சர்வாதிகாரிகளின் இறுதிக் காலம் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அது அவர்களது சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்டும் வகையில் மக்கள் புரட்சியால் தீர்மானிக்கப்படுகிறது. இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை மக்கள் ஆக்கிரமித்த பிறகு அதிபர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டமெடுத்தார்.
இங்கே இத்தாலியப் பாசிசக் கட்சியின் தலைவரும் சர்வாதிகாரியும் பிரதமருமான முசோலினி இரண்டாம் உலகப் போரில் எப்படி ஒரு கோரமான முடிவை சந்தித்தார் என்பதைப் பார்ப்போம்.
ரோமானியப் பேரரசை மீண்டும் உருவாக்கும் பெனிட்டி முசோலினியின் கனவு ரோமப் பேரரசு கலைந்தது போலவே ஏப்ரல் 25, 1945இல் இடிந்து விழுந்தது. தெற்கில் இருந்து நேசநாட்டுப் படைகள் முற்றுகையிட வடக்கு இத்தாலியில் ஒவ்வொரு நகரங்களாகப் பாசிச எதிர்ப்பு கட்சிக்காரர்கள் கைப்பற்றி வந்தனர். இதனால் முசோலினியின் அதிகாரம் ஆட்டம் கண்டது.
61 வயதான இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி தன்னை நவீன கால ஜூலியஸ் சீசராக கருதிக் கொண்டார். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் 1922இல் பிரதம மந்திரியாகப் பதவியேற்றார். ஜெர்மனியின் நாஜி ஹிட்லரோடு அவர் கூட்டு வைத்துக் கொண்டார். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி அணியில் நின்று போரிட்டார். ஆனால் அச்சமயம் அவரது இத்தாலிய இராணுவம் காலாவதியாகி மோசமான நிலையில் இருந்தது.
ஜூலை 1943 வாக்கில் சிசிலி மற்றும் ரோம் நகரின் மீது நேசநாட்டுப் படைகள் குண்டு வீசி தாக்கின. இதனால் இத்தாலியின் மன்னர் விக்டர் இம்மானுவேல் 3, முசோலினியை அதிகாரத்திலிருந்து அகற்றி விட்டு வீட்டுக் காவலில் வைத்தார்.
அவரை மீட்பதற்கு 1943இல் ஜெர்மனியின் நாஜி பாராட்ரூப் படைகள் ஒரு துணிச்சலான கமாண்டோ ஆபரேசனை நடத்தினர்.
அதன் மூலம் முசோலினி அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அபெனைன் மலை விடுதியிலிருந்து மீட்கப்பட்டார். ஹிட்லர் தனது நண்பரான முசோலினியை இத்தாலியின் சோசலிச குடியரசின் தலைவராக அறிவித்தார். இந்த தலைமை செல்லுபடியாகும் இடம் ஜெர்மனியின் நாஜி இராணுவம் ஆக்கிரமித்துள்ள வடக்கு இத்தாலியாகும்.
ஆனால் ஏப்ரல் 25, 1945இல் நாஜி ஜெர்மனி தனது பிடியிலிருந்த வடக்கு இத்தாலியை இழந்தது. முசோலினி தனது கோட்டையான மிலனை இழந்து கொண்டிருந்தார். இதனால் மிலனின் கார்டினல் ஆல்ஃபிரடோ ஷூஸ்டரின் அரண்மனையில் பாசிச எதிர்ப்பு கட்சிக்காரர்களின் குழு ஒன்றைச் சந்திக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அவருக்குத் தெரியாமல் ஜெர்மனியின் நாஜிக்கள் சரணடைவதற்கான பேச்சு வார்த்தைகளை தொடங்கியதை அறிந்து கோபம் கொண்டார்.
எனவே முசோலினி அரண்மனையை விட்டு வெளியேறத் திட்டமிட்டார். 1939ஆம் ஆண்டு தனது காதலிக்கு பரிசாக வாங்கி ஆல்ஃபா ரோமியோ ஸ்போர்ட் காரில் தனது 33 வயது காதலி கிளாரா பெடாச்சியுடன் மிலன் நகரை விட்டு வெளியேறினார். இருவரும் ஜெர்மன் வீரர்கள் பாதுகாப்புடன் வடக்கு நோக்கி சுவிட்சர்லாந்தின் எல்லையை நோக்கிச் சென்றனர்.
