சீஷெல்ஸ்: அடிமைகளை கொண்டு கட்டப்பட்ட ஒரு நகரம் - ஓர் ஆச்சர்ய பயணம்

1835, பிப்ரவரி 1 அன்று, சீஷெல்ஸில் 6,521 அடிமைகள் விடுவிக்கப்பட்டனர். அந்த நேரத்தில், அந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையே வெறும் 7,500 ஆகத்தான் இருந்தது. இவர்களில் கிட்டத்தட்ட 90% பேர், விடுவிக்கப்பட்ட அடிமைகளாகத்தான் இருந்தனர்.
சீஷெல்ஸ்: அடிமைகளை கொண்டு கட்டப்பட்ட ஒரு நகரம்
சீஷெல்ஸ்: அடிமைகளை கொண்டு கட்டப்பட்ட ஒரு நகரம்Pexels
Published on

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்குமான தலைநகரங்களுக்கும் ஏதாவது சில சிறப்புகள் இருக்கும். அந்த வகையில் சீஷெல்ஸ், உலகின் மிகச் சிறிய தலைநகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியப் பெருங்கடலில் 115 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டம்தான் சீஷெல்ஸ் நாடு.


நீலவானமும், நீலக்கடலும் நிலத்தில் சந்தித்து கை குலுக்கிக் கொள்வது போன்றதொரு அற்புதமான காட்சியை சீஷெல்ஸில் காணலாம். இங்கிருக்கும் மாஹே என்ற மிகப்பெரிய தீவில், கடல் மட்டத்திலிருந்து 1,800 கி.மீ. உயரத்தில் பிரமாண்டமாக நிற்கும் எரிமலை முதல், இங்கு காணப்படும் ஒவ்வொரு விஷயமுமே பிரமாண்டமானதாகவும், மனதை கொள்ளைக் கொள்ளும் இயற்கை அழகுடனும் இருக்கிறது.


மேலும் சுவிஸ் வங்கிகளைப் போன்றே பன்னாட்டு பெரு நிறுவனங்கள், பல்வேறு நாடுகளின் பண முதலைகள், தொழிலபதிபர்களுக்கான 'கருப்பு பண வங்கிகள்' சீஷெல்ஸிலும் உண்டு. கருப்பு பணத்தைப் பதுக்குவதற்கான வரியில்லா சொர்க்க தீவு இது. இதனாலேயே இங்கு பல பன்னாட்டு வங்கிகள், தங்களது கிளைகளை அமைத்துள்ளன.

NewsSense

உலகின் மிகச் சிறிய தலைநகர்

சீஷெல்ஸின் தலைநகராக திகழும் மிகச் சிறிய நகரான விக்டோரியா நகர் மட்டுமே இந்த பிரமாண்ட தன்மையிலிருந்து விலகி நிற்கிறது.

உலகெங்கிலும் சிறிய அளவிலான மக்கள்தொகை கொண்ட பல தலைநகரங்கள் உள்ளன. உதாரணமாக சான் மரினோ அல்லது வாடிகன் சிட்டி அல்லது ஒரு சில சிறிய பசிபிக் தீவு நகரங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இருப்பினும், விக்டோரியாவின் மக்கள் தொகை சுமார் 30,000 என்ற அளவிலேயே உள்ளது. இது ஒரு நாட்டின் அதிகார மைய இடத்தில் இருக்கக்கூடிய மக்கள் தொகை எண்ணிக்கைக்கான அளவின்படி பார்த்தால், குறைவானதுதான்.

அதே போன்றுதான் மாஹேவின் குறுகிய கடற்கரைப் பகுதியையொட்டி அமைந்துள்ள அதன் சர்வதேச விமான நிலையத்திற்கான இடம், தலைநகருக்குச் சமமான சிறிய இடத்தையே கொண்டுள்ளது. வெறும் 20 சதுர கி.மீட்டரில் அமைந்துள்ள மாஹேவின் நெருக்கமான வீதிகளைச் சுற்றி வர 10 நிமிடங்களே ஆகும். சுற்றியுள்ள மலைகளில், மிகவும் செங்குத்தான நிலப்பரப்பு தொடங்கும் இடம் வரை வீடுகள் அமைந்துள்ளன.

விக்டோரியாவின் இந்த தன்மைக்கு, கடந்த காலத்தில் இயற்கையாகவே அமைந்த அதன் பூகோள ரீதியிலான பொறியியல் அமைப்பே முக்கிய காரணமாகும்.

Pinterest

சுற்றுலாவாசிகளின் சொர்க்க பூமி

"விக்டோரியாவின் பாதி நிலம் இயற்கையாகவே கடலால் உருவானதுதான். இப்போது டாக்ஸி ஸ்டாண்ட் இருக்கும் இடத்தில் கடல் இருந்தது" என்கிறார் விக்டோரியாவில் பிறந்து, தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இங்கு கழித்த சீஷெல்ஸின் சிறந்த கலைஞர்களில் ஒருவரான ஜார்ஜ் கேமில்.

வேலை, குடும்பத்தினரை கவனிப்பது போன்ற அன்றாட நெருக்கடிகள் சூழ்ந்த உலக வாழ்க்கையின் இரைச்சல்களிலிருந்து விடுபட்டு சுற்றுலா வர விரும்புபவர்களுக்காவே, கடற்கரைகள் மற்றும் பனை மரங்கள் சூழ அமைந்துள்ள ஒரு மன அமைதி தரக்கூடிய சொர்க்க பூமிதான் சீஷெல்ஸ்.

மிகவும் குறுகிய நிலப்பரப்பைக் கொண்ட விக்டோரியா நகரம், வியக்கத்தக்க ஆழமான வேர்களைக் கொண்டது. அமெரிக்கப் புரட்சிப் போர் மூண்டிருந்த நேரத்தில், 1778 ஆம் ஆண்டில் பிரெஞ்சுக்காரர்கள்தான் இந்த நகரத்தை நிறுவினர். அதுவரை ஆஸ்திரேலியாவின் தண்டனைக் கைதிகளுக்கான காலனியாக பரிசீலிக்கப்பட்ட இந்த இடமும், ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி நிலமும் ஐரோப்பியர்களின் காலடி படாமல்தான் இருந்தது. அதன் பின்னரான புதிய குடியேற்றம்தான், மர வேலைப்பாடுகளுடன் கூடிய கிரானைட் வீடுகள், ராணுவ முகாம்கள் மற்றும் ஆமை வளர்ப்பு கூடாரங்கள் போன்றவற்றுடன் அமைந்த விக்டோரியா நகரம், 'ராஜாவின் ஸ்தாபனம்' என்றும் அழைக்கப்பட்டது.

சீஷெல்ஸ்: அடிமைகளை கொண்டு கட்டப்பட்ட ஒரு நகரம்
செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு - அட்டகாச தகவல்
அடிமைகளால் கட்டமைக்கப்பட்ட நகரம்
அடிமைகளால் கட்டமைக்கப்பட்ட நகரம்NewsSense

அடிமைகளால் கட்டமைக்கப்பட்ட நகரம்

இந்த நகரத்தை முதன்முதலில் கட்டமைத்த பிரெஞ்சுக்காரர்களோ அல்லது 1811 ல் அதைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்களோ, இந்த நகர வளர்ச்சிக்கு பெரிய அளவில் பங்காற்றி விடவில்லை. இது ஒரு துறைமுகமாக இருந்தது. கடல் வழி பயணமாக வேறு இடங்களுக்குச் செல்பவர்களுக்கு, வழியில் தங்கி இளைப்பாறுவதற்கேற்ற வசதியான துறைமுக நகரமாக இருந்தது. இது மிகச் சிறியதாகவும் முக்கியமற்றதாகவும் இருந்ததால், ஆங்கிலேயர்களுக்கு 'விக்டோரியா' என்று பெயரை மாற்ற 30 ஆண்டுகள் ஆனது. அதுவும் 1841 ல் இளவரசர் ஆல்பர்ட்டுடனான ராணியின் திருமணத்தை நினைவுகூரும் வகையில் இந்தப் பெயரைச் சூட்டினார்கள்.

விக்டோரியாவின் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகளில் ஒன்று எனச் சொன்னால், 1862 ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று இங்கு பெய்த கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்த சம்பவத்தைக் குறிப்பிடலாம். 1890 ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்திற்குச் சொந்தமான ஹோட்டல் ஈக்வேட்டூர் திறக்கப்பட்டது. இதுதான் பின்னர், சீஷெல்ஸ் உருவாக காரணமாக அமைந்த சுற்றுலா வணிகத்திற்கு முன்னோடியாக அமைந்தது.

