இனவாதத்தையும், அரச பயங்கரவாதத்தையும் அரங்கேற்றிய ஆட்சியாளர்களைக் கொண்ட தேசமான இலங்கை, இன்று சந்திக்கிற பொருளாதார நெருக்கடியும், கடன் சுமையும் அந்த நாட்டை படுபாதாளத்தில் தள்ளியுள்ளது.
உணவு பொருட்கள், மருந்து மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலை, ராக்கெட் வேகம் என்பார்களே... அந்த வேகத்தில் நாளுக்குள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு முட்டை 30 ரூபாய், 40 ரூபாய் என விற்கப்படுகிறது. 400 கிராம் பால் பவுடர் பாக்கெட் விலை 300 ரூபாய்க்கும் மேல். இதனால் ஓட்டல்களில் ஒரு கப் பால் டீ 100 ரூபாய் என நினைத்து பார்க்கவே முடியாத மிகக் கடுமையான விலைவாசி உயர்வை அந்த நாட்டு மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமையல் எரிவாயுவின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மண்ணெண்ணை, பெட்ரோல், டீசலுக்கும் மக்கள் அல்லாடுகிறார்கள். கடுமையான விலை உயர்வுக்கிடையேயும் பணம் கொடுத்தாலும், அவை எளிதில் கிடைப்பதில்லை. பெட்ரோல் பங்க்-குகளின் முன்னாள் மக்கள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்துக் கிடக்கிறார்கள். கடந்த ஞாயிறன்று மண்ணெண்ணை வாங்க வந்த 70 வயதுடைய இரண்டு முதியவர்கள், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த நிலையில், அப்படியே மயங்கி சரிந்து உயிரிழந்தனர். இன்னொரு பக்கம் நாட்டின் பல இடங்களில் மின்சாரம் இல்லாமல், இருளில் தவிக்கும் நிலை.
உணவு பொருட்கள் கிடைக்காத ஆத்திரத்தில் அல்லது விலை கொடுத்து வாங்க முடியாத ஆத்திரத்தில், சூப்பர் மார்க்கெட்டுகளும் மளிகைக் கடைகளும் பல இடங்களில் மக்களால் சூறையாடப்படுகின்றன. மக்களைக் கட்டுப்படுத்த ஒருபுறம் ராணுவம் வரவழைக்கப்பட்டாலும் பெரிய பயனில்லை.
இலங்கை அதிபரின் அலுவலகத்தையே மக்கள் முற்றுகையிட்ட அளவுக்கு நிலைமை மோசமாக காணப்படுகிறது.
இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை பெரிதும் நம்பியிருக்கும் தற்போது கையிருப்பு வீழ்ச்சியுடன் கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியில் தத்தளிக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் 14 பில்லியன் டொலர்கள் நட்டத்தை அரசாங்கம் மதிப்பிட்டுள்ள நிலையில், சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை பெரிதும் நம்பியிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு இந்த தொற்றுநோய் பெரும் அடியாக இருந்தது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம், ஆசிய நாடுகளிலேயே மிக அதிகம் எனச் சொல்லும் வகையில் 15.1% என்ற அளவுக்கு அதிகரித்து காணப்பட்ட நிலையில், உணவுப் பொருட்களின் பண வீக்கம் 25.7% என்ற அளவுக்கு மோசமானது.
சர்வதேச நிதி நிறுவனங்களுக்கான கடன், இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடமிருந்து வாங்கி குவித்த கடன் எனப் பெரும் கடன் சுமை இலங்கையின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கையின் ரூபாய் மதிப்பு 275 ரூபாய் என்ற அளவுக்கு மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு சுத்தமாக தீர்ந்துபோனதால்தான், அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு அந்த நாடு தள்ளப்பட்டு, இன்று ஏறக்குறைய திவாலாகும் நிலைக்குச் சென்றுவிட்டது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு, அந்நிய செலாவணியின் கையிருப்பு மிக வேகமாக குறைந்து வந்ததை கருத்தில்கொண்டு இலங்கை அரசு, கடந்த 2021 ஆண்டு ஒரு பொருளாதார அவசரநிலையை பிரகடனப்படுத்தியது, நெருக்கடியை சமாளிக்க ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச, பல்வேறு அத்தியாவசிய பொருட்களை ரேசன் முறையில் வழங்குவதற்கு ராணுவத்தை அழைக்கும் அளவிற்கு நிலைமை மோசமானது.
உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, கொரோனா பாதிப்பு தொடங்கியதிலிருந்து, இலங்கையில் சுமார் 5 லட்சம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே சென்றுவிட்டதாகவும், இது "ஐந்தாண்டு கால முன்னேற்றத்திற்கு சமமான பெரும் பின்னடைவு" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கை இன்று சந்திக்கும் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு 5 முக்கிய காரணங்களை அடுக்குகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( ஜிடிபி) 10 சதவீத பங்கு வகிக்கும் சுற்றுலாத் துறை, கொரோனா தாக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து கனடா உட்பட பல நாடுகள் சமீபத்தில் தனது நாட்டு மக்களை எச்சரித்தன. இங்கிலாந்து, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய 3 நாடுகளிலிருந்துதான் இலங்கைக்கு கிடைக்கும் சுற்றுலா மூலமான முக்கிய வருமானம். கொரோனாவால், சுற்றுலா பயணிகள் வராமல் அந்த வருமானமும் நின்று போன நிலையில், பொருளாதார நிலை மோசமானதற்கு அது முக்கிய காரணமாக அமைந்தது.
அடுத்ததாக, 100 சதவீதம் இயற்கை விவசாயம் செய்ய ரசாயன உரங்களை தடை செய்யும் அரசின் முடிவு பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இயற்கை விவசாயம் உற்பத்தியை பாதியாகக் குறைப்பதால், உணவு பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 'உணவு மாஃபியாவால்' அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டதால் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து, நெருக்கடிக்கு இன்னொரு முக்கிய காரணமாக அமைந்தது.
சீனாவுக்கு மட்டும், இலங்கை கொடுக்க வேண்டிய கடன் 5 பில்லியன் டாலர். இது இலங்கைக்கு பெரிய அளவிலான வெளிநாட்டு கடன் சுமையாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல், 2021 ல் வாங்கிய ஒரு பில்லியன் டாலருக்கான கடன் தொகையையும் இலங்கை திருப்பிச் செலுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் அந்நாடு பெரும் கடன் தொகையைக் கொடுக்க வேண்டியுள்ளது. மேலும், 2019 ல் ராஜபக்சே அதிபரானபோது 7.5 பில்லியன் டாலராக இருந்த இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு, கடந்த நவம்பர் மாதத்தில் வெறும் 1.58 பில்லியன் டாலராக குறைந்துபோனது.
இந்த நிலையில், பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான அந்நியச் செலாவணியை வாங்குவதற்கு இலங்கை செலுத்த வேண்டிய பணத்தின் அளவு அதிகரித்தது. இதன் காரணமாக, அந்நியச் செலாவணி கையிருப்பு கடுமையாக சரிந்து, டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு கடுமையாக சரிந்து போனது. வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கையின் அத்தியாவசியப் பொருட்களான சர்க்கரை, பருப்பு வகைகள், தானியங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கான தேவைக்கு இறக்குமதியையே சார்ந்திருக்கும் நிலை. ஆனால், அதற்கு தேவையான அந்நிய செலாவணி இல்லாமல் போனதால்தான், இலங்கை இன்று பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகள், வளர்ந்த நாடுகள் போன்றவை சற்று மனது வைத்தால்தான், இலங்கை இந்த நெருக்கடியிலிருந்து இலேசாகவாவது மீள முடியும்.
இன்று இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை, மற்ற நாடுகள் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்!