முசோலினி ஒரு ஜெர்மன் பாணியிலான ஹெல்மெட் மற்றும் கோட் அணிந்திருந்தார். ஆனால் ஏப்ரல் 27 அன்று அவர் டோங்கோ ஏரிக்கரை நகரத்தில் பாசிச எதிர்ப்பு கட்சிக்காரர்களிடம் மாறுவேடம் போட்டும் தப்பிக்க முடியவில்லை. 20 ஆண்டுகளாக முசோலினியின் புகைப்படம் சுவரொட்டி, சிலைகள் என அவரது ஆளுமை வழிபாட்டை உருவாக்கியிருந்தார்கள். செய்தித்தாள்களின் அன்றாடம் அவரது புகைப்படம் வெளிவரும்.
இப்படி இத்தாலி முழுவதும் அறியப்பட்டிருந்த இந்த பாசிஸ்டின் படம் அனைவருக்கும் தெரியும். அவர் மொட்டையடித்திருந்தாலும் பாசிச எதிர்ப்பு கட்சிக்காரர்கள் அவரை அடையாளம் கண்டு பிடித்து விட்டனர்.
அவர்கள் முசோலினியையும் பெட்டாச்சியையும் கைது செய்தார்கள். ஜெர்மன் நாஜிக்கள் மீண்டும் முசோலினியை விடுவிக்க முயற்சிப்பார்கள் என்று அஞ்சி பாசிச எதிர்ப்பு கட்சிக்காரர்கள் இந்த ஜோடியைத் தொலைதூர பண்ணை வீடு ஒன்றில் இரவோடு இரவாக மறைத்து வைத்தனர்.
அடுத்த நாள் முசோலினியும் பெட்டாச்சியும் அந்த பண்ணை வீட்டிலிருந்து அகற்றப்பட்டு, கோமோ ஏரியின் கரையில் உள்ள ஜியுலினோ டி மெஸ்ஸெக்ரா என்ற சிறிய கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே ஒரு வில்லா பெல்மொண்டே நுழைவாயிலில் உள்ள கல்சுவரில் இருவரும் நிற்க வைக்கப்பட்டனர்.
அங்கு இருவரும் இயந்திரத் துப்பாக்கியால் சுடப்பட்டனர். இதை யார் செய்தனர் என்பது சர்ச்சைக்குரியதாக உள்ளது. ஆனால் அது கம்யூனிஸ்ட் கட்சித் தளபதி வால்டர் ஆடிசியோவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இருப்பினும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களில் முசோலினியின் உடலுக்கு என்ன ஆனது என்பதில் தெளிவில்லை. ஏப்ரல் 29 முந்தயை நாளில் முசோலினி, பெடாச்சி மற்றும் 14 சக பாசிஸ்டுகளின் சடலங்கள் ஒரு டிரக்கில் வைக்கப்பட்டு பாசிச எதிர்ப்பு சக்திகளின் அடையாளமான மிலன் நகரின் பியாஸ்ஸேல் லொரேட்டோவில் குப்பைகள் போல கொட்டப்பட்டன.
இங்குதான் எட்டு மாதங்களுக்கு முன்பு ஹிட்லரின் படையான எஸ்எஸ் உத்தரவின் கீழ் செயல்படும் பாசிஸ்டுகள் 15 பாசிச எதிர்ப்பு கட்சிக்காரர்களைத் தூக்கிலிட்டு அவர்களது உடல்களைப் பகிரங்கமாகக் காட்சிப்படுத்தினர்.
பிறகு ஜூலை 1943 இல் முசோலனியின் கைதுக்குப் பிறகு மகிழ்ச்சி அடைந்த மக்கள் சர்வாதிகாரியின் உருவங்கள், சிலைகள், படங்களை சிதைத்தனர். பாசிச எதிர்ப்பு கட்சிகளது தியாகிகள் சதுக்கத்தில் அவர்களுக்கு என்ன நடந்ததோ அதையே முசோலினி முதலான பாசிஸ்டுகளுக்கும் செய்ய மக்கள் நினைத்தனர்.