விக்டோரியாவில் இப்போது உள்ள மிகப் பழமையான கட்டடம் என்றால் அது, தேசிய வரலாற்று அருங்காட்சியகம்தான். முதலில் 1885 ல் கட்டப்பட்ட இந்தக் கட்டடம்தான், சீஷெல்ஸின் உச்ச நீதிமன்ற கட்டடமாக முதலில் செயல்பட்டது. பின்னர், 2018 ஆம் ஆண்டுதான் இக்கட்டடம் புதுப்பிக்கப்பட்டு, அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. ஆரம்ப காலனித்துவ காலங்களை விளக்கும் ஏராளமான வரலாற்றுத் தகவல்கள் மற்றும் கண்களைக் கவரும் சுவர் சித்திரங்கள், அடிமைகள் விடுவிப்பு மற்றும் அதன் குரூர கலாச்சார வரலாறு ஆகியவற்றை விளக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த அருங்காட்சியகம். விக்டோரியா (மற்றும் சீஷெல்ஸின்) நகரம் எவ்வாறு நிறுவப்பட்டது, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற கட்டிடக்கலை அடையாளங்கள் போன்றவற்றையும் இங்கு காணலாம். 1835, பிப்ரவரி 1 அன்று, சீஷெல்ஸில் 6,521 அடிமைகள் விடுவிக்கப்பட்டனர். அந்த நேரத்தில், அந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையே வெறும் 7,500 ஆகத்தான் இருந்தது. இவர்களில் கிட்டத்தட்ட 90% பேர், விடுவிக்கப்பட்ட அடிமைகளாகத்தான் இருந்தனர். இவர்கள்தான் பின்னர், கிரியோல் மொழி பேசும் இந்த தேசத்தை நிறுவுவதற்கான அடித்தளமாக செயல்பட்டார்கள்.

சீஷெல்ஸ்: அடிமைகளை கொண்டு கட்டப்பட்ட ஒரு நகரம்
வேடர்கள் : அழிவின் விளிம்பில் இலங்கை தொல்குடிகள் | Podcast
NewsSense

வியப்பூட்டும் விநாயகர் கோயில், வித்தியாசமான கட்டடங்கள்


விக்டோரியா நகரம், நெருக்கமான தெருக்கள் மற்றும் பாதைகளில் கார்கள் மற்றும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியக்கூடியதாகவே இருக்கிறது. மான் கொம்பு சித்திரங்களுடன் கூடிய செங்கற்களால் ஆன கட்டடங்கள், நகருக்கு கூடுதல் அழகை சேர்க்கின்றன. இன்னொருபுறம் செல்வின்-கிளார்க் சந்தையைச் சுற்றி, மீன் வியாபாரிகள், தேங்காய் மற்றும் வாழைப்பழங்கள் முதல் வெண்ணிலா காய்கள் மற்றும் மிளகாய் வரையிலான பல வகையான பொருட்களை விற்பவர்கள், அவற்றை வாங்க வருபவர்களால் ஏற்படும் இரைச்சல்கள் என நகரம் ஜே... ஜேவென காட்சித் தருகிறது. ஆல்பர்ட் தெருவில், பழைய மர வணிகக் கிடங்குகள், மங்கிய கண்ணாடிச் சுவர் கொண்ட சூதாட்ட விடுதிகள் பிரதானமாக ஆக்கிரமித்துள்ளன. அருகில், 1934 இல் கட்டப்பட்ட தேவாலய மத குருக்களுக்கான குடியிருப்பின் ஆடம்பரமான பால்கனி முகப்பு உள்ளது. குயின்சி தெருவில், நவீன கட்டடங்களுக்கு மத்தியில் இந்து ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது வியப்பூட்டுவதாகவே உள்ளது.

சீஷெல்ஸ் என்றாலே, கடற்கரைகள் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், கடற்கரைகள் மட்டுமல்ல. சுற்றுலாவே இதன் பிரதான வருவாயாக இருக்கும் நிலையில், சாதாரண சீஷெல்ஸ் பிரஜை, எங்கு வியாபாரம் செய்ய வருகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க விரும்பினால், அது விக்டோரியா நகரம்தான். எனவே சீஷெல்ஸின் தவிர்க்க முடியாத நகரம் விக்டோரியா.

இன்னும் என்ன... அடுத்த முறை ஃபாரின் டூருக்கு திட்டமிட்டால், கட்டாயம் சீஷெல்ஸையும் உங்களது லிஸ்ட்டில் சேருங்கள் பாஸ்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com