அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தர்ஷன் ஷா. குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர். அமெரிக்க விமானப்படையில் பணிபுரியும் இவருக்கு, நெற்றியில் திலகம் அணிந்து வர அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. திலகம் அணிய தனக்கு சிறப்பு அனுமதி கொடுக்க வேண்டும் என்று ஷா விடுத்து கோரிக்கையை ஏற்றபின் இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு கடந்த 2 ஆண்டுகளாக அவர் முயற்சி செய்து வந்த நிலையில், 22 பிப்ரவரி 2022 அன்று அனுமதி கிடைத்திருக்கிறது.
விமானப்படையின் மருத்துவ டெக்னீஷியனாக பணியில் சேர்ந்திருக்கும் ஷா, தனக்கு கொடுக்கப்பட்ட அனுமதி குறித்து மகிழ்ச்சி கொள்கிறார். " திலகம் அணிந்து பணிக்கு வருவது மிகவும் உற்சாகமளிக்கிறது. என் சக பணியாளர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். மத உரிமையைப் பின்பற்ற எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டேன் என்று அவர்களுக்குத் தெரியும். என் கடின முயற்சியை அவர்கள் பாராட்டுகின்றனர். " என்கிறார் ஷா.
திலகம் அணிந்து வருவதுதான் தனது அடையாளமாக உணர்கிறார் ஷா. " இதுதான் நான். திலகம் அணிந்து ஒரு சிறந்த உணர்வைத் தருகிறது. என் கடினமான காலங்களைக் கடந்துவர திலகம் உதவியிருக்கிறது. வழிக்காட்டியிருக்கிறது. இதன் மூலம் பல நண்பர்கள் எனக்கு கிடைத்திருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக பார்த்தால், இந்த உலகத்தில் நான் யார் என்று எனக்கு உணர்த்தியதே திலகம்தான்" என்கிறார்.
ஷா, தனது மதத்தின் மீது கொண்ட பற்றுக்கு தனது தாத்தா, பாட்டியும் முக்கியக் காரணம் என்கிறார். 2 ஆண்டுகள் அவரக்ளோடு குழந்தை பருவத்தில் வாழந்தபோது, அவர்கள்தான் இந்து மதத்தைப் பற்றியும், சடங்கு, சம்பிரதாயங்கள் பற்றியும் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறார். " "3-ம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து நான் திலகமிட்டுக் கொண்டிருக்கிறேன். அது என்னோடு கலந்த ஒரு பகுதியாகவே நான் உணர்கிறேன். ராணுவ சீருடையில் திலகம் அணிந்து வரவேண்டும் என்பது என் கனவு. ராணுவ உடையும் என் அடையாளம்தான். ஆனால் திலகம்தான் என் முழு அடையாளம். ஒருவர் தன் மதத்தைப் பின்பற்ற அமெரிக்கா உரிமையளிக்கிறது. மிகச் சிறந்த நாடு என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு" என்கிறார் ஷா.
இந்தியாவில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பி வரும் காலத்தில், அமெரிக்க விமானப்படை சீருடையோடு ஒருவர் திலகம் அணிந்து வர அனுமதிக்கப்பட்டிருப்பது வியப்பளிக்கும் ஒன்றாகவும், இந்தியா பின்பற்ற வேண்டிய மத சுதந்திரம் இதுதான் என்றும் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.