ஒமிக்ரான் தொற்று ஐரோப்பாவின் சில பகுதிகளை மீண்டும் பொது முடக்க நிலைக்குத் தள்ளி இருந்தாலும், அமீரகம் மட்டும் தனது நாட்டை பெரும்பாலான பயணிகளுக்குத் திறந்தே வைத்திருப்பதோடு தொற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
கோவிட் 19 பான்டமிக் காலத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு கோவிட் திரிபுகளை எதிர்கொள்வதில் நெகிழ்ச்சியுடன் இருக்கிறது. உலகின் மிக உயர்ந்த தடுப்பூசி விகிதம் மற்றும் விரிவான, மலிவு விலையில் மேற்கொள்ளப்படும் கோவிட் 19 சோதனையுடன், மாறிவரும் கோவிட் திரிபுகளை எதிர்கொள்வதில் மிகவும் உறுதியான நாடாக அமீரகம் இருக்கிறது.
உண்மையில், அமீரகம் தற்போது ப்ளூம்பெர்க்-இன் கோவிட் தொற்று எதிர்ப்பு தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இது சுகாதாரத்துறையின் தரம், தொற்றினால் இறப்பு விகிதம் மற்றும் போக்குவரத்தை அனுமதித்தல் போன்ற 12 குறியீடுகளில் 53 நாடுகளை வரிசைப்படுத்துகிறது.
தொற்றுநோய் காரணமாக, அதன் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான துபாய், தன்னை ஒரு உலகளாவிய சுற்றுலா மையமாக இருப்பதிலிருந்து அதன் சொந்த சமூகத்தில் தன்னை முதலீடு செய்யும் ஒன்றாக மாற்றியுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகரத்தில் வசிக்கும் மிர்சாம் சாக்லேட் நிறுவனத்தின் தலைமை சாக்லேட் அதிகாரி கேத்தி ஜான்ஸ்டன் கூறுகையில், "ஒருவரையொருவர் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மக்கள் உள்ளூர் அளவிலான கருத்துக்கள் மற்றும் திட்டங்களுக்கு நம்பகத்தன்மையுடன் ஆதரவளித்து வருகின்றனர். விஷயங்கள் கொஞ்சம் மெதுவாகவும் அதிக அக்கறையுடனும் நகர்கின்றன. இப்போது இங்கு இருப்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிட்டால் தற்போது இதை வேறு ஒரு கிரகமாக உணர்கிறேன், மேலும் நான் அதை விரும்புகிறேன்.
ஒன்று, தற்போது வானிலை சரியாக உள்ளது என்று அமீரக வாசிகள் கூறுகின்றனர். "அக்டோபர் முதல் மே வரை சுற்றுலா செல்ல ஆண்டின் சிறந்த நேரம், ஏனெனில் அது அதிக வெப்பம் கொண்டதாக இல்லை" என்று துபாயில் வசிக்கும் தலா முகமது கூறுகிறார்.
மேலும் துபாய் நகரம் எக்ஸ்போ 2020 ஐ மார்ச் 2022 இறுதி வரை நடத்துகிறது. இது உலகளாவிய ஆறு மாத நிகழ்வாகும். இது உலகம் முழுவதிலுமிருந்து இடம்பெறும் அரங்குகளைக் கொண்டுள்ளது. இந்த அரங்குகள் தனித்துவமான கண்டுபிடிப்புகள் மற்றும் எதிர்கால திட்டங்களைக் காட்டுகிறது. "கண்காட்சியைக் கண்டிப்பாகத் தவறவிடாதீர்கள்" என்கிறார் ஜான்ஸ்டன். "ஒரு வாரம் முழுவதும் உங்களுக்காக ஒதுக்குங்கள். ஜப்பானிய சுஷிக்காக வரிசையில் மூன்று மணிநேரம் காத்திருந்து, [ஆன்- சைட் உணவகம்] பரோனில் துக்காவுடன் டேட் புட்டிங் செய்து மகிழுங்கள், மேலும் ஆஸ்திரேலிய அரங்கில் நட்சத்திரங்களுக்குக் கீழே கனவு காணுங்கள்." என்று அவர் உற்சாகத்துடன் கூறுகிறார்.
துபாய் கடந்த தசாப்தத்தில் சூரிய ஆற்றல், நீர் பாதுகாப்பு, பசுமை கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் பெரும் முதலீடுகளுடன் விடாமுயற்சியுடன் உழைத்துள்ளது. எக்ஸ்போ 2020 சஸ்டைனபிலிட்டி அரங்கையும் நடத்துகிறது. ஆற்றலை உருவாக்கும் போது நிழலை வழங்கும் சோலார் மரங்கள் மற்றும் 9,000 தாவரங்கள் மற்றும் மூலிகைகளை வளர்க்கும் ஒரு பெரிய செங்குத்து பண்ணை போன்ற திட்டங்களையெல்லாம் காட்சிப்படுத்துகிறது.
இந்த தொற்றுநோய் எதிர்பாராத விதமாக உள்ளூர் பொருட்கள் மற்றும் திறமைகளோடு செயல்படும் சமையல்காரர்களிடத்தில் ஒரு ஏற்றத்தை உருவாக்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு சில புதிய இடங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று ஜான்ஸ்டன் கூறுகிறார். அவருக்குப் பிடித்த சில பண்டங்களில் Orfali Bro's அதன் அரபு உத்வேகத்திற்காக அடங்கும்; Tresind Studio அதன் உயர்தர இரவு உணவு மற்றும் காலை உணவுக்காகப் பிடிக்கும்; மற்றும் தி பார்ன் சிறப்புக் காபி பார் மற்றும் அவர்களின் இனிப்பு உருளைக்கிழங்கு அப்பத்தை மறக்கவே முடியாது.
ஜப்பானிய உற்சாகத்தை உள்ளூர் தயாரிப்புகளுடன் கலந்து தனித்துவமாக எடுக்க, மொஹமட் ஈடன் ஹவுஸின் கூரையிலும் அதன் ஓமகேஸ் மெனுவிலும் மூன்ரைஸை பரிந்துரைக்கிறார். "உதாரணமாக, ராஸ் அல் கைமாவிலிருந்து [துபாயிலிருந்து 100 கிமீ வடகிழக்கில் உள்ள எமிரேட்] தேனுடன் ஸ்பெயினிலிருந்து வரும் சுட்டோரோ ஒரு உணவு" என்று அவர் கூறுகிறார். வெறும் எட்டு இருக்கைகளுடன், இது வழக்கமாக முழுமையாக முன்பதிவு செய்யப்படும், எனவே தவறாமல் முன்கூட்டியே முன்பதிவு செய்யுங்கள் என்கிறார்.
ஓவேஷன் டிராவல் குழுமத்தின் பயண ஆலோசகர் மற்றும் அமீரக வாசியான விபா தவான், போகாவை பரிந்துரைக்கிறார். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மீன் பண்ணையில் உள்ள சாமன் மற்றும் உள்ளூர் ஒட்டக பால் பண்ணைகளிலிருந்து வரும் பால் முதலான உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்துகிறது. துபாயில் உள்ள முதல் கஃபேக்களில் ஒன்றான தி சம் ஆஃப் அஸ், வெண்ணெய் விதை வைக்கோல்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாறியது மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய டேக்அவே கோப்பையைக் கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடியை வழங்குகிறது.
நகரத்தின் இத்தகைய முயற்சிகளை இன்னும் ஆழமாகப் பார்க்க, தவான், நாட்டின் மிகப்பெரிய தனியார் ஆர்கானிக் பண்ணையான எமிரேட்ஸ் பயோ ஃபார்மைப் பார்க்கப் பரிந்துரைக்கிறார். "ஒரு குழுவாகச் சுற்றுப்பயணம் செய்வதோடு சூரிய அஸ்தமன அமர்வுக்கும் ஒரு முன்பதிவு செய்யுங்கள்" என்று அவர் கூறுகிறார். "இது உங்களுக்கு ஏக்கர் கணக்கிலான நிலத்தைச் சுற்றி ஒரு ஆழமான பார்வையைத் தருகிறது, அதைத் தொடர்ந்து உங்கள் சொந்த காய்கறிகளை அறுவடை செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். அவை ஆண்டு முழுவதும் பாப்-அப் டைனிங் அனுபவத்தையும் வழங்குகின்றன." இப்பகுதியின் இயற்கையான பாலைவனத்தை அனுபவிக்க, அல் மஹா ரிசார்ட் மற்றும் ஸ்பாவை அவர் பரிந்துரைக்கிறார். துபாயின் முதல் தேசிய பூங்காவிற்குள் அமைந்துள்ள இந்த ஐந்து நட்சத்திர ரிசார்ட், அழிந்து வரும் அரேபிய ஓரிக்ஸ் போன்ற மான் இனம் உட்படப் பாலைவனத்தின் தனித்துவமான சூழலியலைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அரேபியாவிலேயே மிகப்பெரிய 300 ஓரிக்ஸ் மந்தையைக் கொண்ட கூட்டம், பல பத்தாண்டுக்கால பாதுகாப்பு முயற்சிகளுக்குப் பிறகு இப்போது சுதந்திரமாக சுற்றித் திரிகிறது. சுற்றுலா வழிகாட்டிகள் கால்நடையாக, ஒட்டகம் மற்றும் குதிரையில் வழிகாட்டப்பட்ட வனவிலங்கு சுற்றுப்பயணங்களை வழங்குகிறார்கள். நகரின் மையப்பகுதியில் ஒரு அனுபவத்திற்காக, டிசம்பர் 2021 இல் திறக்கப்பட்ட புதிய 25 மணிநேர ஒன் சென்ட்ரல் ஹோட்டல், அரபு மொழியில் கதை சொல்லி ஹக்காவதி கருப்பொருளில் பார்வையாளர்களைத் தங்கவைத்து நாட்டின் பாரம்பரியங்களைக் கொண்டாடுகிறது. 5,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட வட்ட வடிவ "ஃபவுண்டன் ஆஃப் டேல்ஸ்" நூலகத்துடன் இந்த அனுபவம் துவங்குகிறது. உள்ளூர் கலைஞர்களின் படைப்புக்களோடு சுழலும் அமைப்பில் நம்மை ஈர்ப்பதில் முதலிடம் வகிக்கிறது. மேலும் ஹோட்டல் முழுவதும் பெடூயினால் ஈர்க்கப்பட்ட கலை மற்றும் அலங்காரத்துடன் தொடர்கிறது. இது பண்டைய மற்றும் நவீன நாடோடிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறது .
ஒமிக்ரான் பிறழ்வின் பயணக் கட்டுப்பாடுகள் வேகமாக மாறி வருகின்றன, எனவே சமீபத்திய அறிவிப்புகள் மற்றும் தேவைகளுக்கு அமீகரம் துபாய் பயணப் பக்கத்தைப் பார்க்கவும். தற்போது, உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் பார்வையாளர்கள் வருகையின் போது அவர்கள் விரைவான சோதனைக்கு உட்பட தயாராக இருக்க வேண்டும். தடுப்பூசி போடாத பயணிகள் புறப்பட்ட 72 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனையை வழங்க வேண்டும். சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்கள் அல்லது அதன் வழியாகப் பயணிப்பவர்களுக்கான பயணம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. எது எப்படியோ ஓமிக்ரான் போட்டுத்தாக்கும் இந்த உலகில் அமீரகமும், சர்வதேச கண்காட்சியை நடத்தும் அதன் துபாய் நகரமும் சுற்றுலா செல்பவர்களுக்காகத் திறந்தே இருக்கிறது. பயமில்லாமல் நீங்கள் எதிர்காலத்தை உணரவும், நிகழ்கால அச்சங்களில் இருந்து விடைபெறவும் ஒரு எட்டு துபாய் சென்று வரலாம்.