஆம் ஆண்டின் முடிவில் சீனாவின் வுஹான் நகரில் கொரோனா தோன்றிய காலத்திற்குப் பிறகு, முதன்முறையாக தற்போது ஷாங்காயில் மிக தீவிரமாக தொற்று பரவி வருகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

திடீரென அதிகரிக்கும் தொற்றை சமாளிக்க கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சீன அரசு.

அதுமட்டுமல்லாமல் நகரில் உள்ள அனைவருக்கும் தொற்று பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளைச் சீன அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு ராணுவத்தின் உதவியையும் நாடியுள்ளது.

Pexels

தொடரும் லாக்டவுன்

ஷாங்காய் நகரில் விதிக்கப்பட்ட லாக்டவுன் ஏப்ரல் 5ஆம் தேதியோடு முடிந்திருக்க வேண்டியது. ஆனால் இப்போது காலவரையின்றி அது நீடிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்குகூட வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றனர் ஷாங்காய் நகர மக்கள்.

ஒருவார காலத்திற்கும் மேலாக மக்கள் வீடுகளிலேயே சிக்கியுள்ளனர். போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

பரிசோதனைகள் முழுவதுமாக முடிவடைந்து மதிப்பீடுகள் முடிவடையும் வரை லாக்டவுன் தொடரும் என அரசு தெரிவித்துள்ளது.

அறிகுறிகள் அற்ற நபர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பல இடங்களில் தனிமைப்படுத்தல் காரணமாகப் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைப் பிரியும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பலர் சமூக ஊடகங்களில் இதுகுறித்த தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மூன்று வயதுக்கும் குறைவான குழந்தைகளும் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதாக தெரிவித்து வருகின்றனர்.

Pexels

தவித்து நிற்கும் மக்கள்

ஏற்கனவே இரு வாரங்களுக்கு மேலாக லாக்டவினில் தவித்து நிற்கும் மக்கள் இன்று முடிவடைய வேண்டிய கட்டுப்பாடுகள் முடிவடையாமல் கால வரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து கோபமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். பல இடங்களில் உணவுத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

நகர நிர்வாகம் வீட்டில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் 2.5 கோடி மக்களுக்கு உணவு வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆன்லைனிலும் உணவுகளை ஆர்டர் செய்ய முடியவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பல சூப்பர் மார்கெட்டுகளும் மூடப்பட்டுள்ளன.

மீண்டும் கொரோனா
வேடர்கள்: இலங்கையின் கடைசி பழங்குடி மக்களின் அவல வாழ்க்கை
மீண்டும் கொரோனா
இலங்கை : நாட்டைவிட்டு வெளியேறுகிறதா ராஜபக்சே குடும்பம், என்ன நடக்கிறது அங்கே?

செல்லப்பிராணிகளையும் விட்டுவைக்கவில்லை

கொரோனா லாக்டவுனால் பொதுமக்கள் மட்டும் தவித்து நிற்கவில்லை. அவர்களின் செல்லப்பிராணிகளும் பெரும் இன்னலைச் சந்தித்து வருகின்றன.

லாக்டவுன் மனிதர்களுக்குதானே அதை பிராணிகள் எப்படி புரிந்து கொள்ளும்?

அவை வழக்கமாக வெளியில் சென்று சிறுநீர் கழிக்க முடியாத சூழலில்தான் உள்ளன. உரிமையாளர் ஒருவர் தனது செல்லப்பிராணி ஒன்றை கயிற்றில் கட்டி மாடியிலிருந்து தொங்கவிட்டு சிறுநீர் கழிக்க அனுப்பவது போன்ற காணொளி ஒன்றை நீங்கள் பார்த்திருக்க கூடும். இதுதான் ஷாங்காயின் தற்போதைய நிலை.

இதில் மேலும் கொடூரம் என்னவென்றால் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளின் செல்லப்பிராணிகள் கொல்லப்படுவதுதான்.

பொருளாதாரத்தை பாதிக்கும் சூழல்

ஒரு பக்கம் கடுமையான கட்டுப்பாடுகளால் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் மறுபக்கம் இந்த கடுமையான லாக்டவுன் சீனாவின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

ஷாங்காய் நகரில் மட்டுமல்லாமல் சீனாவின் வேறு சில பகுதிகளிலும் பொது முடக்கக் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் சிறு குறு வர்த்தகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

சீனா இதற்கு முன்பும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் நிதி மையமாகவுள்ள ஷாங்காய் நகரில் அல்ல. எனவே இச்சமயம் நிச்சயம் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

மீண்டும் கொரோனா
இலங்கை : தொடரும் இருள், சரியும் நம்பிக்கை - Latest 10 Updates

சீனாவின் கைகொடுக்காத ஜீரோ கோவிட் கொள்கை

கொரோனா தொற்று முதன்முதலில் சீனாவில் அடி எடுத்து வைத்திருந்தாலும் மிக விரைவிலேயே சுதாரித்துக் கொண்டு மிக கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாடு விதித்தது.

ஆனால் சமீப நாட்களில் மீண்டும் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கை சீனாவின் கொரோனா கட்டுப்பாட்டு கொள்கைகள் எந்த அளவிற்கு திறன்மிக்கது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தற்போது பரவி வரும் தொற்றுக்கு கொரோனாவின் ஒமிக்ரான் திரிபுதான் காரணம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றைக் கட்டுப்படுத்த தற்காலிக மருத்துவமனைகளும் தனிமைப்படுத்தல் மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் வெளியில் கிடைத்த தகவல்படி சீனா உயிரிழப்புகளை வெகுவாக கட்டுப்படுத்தியது. அதற்குக் காரணம் அதன் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டுக் கொள்கைகள். ஆனால் தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருவது. அதீத கட்டுப்பாடுகளால் மக்களை வருத்துவது போன்ற சூழல் சீனாவின் கொரோனா கட்டுப்பாட்டுக் கொள்கை எடுபடாமல் போவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com