ரஷ்யா எரிபொருள் : திணறும் உலக நாடுகள் - இதுதான் உண்மையான களநிலவரம்

ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான தடையானது ரஷ்ய ஆதாரங்களைச் சார்ந்திருக்கும் ஐரோப்பிய நாடுகளால் உண்மையில் எதிர்க்கப்படுகின்றன. அதற்குப் பதிலாக ரஷ்ய நிலக்கரி மீதான தடையை உள்ளடக்கி அதன் தடைகளை விரிவுபடுத்த ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது.
Russia
Russia Twitter

பிப்ரவரி 24 இல் ரஷ்யா உக்ரைன் மீதான போரைத் தொடுத்தது. 53 நாட்களைக் கடந்த பின்னரும் போர் தொடர்கிறது. ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். மரியோபோல் போன்ற நகரங்கள் சுடுகாடாக மாற்றப்பட்டிருக்கின்றன.

கரீபியின் கடலில் ரஷ்யாவின் போர்க்கப்பலை உக்ரைன், ஏவுகணை தாக்குதல் நடத்தி மூழ்கடித்த பிறகு ரஷ்யா மீண்டும் தலைநகர் கீவில் ஏவுகணைகளை வீசி வருகிறது. கீவைச் சுற்றியுள்ள போச்சா போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் ரஷ்யப் படைகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இது இனப்படுகொலை என சில நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் மேற்குல நாடுகள் நாளுக்கு நாள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அதிகரித்து வருகின்றன. அதே போன்று உக்ரைனுக்கு ஆயுத உதவியும் வழங்குகின்றன. ரஷ்ய அதிபர் புடினோ எத்தனை ரஷ்ய வீரர்கள் செத்தாலும் உக்ரைனை அழிக்காமல் விடமாட்டேன் என்று வெறியோடு இருக்கிறார். இந்த மோதல் மேலும் அதிகரிப்பதன் மூலம் பதட்டம் கூடுவது, சிறு அளவிலான அணு ஆயுதம் உக்ரைன் மீது வீசப்படுமா என்ற கேள்விகளெல்லாம் வல்லுநர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Natural Gas
Natural GasTwitter

இவ்வளவு இருந்தும் ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் வாங்கும் எரிவாயு மட்டும் இன்னும் நடைபெறுகிறது.

ரஷ்ய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான காஸ்ப்ரோம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு ஒரு அறிக்கை அளித்திருக்கிறது. அதில் உக்ரைன் வழியாக மில்லியன் கணக்கான டன் எரிவாயுவை இன்னும் ஐரோப்பாவிற்குத் தொடர்ந்து அனுப்புதாகத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், காஸ்ப்ரோம் ஏப்ரல் 17 ஆம் தேதியில் எரிவாயுக்கான கோரிக்கைகள் 57 மில்லியன் கன மீட்டாராக இருந்ததாகத் தெரிவித்தது. இது கடந்த வாரம் ஏப்ரல் 8 ஆம் தேதி 91.3 மில்லியன் கன மீட்டாராக இருந்தது என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. பத்து நாட்களில் எரிவாயு கோரிக்கை குறைந்துள்ளது.

ரஷ்ய நிறுவனமான காஸ்ப்ரோம் உக்ரைன் வழியாகவே இயற்கை எரிவாயுவை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புகிறது. இந்த போக்குவரத்து சேவைக்காக உக்ரேனிய அரசுக்குச் சொந்தமான நாஃப்டோகேஸ் நிறுவனத்திற்கு காஸ்ப்ரோம் 2020 ஆம் ஆண்டில் 2.11 பில்லியன் டாலர் செலுத்தியது.

ஐரோப்பியச் சிந்தனைக் குழுவான ப்ரூகெல் தொகுத்த தரவின் படி 2021 ஏப்ரல் முதல் வாரத்தில் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட எரிவாயுவை விட ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு இந்த ஆண்டு ஏப்ரல் முதல்வாரத்தில் எரிவாயு இறக்குமதி 26% குறைந்திருக்கிறது.

Natural Gas
Natural Gas Twitter

ஐரோப்பா தனது எரிவாயுவில் மூன்றில் ஒரு பங்கிற்கு ரஷ்யாவை நம்பியுள்ளது

சர்வதேச எரிசக்தி அமைப்பின் கூற்றுப்படி, ஐரோப்பாவில் நுகரப்படும் எரிவாயுவில் 40% ரஷ்யாவிலிருந்து வருகிறது. பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பிறகு எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது. மேலும் இந்த ஆண்டு ரஷ்ய எரிபொருளைச் சார்ந்து இருப்பதை மூன்றில் இரண்டு பங்கு குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

Insider's Bill Bostock "இன்சைடர்ஸ் பில் பாஸ்டாக் அறிக்கையின்படி, ஐரோப்பா அதன் லட்சிய திட்டமான நோர்ட் ஸ்ட்ரீம் Nord Stream 2 குழாய் வழி திட்டத்தையும் நீக்கியுள்ளது. இது ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவிற்குக் குழாய் வழியாக எரிவாயுவகை கொண்டு செல்லும் திட்டமாகும். பெரும்பாலும் ரஷ்ய எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோம் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த பைப்லைன் கட்டுவதற்கு 10 பில்லியன் யூரோக்கள் அல்லது 11.5 பில்லியன் டாலர் செலவாகியிருக்கிறது. மேலும் இந்த குழாய் வழியாக ஒவ்வொரு ஆண்டும் 55 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்ல முடியும்.

ஐரோப்பிய நாடுகள் மற்ற நாடுகளிடமிருந்து எரிவாயுவைக் கொள்முதல் செய்வதை அதிகரிப்பதன் மூலமும், புதுப்பிக்கத்தக்க எரிபொருள் ஆதாரங்களை உருவாக்குவதன் மூலமும் 2030 ஆம் ஆண்டிற்குள் ரஷ்ய எரிவாயு மீதான அதன் சார்புநிலையை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது.

ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்ய எரிசக்தி மீதான ஐரோப்பியத் தடையின் அச்சுறுத்தலை, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கருதுகின்ற அளவுக்குத் தீவிரமாகக் கருதவில்லை.

Russsia
RusssiaTwitter

"நட்பற்ற நாடுகளின் பங்காளிகள் என்று அழைக்கப்படுபவர்கள் ரஷ்ய எரிசக்தி வளங்கள் இல்லாமல், எடுத்துக்காட்டாக, இயற்கை எரிவாயு இல்லாமல் இயங்க முடியாது என்று ஒப்புக் கொள்கிறார்கள்," என்று புடின் ஏப்ரல் 14 அன்று ஒரு தொலைக்காட்சி கூட்டத்தில் அலட்சியமாகக் கூறினார் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

உண்மையில், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான தடையானது ரஷ்ய ஆதாரங்களைச் சார்ந்திருக்கும் ஐரோப்பிய நாடுகளால் உண்மையில் எதிர்க்கப்படுகின்றன. அதற்குப் பதிலாக ரஷ்ய நிலக்கரி மீதான தடையை உள்ளடக்கி அதன் தடைகளை விரிவுபடுத்த ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது.

ஆயினும்கூட, அத்தகைய தடையை ஐரோப்பிய ஒன்றியம் சமாளிக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம், புட்டிலின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆண்ட்ரே இல்லரியோனோவ் பிபிசியின் நிகழ்ச்சி ஒன்றில், ரஷ்ய எரிவாயு மற்றும் எண்ணெய் ஐரோப்பாவிற்குள் செல்வதை முற்றிலுமாகத் தடுப்பது "சில மாதங்களில்" போரை நிறுத்தும் என்று கூறினார்.

இதற்கிடையில், உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கி, ஏப்ரல் 7 அன்று, ஐரோப்பியர்கள் ரஷ்ய எரிவாயுவை வாங்குவதற்காக உக்ரேனிய உயிர்களைப் பணமாகச் செலுத்துகிறார்கள் என்று வேதனையுடன் கூறினார்.

Russia
உக்ரைன் ரஷ்யா : பிரமாண்ட கப்பலை தாக்கியதா Ukraine? கோபமான Russia - தீவிரமடையும் போர்

இப்படி ஒருபுறம் ரஷ்யப் போரை ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பினும், உக்ரைனிய அகதிகளைப் பராமரித்து வந்தாலும், ரஷ்யாவிடமிருந்து வாங்கும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை நிறுத்த முடியவில்லை. அதற்கான மாற்றம் உடனடியாக சாத்தியமில்லை.

இதனால் போரை நடத்தும் ரஷ்ய அதிபர் புடின் யார் சொல்லுக்கும், எந்த தடைக்கும் அடங்க மாட்டார் போலத் தோன்றுகிறது. இதன் விளைவாக உக்ரைன் மக்கள் கொல்லப்படுவதும் அதிகரிக்கும். தட்டிக் கேட்பார் இல்லாத ரஷ்யாவின் அநீதியாக இந்த ஆக்கிரமிப்பு போரை நிறுத்துவதற்கு ஐரோப்பிய நாடுகள் அப்படி ஒரு கறாரான முடிவை எடுக்காவிட்டால் போர் பேரழிவாக உக்ரைனுக்கு மாறுவது உறுதி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com