அவர்கள் சர்வாதிகாரியின் சடலத்தின் மீது உதைத்தும், அடித்தும், எச்சில் துப்பியும், அழுகிய காய்கறிகளை வீசியும் அவமானப்படுத்தினர்.
ஒரு பெண் தனது ஐந்து மகன்கள் பாசிச முசோலனி படைகளால் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்து முசோலினியன் உடலில் ஒரு துப்பாக்கியை வைத்து "கொலை செய்யப்பட்ட என் ஐந்து மகன்களுக்காக இந்த ஐந்து குண்டுகள்" என்று கத்தினார். மக்கள் கூட்டம் பின்னர் முசோலினி, பெடாச்சி மற்றும் பிற பாசிஸ்டுகளின் உடல்களை சதுக்கத்தின் ஒரு மூலையில் உள்ள பெட்ரோல் நிலைய சுவர்களுக்கு கொண்டு சென்று கட்டி வைத்தது.
பிற்பகலில் அமெரிக்க துருப்புகள் உடல்களை கீழே இறக்கி முசோலினியின் சடலத்தை நகரத்தின் பிணவறைக்குக் கொண்டு செல்ல உத்திரவிட்டனர். இந்த நேரத்தில் முசோலினியின் உடல் மோசமாகத் தாக்கப்பட்டிருந்ததால் அடையாளம் காணுவதற்குச் சிரமமாக இருந்தது.
சோவியத் படை ஜெர்மனி தலைநகர் பெர்லினை முற்றுகையிட்டபோது ஹிட்லருக்கு முசோலினியின் மரணச் செய்தி கிடைத்தது. எதிரிகளுக்குத் தன்னைக் கொல்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஹிட்லர் ஏப்ரல் 30 அன்று தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் அவரது சடலம் எரிக்கப்பட்டது. இதற்கிடையில் முசலோனியின் உடல் மிலன் கல்லறைத் தோட்டத்தில் அடையாளம் தெரியாத கல்லறை ஒன்றில் புதைக்கப்பட்டது. ஆனால் அதன் இருப்பிடம் ஒன்றும் ரகசியமல்ல.
1946 ஈஸ்டர் ஞாயிறு அன்று டொமினிகோ லெசிசி மற்றும் சக பாசிஸ்டுகள் முசோலினியின் உடலைத் தோண்டி அருகிலுள்ள நீரூற்றில் கழுவி ஒரு வகையான உயிர்த்தெழுதல் சடங்கு போல செய்தனர். மேலும் அந்தக் கல்லறைக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். முசோலினியின் உடல் 1946 இல் மிலனுக்கு வெளியே உள்ள ஒரு மடாலயத்தில் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு சடலம் கிட்டத்தட்ட நான்கு மாதம் காணவில்லை.
இறுதியில் முசோலினியின் சடலத்தை இத்தாலிய அரசாங்கம் மீட்டெடுத்தவுடன், அது ஒரு பத்தாண்டிற்கும் மேலாக அதன் இருப்பிடத்தை இரகசியமாகவே வைத்திருந்தது. இருப்பினும் 1957இல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி அடோன் ஜோலிக்கு தீவிர வலதுசாரிக் கட்சியின் ஆதரவு தேவைப்பட்டது. அதன் பொருட்டு முசோலினியின் எலும்புகள் அவரது விதவைக்கு வழங்கப்பட்டது.
இறுதியில் முசோலினியின் உடல் அவர் பிறந்த இடமான ப்ரெடாப்பியோவில் உள்ள குடும்ப இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இது இன்றும் நவ பாசிஸ்டுகளின் புனிதத் தளமாக மாறியுள்ளது. தீவிர வலதுசாரிகள் இன்றும் இக்கல்லறைக்கு யாத்திரை வருகின்றனர்.
ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியில் என்னவெல்லாம் கொடுங்கோன்மை நடந்திருந்தாலும் மக்கள் ஒரு நாள் திருப்பித் தாக்குவார்கள் என்பதையே முசோலினியின் இறுதி நாட்கள் எடுத்துரைக்கிறது. கோத்தபய ராஜகபக்சேவிற்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust