துபாயின் ஆட்சியாளர் தன் முன்னாள் மனைவிக்கு விவாகரத்து தொகையாக 550 மில்லியன் பவுண்டு - அதாவது இந்திய மதிப்பில் ஏறக்குறைய 5000 கோடி ரூபாய் தர வேண்டும் என பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரிட்டன் நீதிமன்ற வரலாற்றில் இத்தனை பெரிய தொகையை விவாகரத்துக்காக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்படுவது இதுவே முதல் முறை. இவ்வளவு அதிக பணம் என்பது மட்டுமல்ல, இன்னும் பல அதிர்ச்சி முடிச்சுகள் சூழ்ந்ததுதான் இந்த விவாகரத்து வழக்கு.
துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமுக்கு வயது 72. இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவராகவும் பதவி வகிக்கிறார். பெரும் பணம் படைத்தவர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
மத்திய கிழக்கு பகுதியில் சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற இடமாகவும், வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் நாடாகவும் துபாயை மாற்றிய பெருமை ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமுக்கு உண்டு.
பொதுவாக மக்தூம் என்றால் அவரின் குதிரைப் பந்தய நடவடிக்கைகளைக் கொண்டே நினைவுகூர்வது வழக்கம். இவரின் கோடோல்பின் குதிரைப் பந்தய நிறுவனம் பல பில்லியன் மதிப்பிலானது. சுமார் 1000 குதிரைகள் இங்குள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவிலும் இந்த நிறுவனத்துக்கு கிளைகள் உள்ளன. கோடோல்பின் குழு 1992-ம் ஆண்டிலிருந்து இதுவரை உலகம் முழுவதிலும் 6 ஆயிரம் பந்தயங்களில் வென்றுள்ளது.
2006-ம் ஆண்டு தன் சகோதரர் உயிரிழந்த பிறகு துபாயின் ஆட்சியாளரானார் மக்தூம். 1971-ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சர் என்ற பொறுப்பையும் அவர் வகித்து வருகிறார்.
ஹயா பிண்ட் அல் ஹுசைன் மறைந்த ஜோர்டான் மன்னர் ஹுசைனின் மகள் ஆவார். இவர் மக்தூமின் ஆறாவது மனைவி. ஆறாவது மனைவி என்றாலும் ‘அதிகாரப்பூர்வ’ இரண்டாவது மனைவி ஹயா.
மக்தூமின் பிற மனைவிகள் குறித்து எந்த வெளிப்படையான தகவலும் இதுவரை வெளிவந்தது இல்லை. ஆனால், ஹயாவுடன் ஷேக் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அவர் குறித்து இந்த உலகம் அறிந்திருந்தது.
மக்தூம் - ஹயா திருமணம் 2004-ம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு அல் ஜலிலா, சையத் என இரு குழந்தைகள் உள்ளனர். மக்தூம் - ஹயாவின் குடும்பம் ஒரு பாசமான அழகான குடும்பம் என்றுதான் ஹயா நேர்காணல்களில் பேசி வந்தார். ஆனால், இந்த அழகான குடும்பத்தில் 2018-ம் ஆண்டிலிருந்து விரிசல் ஏற்பட்டது. அதற்கு காரணம் ஷேக் மக்தூம் தன் இரு மகள்களை கடத்தியதுதான்!
ஷேக் மக்தூமின் மற்றொரு மனைவியின் பெண்கள்தாம் லத்திஃபா, ஷேக் ஷாம்சா ஆகிய கடத்தப்பட்ட குழந்தைகள். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு துபாயிலிருந்து தன் உயிருக்கு ஆபத்து என பிரிட்டனுக்கு குழந்தைகளுடன் தப்பிச் சென்றார் ஹயா.
2019-ம் ஆண்டு தன் குழந்தைகள் மீண்டும் துபாய்க்கு அழைத்து வரப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தை நாடினார் ஷேக். ஆனால், தாய் ஹயாவுடனே லண்டனில் குழந்தைகள் வாழலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2002 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மகள் லத்திஃபாவை, ஷேக் மக்தூம் வலுக்கட்டாயமாக துபாய்க்கு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளார் என்றும், இளவரசி ஷாம்சாவை சட்டவிரோதமாகக் கடத்தியுள்ளார் என்றும் 2020-ம் ஆண்டு மார்ச் 5 அன்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதோடு, ஷேக் மக்தூம் `வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இல்லை` என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இளவரசி லத்திஃபா துபாய் அரசர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் 25 குழந்தைகளில் ஒருவர். இவர் 2002 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் துபாயிலிருந்து தப்பிச் செல்ல முயன்றார். பின் அவரின் தந்தை மக்தூமால் வலுக்கட்டாயமாக மீண்டும் துபாய்க்கு அழைத்துவரப்பட்டார்.
