கியூபா புரட்சி முடிந்த உடனேயே காஸ்ட்ரோ அமெரிக்கா நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தார். மே 1959-ம் ஆண்டு அமெரிக்க சர்க்கரை ஆலைகளுக்குச் சொந்தமான இலட்சக்கணக்கான ஏக்கர் நிலைத்தைப் பறிமுதல் செய்தார். குறிப்பாக யுனைடெட் ஃப்ரூட் நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் கையகப்படுத்தப் பட்டன. இது போக அமெரிக்க எண்ணெய் நிலையங்கள், தொலைபேசி நிறுவனம், வங்கிகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டன. கிட்டத்தட்ட 850 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டன. இவற்றையெல்லாம் அமெரிக்க கடுமையாக எதிர்த்தது.
அரசுடைமையாக்கப்பட்ட நிலங்கள் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. இரண்டு இலட்சம் மக்களுக்கு நிலமும் வீடுகளும் கிடைத்தன. உடனே அமெரிக்கா தனது தூதரகத்தை மூடி, தூதரை கியூபாவிலிருந்து திரும்ப அழைத்துக் கொண்டது. 1959-ம் வருடம் காஸ்ட்ரோவுக்கு அமெரிக்க பத்திரிகையாளர்களிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்று அவர் அமெரிக்கா சென்றார். அங்கே அவருக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் நடந்தது. சான்றாக ஆயிரக்கணக்கான கைதிகளை காஸ்ட்ரோ அரசு சுட்டுக் கொன்றதாக பிரச்சாரம் நடந்த்து. உண்மையில் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட 550 பேர் மாத்திரமே தண்டிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கையை பூதாகரமாக மாற்றியது அமெரிக்கா.
அமெரிக்க அரசின் அவதூறு பிரச்சாரங்களை புறந்தள்ளி அமெரிக்க மக்கள் தங்களது அரசை ஆதரிக்க வேண்டும் என்று காஸ்ட்ரோ பிரச்சாரம் செய்தார். மக்கள் ஒத்துழைக்க முன்வந்தாலும் அமெரிக்க அரசு மறுத்து விட்டது.
கியூப அரசுக்கு பதிலடியாக அமெரிக்கா கியூபாவிலிருந்து சர்க்கரை இறக்குமதியை நிறுத்திக் கொண்டது. தான் மட்டுமல்ல பிற நாடுகளும் கியூபாவிலிருந்து சர்க்கரையை இறக்குமதி செய்யக் கூடாது என்று கட்டுப்பாட்டை அமெரிக்கா போட்டது. இப்படித்தான் அமெரிக்காவின் பொருளாதாரத் தடை கியூபாவிற்கு எதிராக துவங்கியது. மறுபுறம் சோவியத் யூனியன் கியூபாவுடன் நட்பு கொண்டு சர்க்கரையை வாங்கிக் கொள்ள முன்வந்தது. சர்க்கரையை கொள்முதல் செய்து அதில் 80%-த்திற்கு பொருளும், 20% டாலரும் அளிக்க முன்வந்தது. மேலும் 100 மில்லியன் டாலரை நீண்ட கால கடனாக அளிக்கவும் சோவியத்யூனியன் முன் வந்தது.
கியூபா மற்றும் சோவியத் யூனியனது நட்பு அமெரிக்காவை உறுத்த ஆரம்பித்தது. லத்தின் அமெரிக்க நாடுகளில் கியூபாவை முன்வைத்து கம்யூனிசம் வளருமென அமெரிக்க அச்சமடைந்தது. சி.ஐ.ஏ.வின் உதவியுடன் காஸ்ட்ரோவை மிரட்டிப் பணிய வைக்க முயன்றது. ஆனால் காஸ்ட்ரோ மிரளவில்லை. பல முறை அவரை சதி செய்து கொல்வதற்கும் சி.ஐ.ஏ முயன்றது. அத்தனை முயற்சிகளையும் கியூபா முறியடித்தது.
மேலும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் கியூபாவில் எண்ணெய் கிடைக்கவில்லை. உதிரிபாகங்கள் கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்கவில்லை. சோவியத் உறவைத் துண்டித்துக் கொண்டால் பொருளாதாரத் தடைகளை திரும்ப பெற்றுக் கொள்வோம் என்று அமெரிக்க கூறினாலும் காஸ்ட்ரோ அதற்கு சம்மதிக்கவில்லை.
இத்தகைய பொருளாதார தடை இருந்தாலும் கியூபா பல விசயங்களில் சாதித்தது. புரட்சிக்கு முந்தைய பாடிஸ்டா அரசாங்கத்தில் எழுத்தறிவு 23.6% ஆகும். ஆனால் புரட்சிக்கு பிறகு 9-ம் வகுப்பு படித்த மாணவர்கள் மட்டும் 98.2% ஆகும். மேலும் 37 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். அனைத்து மட்டங்களிலும் கல்வி இலவசம். ஐ.நாவின் யுனெஸ்கோ, யுனிசெஃப் போன்ற அமைப்புகள் கல்வியில் க்யூபா செய்த சாதனையை முன்னுதாரணமாக நிறுத்தி உலகுக்கு பாடம் எடுத்தன.
அதே போன்று சுதாகாரத்துறையிலும் கியூபாவின் சாதனை போற்றத்தக்கது. புரடச்சிக்கு முந்தைய கியூபர்களின் சராசரி ஆயுட் காலம் 55 ஆண்டுகள் என்றால் பின்னர் அது 75 ஆண்டுகளாக உயர்ந்தது. இவ்வளவிற்கும் பல்வேறு மருந்துகளை அமெரிக்கா தடை செய்தது மட்டுமல்ல, விமானங்கள் மூலம் நோய் பரப்பும் கிருமிகளை கியூபாவில் தூவியது. இதற்கெல்லாம் அஞ்சாமல் கியூபாக அத்தனை நோய்களுக்கும் மருந்துகளை கண்டுபிடித்து அமெரிக்காவின் சதியை முறியடித்தது.
கென்னடியின் காலத்தில் சில கலகக்காரர்களை செட்டப் செய்து ஏப்ரல் 14, 1961-ல் நிகராகுவா துறைமுகத்தில் இருந்து ஆறு கப்பல்களில் கியூபாவிற்கு அனுப்பியது. இறுதியில் அமெரிக்காவின் இந்த சதிப்புரட்சி மலிவாக தோல்வியுற்றது. 1500 கலகக்காரர்களில் 114 பேர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். பிறகு 20 மாதங்களுக்கு பிறகு 53 மில்லியன் டாலர்களை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக் கொண்டு கைதிகளை விடுவித்தது கியூபா. இப்படியாக உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று நம்பிய அமெரிக்காவின் விருப்பம் நிறைவேறவில்லை.
இதன் பிறகு சோவியத் மற்றும் அமெரிக்காவின் கெடுபிடிப் போர் கியூபாவிலும் நடந்தது. சோவியத் யூனியனின் ஏவுகணைகள் கியூபாவிற்கு கொண்டு செல்லப்பட்டன. இதை அமெரிக்கா கடுமையாக எதிர்த்தது. இதன் பொருட்டு அக்டோபர் 27, 1962 அன்று கியூபா மீது படையெடுக்கப் போவதாக அமெரிக்க அதிபர் கென்னடி அறிவித்தார். 1,80,000 வீர்ர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். மறுநாள் சோவியத் யூனியன் அதிபர் குருஷேவ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். கியூபாவில் இருந்து ஏவுகணைகளை விலக்கிக் கொள்வதாக அவர் அறிவித்தார். இதை ஏற்று அமெரிக்காவும் கியூபா மீதான தாக்குதலை தொடுக்க மாட்டோம் என அறிவித்தது.
கியூபாவைப் போலவே பிற லத்தீன் அமெரிக்க நாடுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த வேண்டும் என்று காஸ்ட்ரோ விரும்பினார். தென் ஆப்ரிக்காவின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் அங்கோலாவுக்கு 15,000 கியூப வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கோலா விடுவிக்கப்பட்டது. அதே போன்று நிகாரகுவாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த சோமோஸாவின் சர்வாதிகார ஆட்சியை 1979-ல் கியூபா முறியடித்தது. செப்டம்பர் 1979-ல் அணிசேரா நாடுகளின் தலைவராக காஸ்ட்ரோ தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படியாக மூன்றாம் உலக நாடுகளின் நாயகனாக கியூபாவும், காஸ்ட்ரோவும் கொண்டாட்டப்பட்டனர்.
இறுதியில் 1993-ல் சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்தது. அதனால் கியூபாவிற்கு சோவியத் அளித்து வந்த அனைத்து உதவிகளும் நின்று போனது. இது கியூபாவிற்கு உண்மையிலேயே மிகக் கடினமான காலகட்டமாக இருந்த்து. இந்த முறை கியூபா எப்படியும் தன் பிடிக்கு வரும் என்று அமெரிக்கா நினைத்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சிரமமான வாழ்வை வாழ்வதற்கு கியூபர்கள் தயாரகவே இருந்தனர். அனைத்து உணவுப் பொருட்களும் ரேசனில் கிடைத்தாலும் அவர்கள் காஸ்ட்ரோ தலைமையிலான நம்பிக்கையை கைவிட்டுவிடவில்லை. அந்த சமயத்தில் இந்தியா 10,000 டன் கோதுமையை அனுப்பி வைத்த்து. அதை காஸ்ட்ரோ நன்றியுடன் பாராட்டினார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு பிறகும் கியூபா பல துறைகளில் குறுப்பாக மருத்துவத் துறையில் பிரம்மாண்டமாக சாதித்திருக்கிறது. பிள்ளைப்பேறில் இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கு 2.2 பேர். பத்தாயிரத்தில் 7.2 குழந்தைகளே பிறக்கும் போது இறக்கின்றன. உலகிலேயே குறைந்த அளவு இதுதான். உலகில் எங்கெல்லாம் இயற்கைச் சீற்றங்களும், போர்களும் பேரழிவுகளும் நேர்கின்றனவோ அங்கெல்லாம் கியூபா மருத்துவர்களும் ஆசிரியர்களும் பணி செய்கிறார்கள்.
ஃபிடல் காஸ்ட்ரோ ஓய்வு பெற்ற பிறகு ரவுல் காஸ்ட்ரோ பதவியேற்றார். அவரும் பிப்ரவரி 2013 இல், ஸ்டேட் கவுன்சிலின் தலைவர் பதவியை 2018 இல் ராஜினாமா செய்வதாக அறிவித்தார், மேலும் அவரது ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைந்தது, மேலும் எதிர்கால கியூபா ஜனாதிபதிகளுக்கு வயது வரம்புகள் உட்பட நிரந்தர கால வரம்புகளை அமல்படுத்த அவர் விரும்பினார்.
ஃபிடல் காஸ்ட்ரோ 25 நவம்பர் 2016 அன்று இறந்த பிறகு, கியூபா அரசாங்கம் ஒன்பது நாள் துக்கக் காலத்தை அறிவித்தது.
ரவுல் காஸ்ட்ரோவின் ராஜினாமாவிற்குப் பிறகு 18 ஏப்ரல் 2018 அன்று மிகுவல் டியாஸ்-கனெல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 19 ஏப்ரல் 2021 அன்று, மிகுவல் டியாஸ்-கனெல் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளரானார். 1959 கியூபப் புரட்சிக்குப் பிறகு, காஸ்ட்ரோ அல்லாத பிரிவிலிருந்து பதவியில் இருக்கும் முதல் நபர் ஆவார்.
இன்றைக்கும் கியூபா அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர் கொண்டு போராடி வருகிறது. அதன் சுற்றுலா இதர பொருளாதாரத் துறைகள் சற்றே மேம்பட்டிருப்பினும் நிலைமை பெரிதும் மாறிவிடவில்லை. ஆனால் அமெரிக்காவின் வாயிலில் ஒரு சின்னஞ்சிறிய நாடு அதை எதிர்த்து இன்றும் வீரநடை போடுவது வரலாற்றில் அதிசயத்தக்க ஒன்று.
( தொடரும் )
பகுதி ஒன்றை படிக்க...