உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த் தாக்குதல் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.
உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, அந்நாட்டு மக்கள் உயிர் பயத்தில் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து கொண்டிருக்கின்றனர். ரஷ்யப் படைகளால் இதுவரை உக்ரைனில் 198 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தென்கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகளில் உள்ள நகரங்களை ரஷ்யா கைப்பற்றி விட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஷ்யப் படைகளால் உக்ரைன் நாட்டில் மின்சாரம் மற்றும் இணைய சேவை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், உக்ரைன் நாட்டின் துணை பிரதமர் மைக்கைலோ பெடோரோவ் தங்கள் நாட்டுக்கு இணைய சேவை வழங்குமாறு டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்கிடம் ட்விட்டர் பதிவு மூலமாக கோரிக்கை விடுத்தார்.
அவர் கோரிக்கை விடுத்த 10 மணி நேரத்தில், எலான் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் (Spacex) நிறுவனத்தின் `ஸ்டார்லைட் சாட்டிலைட்' மூலம் இணைய சேவையை வழங்கி உக்ரைனுக்கு உதவி செய்திருக்கிறார். உக்ரைனுக்கு ஸ்டார்லைட் சாட்டிலைட் மூலம் இணைய சேவை வழங்கப்பட்டிருப்பதை தனது ட்வீட் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் எலான் மஸ்க்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. அந்த வகையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் ரஷ்ய அரசின் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் பதிவிடப்படும் வீடியோக்களுக்கு விளம்பரங்களை தடை செய்து நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.