2002-ம் ஆண்டு லத்திஃபா தப்பிச் செல்ல முயன்றபோது அவருக்கு வயது 16. அப்போது அவரின் தப்பிச் செல்லும் முயற்சி தோல்வியடைந்து மீண்டும் துபாய்க்கு அழைத்து வரப்பட்டர். அதன்பின் மூன்று வருடங்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தான் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக லத்திஃபா தெரிவித்திருந்தார்.
அவருக்கு பல தடைகள் விதிக்கப்பட்டன. லத்திஃபா பாஸ்போர்ட் வைத்திருக்கவும் துபாயை விட்டுச் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது. வாகனம் ஓட்டுவதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
அதன்பிறகு லத்திஃபா மீண்டும் 2018-ம் ஆண்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போதும் அவர் பிடிப்பட்டார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 2018-ம் ஆண்டு தப்பிச் செல்ல முயன்று பின் துபாய்க்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டுள்ளதாக லத்திஃபா பேசி பதிவு செய்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல 2000-ம் ஆண்டு லத்திஃபாவின் சகோதரி ஷாம்சா தப்பிச் செல்ல முயன்று பின் ஒரு மாதத்துக்குப் பிறகு கேம்ப்ரிட்ஜில் பிடிபட்டார். நான்கு அரேபிய ஆண்களால் காரில் தூக்கி வரப்பட்டு, தன் தந்தையின் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அங்கு மாத்திரைகளும் ஊசிகளும் வழங்கப்பட்டு, பிறகு துபாய்க்கு தனி விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
லத்திஃபாவின் தப்பித்தல் முயற்சி சம்பவத்துக்கு பிறகு ஹயா பிரிட்டனுக்கு சென்றார். ஹயாவுக்கும் அவரின் முன்னாள் பாதுகாவலர்களில் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டவுடன், மக்தூம் சமூக வலைதளத்தில் “நீ வாழ்ந்தாய்; நீ இறந்தாய்” என்று பதிவிட்டிருந்தார். அது ஹயாவுக்கான அச்சுறுத்தல் செய்தியாக பார்க்கப்பட்டது.
ஹயா பிரிட்டனுக்குச் சென்ற பிறகும் அவருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் செய்திகள் வந்து கொண்டுதான் இருந்தன. ’நீ எங்கு சென்றாலும் எங்களால் அங்கு வர முடியும்’ என்பதுபோன்ற செய்திகள் அவரை அச்சுறுத்தின.
அதன்பின் தன் குழந்தைகள் துபாய்க்கு கடத்தி செல்லப்படலாம் என்கிற பயத்தில் அவர் பாதுகாப்புக்காக ஏராளமாகச் செலவழித்தார்.
இந்த வருடம், ஹயா, அவரின் பாதுகாவலர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் அலைப்பேசிகளை பெகசஸ் மென்பொருள் கொண்டு மக்தூம் ஹேக் செய்தார் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இப்போது ஹயாவுக்கு மக்தூம் இவ்வளவு பெரிய தொகை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததற்கு காரணம் வேறு யாரும் இல்லை. மக்தூமேதான். ஆம் ...அவரால்தான் ஹயாவுக்கும் அவரின் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஹயா மற்றும் அவரின் குழந்தைகள் பிரிட்டனில் தொடர்ந்து வாழ்வதற்கு மிக உறுதியான பாதுகாப்பு தேவைப்படுகிறது என்றும் அதற்கும் சேர்த்துதான் இந்தத் தொகை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
அதோடு, லண்டனில் உள்ள ஹயாவின் இரு ஆடம்பரச் சொத்துகளின் பராமரிப்பு, விடுமுறைப் பயணங்களுக்கான தொகை, குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்கான செவிலியர்கள், பாதுகாப்புக் கவசம் கொண்ட வாகனங்கள், குழந்தைகளின் எதிர்காலம் என எல்லாவற்றுக்கும் சேர்த்துதான் இவ்வளவு அதிக தொகையை வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். செல்லப்பிராணிகள் மற்றும் குதிரைகளின் பராமரிப்புச் செலவும் இதில் அடங்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust