உகாண்டா, கிழக்கு ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு நாடு. இதன் கிழக்கே கென்யாவும் வடக்கு தெற்கில் சூடானும், மேற்கில் காங்கோவும், தென் மேற்கில் ருவானாடாவும், தெற்கே தான்சானியா நாடுகளும் உள்ளன. நைல் நதிப்படுகையில் இருக்கும் உகாண்டாவின் இன்றைய மக்கள் தொகை 4 கோடியே 20 இலட்சம் ஆகும். இதில் 85 இலட்சம் மக்கள் நாட்டின் தலைநகரானா கம்பாலாவில் வாழ்கின்றனர்.
1971-இல் உகாண்டாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான மில்டன் ஒபோட்டின் அரசாங்கத்தை தூக்கி எறிந்து ஜெனரல் இடி அமீன் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்டார். அவருடைய இரக்கமற்ற 8 ஆண்டு ஆட்சியில் 3 இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1972-ம் ஆண்டில் அவர் உகாண்டாவில் இருந்த இந்திய – பாக்கிஸ்தான் குடிமக்களை வெளியேற்றினார். கூடவே அதிகரித்து வந்த இராணுவச் செலவுகளினாலும் உகாண்டாவின் பொருளாதாரம் நிலைகுலைந்தது. இந்த பொருளியல் நெருக்கடி பல தலைமுறைகளாக தொடர்ந்தது. அவரது கொடூரமான ஆட்சி 1979-ல் முடிவுக்கு வந்தது.
அப்போது நாடுகடத்தப்பட்ட உகாண்டா மக்களும் தான்சானியர்களும் தலைநகரான கம்பாலாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால் இடி அமீன் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. தப்பிச் சென்ற இடி அமீன் சவுதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். சாகும் வரை அங்கேயே இருந்தார். அவருடைய குற்றங்களுக்காக அவர் ஒருபோதும் நீதியின் முன்பு நிறுத்தப்படவில்லை.
இடி அமீன் வடமேற்கு உகாண்டாவில் உள்ள கொபோகோவில் 1925-ம் ஆண்டு பிறந்தார். அவருடைய பெற்றோர்கள் காக்வா இனத்தைச் சேர்ந்த தந்தையும், லுக்பரா இனத்தைச் சேர்ந்த தாயாரும் ஆவார்கள். இடி அமீன் பிறந்த சிறிது காலத்திலேயே அவர்கள் பிரிந்து விட்டனர். அடிப்படைக் கல்வியை முடித்த இடி அமீன் 1946-ம் ஆண்டில் உகாண்டாவை ஆட்சி செய்த பிரிட்டீஷ் நாட்டின் இராணுவத்தில் சேர்ந்தார். அதில் கிங்ஸ் ஆப்ரிக்கன் ரைபிள்ஸ் எனும் படைப்பிரிவில் சேர்ந்தார்.
விரைவிலேயே அவர் இராணுவ படி வரிசைகளில் முன்னேறினார். 1949-இல் அவர் ஷஃப்டா கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராட சோமாலியாவுக்கு அனுப்பப்பட்டார். பின்னர் கென்யாவில் 1952-56-ம் ஆண்டுகளில் மௌ மாவ் கிளர்ச்சியை அடக்கிய போது ஆங்கிலேயர்களுடன் போரிட்டார். 1959-ம் ஆண்டில் அவர் கிங்ஸ் ஆப்ரிக்கன் ரைபிள்ஸ் படைப்பிரிவின் மிக உயர்ந்த பதவியான எஃபென்டி பதவியை பெற்றார். இது முதன் முறையாக ஒரு கருப்பினத்தவர் அடைந்த மிக உயர்ந்த பதவியாகும்.
மேலும் 1966 வாக்கில் அவர் ஆயுதப்படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் இருந்த காலத்தில், இடி அமீன் உகாண்டாவின் லைட் ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனானார். 1951 மற்றும் 1960 க்கு இடையில் அவர் ஒன்பது ஆண்டுகள் பட்டத்தை வைத்திருந்தார்.
பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த உகாண்டா அக்டோபர் 9, 1962-இல் சுதந்திரம் பெற்றது. மில்டன் ஒபோட் நாட்டின் முதல் பிரதமரானார். 1964 வாக்கில் உகாண்டா இராணுவத்தின் அளவையும் வலிமையையும் விரிவுபடுத்த உதவிய அடி அமீனுடன் ஒரு கூட்டணி அமைக்குமாறு பிரதமர் மில்டன் ஒபோட் நிர்ப்பந்திக்கப்பட்டார்.
1966-இல் இந்தக் கூட்டணி காங்கோவிலிருந்து தங்கமும், தந்தமும் கடத்தி ஆயுத விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. உடனே மில்டன் ஒபோட் அரசியலமைப்பு சட்டத்தை ரத்து செய்து தன்னை நிர்வாக அதிபராக அறிவித்துக் கொண்டார். சிறிது காலத்திற்கு பிறகு, ஒபோட் இடி அமீனை மன்னர் ஃப்ரெடி என்று அழைக்கப்படும் கிங் முடேசா 2-ஐ அகற்றுவதற்கு அனுப்பினார். இந்த மன்னர் தெற்கு மத்திய உகாண்டாவின் புகாண்டா பகுதியை வலிமையுடன் ஆட்சி செய்த மன்னராவார்.
சில வருடங்களுக்கு பிறகு அதிபர் ஒபோட்டைக் கொல்வதற்கு இரண்டு முயற்சிகள் நடைபெற்று தோல்வியடைந்தன. இதன் பிறகு ஒபோட், இடி அமீனின் விசவாசத்தை கேள்விக்குள்ளாக்கத் தொடங்கினார். அப்போது காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. அதற்கு சென்று கொண்டிருந்த போது ஒபோட், இடி அமீனைக் கைது செய்யுமாறு உத்திரவிட்டார். அப்போது உகாண்டா நாட்டில் ஒபோட் இல்லாத நிலையை பயன்படுத்திக் கொண்ட அமீன் தீடீர் தாக்குதலை மேற்கொண்டு ஜனவரி, 1971 அன்று ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தினார். இதன் மூலம் உகாண்டாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த இடி அமீன், ஒபோட்டை வெளிநாடுகளிலேயே தஞ்சம் அடையுமாறு நிர்ப்பந்தித்தார்.
ஆட்சிக்கு வந்ததும் அவர் ஒபோட்டிற்கு ஆதரவாகவும் விசுவாசமாகவும் இருந்த கிறிஸ்தவ பழங்குடியினரான அச்சோலி மற்றும் லாங்கோ மக்கள் மீது குறிவைத்தார். அவர்கள் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் எனக் கருதிய இடி அமீன் பெருந்திரளான மரண தண்டனையை அம்மக்களுக்கு வழங்கினார். மேலும் பல்வேறு அமைப்புகள் மூலம் பொது மக்களை பயமுறுத்தத் துவங்கினார். மாநில ஆராய்ச்சி பணியகம் (SRB) மற்றும் பொது பாதுகாப்பு ஒற்றுமை (PSU) போன்ற பல்வேறு உள் பாதுகாப்பு படைகள் மூலம் அவர் மக்களை தன் காணிப்பின் கீழ் கொண்டு வந்தார்.
1972-ஆம் ஆண்டில் உகாண்டாவில் இருந்த 50,000 முதல் 70,000 வரையிலான ஆசிய மக்களை இடி அமீன் வெளியேற்றினார். இதன் விளைவாக உற்பத்தி, விவசாயம், வணிகம் ஆகியவை நலிவுற்று பொருளாதாரம் சரிந்தது. ஏனெனில் இந்த ஆசிய மக்கள்தான் இத்துறையில் கோலோச்சி வந்தார்கள்.
பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி (PFLP) இஸ்ரேலில் இருந்து பாரிஸுக்கு புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானத்தை ஜூன் 27, 1976 அன்று கடத்தியபோது, இடி அமீன் போராளிகளை வரவேற்று அவர்களுக்கு துருப்புக்கள் மற்றும் ஆயுதங்களை வழங்கினார். ஆனால் இஸ்ரேலிய கமாண்டோக்கள் பணயக்கைதிகளை மீட்டபோது அவமானப்படுத்தப்பட்டார். இதன் விளைவாக என்டெபி விமான நிலையத்தில் திடீர் சோதனை நடத்தி பல விமான நிலைய பணியாளர்கள், இஸ்ரேலுடன் சதி செய்ததாக நம்பப்படும் நூற்றுக்கணக்கான கென்யர்கள் மற்றும் ஒரு வயதான பிரிட்டிஷ் பணயக்கைதி ஆகியோரை தூக்கிலிட இடி அமீன் உத்தர விட்டார்.
அவரது பயங்கரவாத அடக்குமுறை ஆட்சி காரணமாக உகாண்டாவில் மட்டும் மூன்று இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
காலப்போக்கில் இடி அமீனின் நெருங்கிய கூட்டாளிகளின் எண்ணிக்கை குறையத் துவங்கியது. முன்பு விசுவாசமாக இருந்த துருப்புகள் கலகம் செய்யத் துவங்கினர்.
சில இராணுவ வீரர்கள் எல்லை தாண்டி தான்சானியாவிற்கு தப்பிச் சென்ற போது, தான்சானிய அதிபர் ஜூலியஸ் நைரேரே அமைதியின்மையை தூண்டி விட்டதாக இடி அமீன் குற்றம் சாட்டினார். பதிலடியாக 1978-ம் ஆண்டில் ககேரா ஆற்றின் வடக்கே இருந்த ககேரா சாலியண்ட் பகுதியை உகாண்டாவோடு இணைத்தார். இரு வாரங்கள் கழித்து நைரேரே பதிலடி கொடுத்தார். உகாண்டாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட கலகக்காரர்களின் உதவியோடு பறிகொடுத்த நிலப்பகுதியை மீண்டும் கைப்பைற்றினார்.
இதன் தொடர்ச்சியாக உகாண்டாவில் உள்நாட்டுப் போர் வெடித்தது. ஏப்ரல் 11, 1979 அன்று தலைநகரான கம்பாலா கைப்பற்றப்பட்ட போது இடி அமீன் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதலில் லிபியாவில் தஞ்சம் அடைந்த இடி அமீன் பின்னர் சவுதி அரேபியாவிற்கு சென்றார். அங்கு 2003-ல் நோய்வாய்ப்பட்டு உறுப்புகள் செயலிழந்து இறந்தார். இறக்கும் வரை வசதியாக வாழ்ந்தார்.
இன்று வரை இடி அமீனை ஒரு காட்டுமிராண்டி சர்வாதிகாரியாகவே மேற்கத்திய ஊடகங்களும், மேற்கத்திய அரசுகளும் குறிப்பிடுகின்றன. ஆனால் அத்தகைய கொடூரமான சர்வாதிகாரி ஏன் சர்வதேச நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்படவில்லை?
கனிம வளமும், இயற்கை வளமும் பொங்கி வழியும் ஆப்ரிக்க நாடுகளை தொடர்ச்சியான இனக்குழு மோதலிலும், ஜனநாயகமற்ற நிலையில் வைத்திருப்பதையும் மேற்கத்திய வல்லரசு நாடுகள் திட்டமிட்டு செய்கின்றன. அதனால்தான் அமெரிக்காவின் கூட்டாளியான சவுதி அரேபியா, இடி அமீனை தங்க வைத்து சாகும் வரை காப்பாற்றியது. வேறு எந்த கொலைகார சர்வாதிகாரிக்கும் கிடைக்காத ராஜவாழ்வு இடி அமீனுக்கு கிடைத்தது. இன்றைக்கு ஜூலியஸ் அசாஞ்சேவை நாடு கடத்த வேண்டும் என்று கூக்குரலிடும் அமெரிக்கா, இடி அமீனைப் பற்றி வாயே திறக்கவில்லை.
ஆகவே இடி அமீனின் காட்டுமிராண்டித்தனமான கொலைகளுக்கும், சர்வாதிகார ஆட்சிக்கும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் ஆசியும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust