தமிழ் திரைப்படங்களில் அஜித்தோ, விஜயோ ஜீன்ஸ் பேண்ட் போடாமல் நடனமாடுவதில்லை. நமது இளைஞர்களைப் பொறுத்தவரை ஜீன்ஸ் பேண்டை ஒரு மாதம் கூட துவைக்கத் தேவையில்லை. சலவைச் செலவு மிச்சம். காரணம் ஜீன்ஸ் துணியின் கடினத்தன்மை காரணமாக அது அத்தனை சீக்கிரம் அழுக்காவதோ, கறையாவதோ, கிழிந்து விடுவதோ இல்லை.
மேற்கத்திய நாடுகளில் மக்களின் துணி அலமாரியில் விதவிதமான ஜீன்ஸ் பேண்ட் ஜோடிகள் தொங்கும். ஒவ்வொரு நிகழ்விற்கும், மனநிலைக்கேற்பவும் அவர்கள் பொருத்தமான ஜீன்ஸ் பேண்டை அணிகிறார்கள். இப்படியாக ஆடை அலமாரியின் அத்தியாவசியப் பொருளாக ஜீன்ஸ் பேண்ட் மாறிவிட்டது.
19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை ஜீன்ஸ் பேண்ட் என்பது கரடுமுரடான வேலை பார்க்கும் தொழிலாளிகளின் உடையாக மட்டுமே இருந்தது. இன்று அது நவநாகரீக சின்னமாக அனைவருக்குமான உடையாக மாறிவிட்டது. அதற்கு சமூகவியல், அரசியல், பாப் கலாச்சாரம் என பல காரணங்கள் இருக்கின்றன. இந்த மாற்றத்திற்காக வரலாறு எடுத்துக் கொண்ட ஆண்டுகள் 150.
ஆரம்பத்தில் கடினமான வேலை பார்க்கும் தொழிலாளிகள் தார்பாய் போன்ற கரடுமுரடான துணியை காலுடையாக அணிந்து கொண்டு வேலை பார்த்தார்கள். அவர்களுடைய கடின உழைப்புச் சூழலுக்கு மெல்லிய துணிகள் பொருந்தவில்லை.
இந்நிலையில் தொழிலதிபர் லெவி ஸ்ட்ராஸ் மற்றும் தையல்காரர் ஜேக்கப் டெவிஸ் ஆகியோரின் சிந்தனையில் உலோக பட்டன்களையும் கடினமான பருத்தி துணியான டெனிம் கால்சட்டையையும் இணைத்து நீல ஜீன்ஸ் பிறந்தது. அது சுரங்கத்தில் கடின வேலை பார்க்கும் தொழிலாளிகளின் சீருடையாக மாறியது.
1930கள் வரைக்கும் ஜீன்ஸ் பேண்ட், வேலைக்கான ஆடை மட்டுமே. குறிப்பாக சுரங்கத் தொழிலாளிகள், மாடுகளை மேய்க்கும் கௌபாய்கள் மற்றும் இதர தொழிலாளிகளின் உடையாக அது பயன்பட்டது. பிறகு ஹாலிவுட் ஸ்டூடியோக்களின் "வெஸ்ட்டர்ன்" எனப்படும் கௌபாய் படங்களின் நாயகர்கள் ஜீன்ஸ் பேண்டை அணியத் துவங்கினர். அதன் பிறகே ஜீன்ஸ் பேண்ட் மைய நீரோட்ட உலகிற்கு சென்றது. அனைத்து மக்களின் பண்பாட்டில் கலந்தது.
ஆரம்பத்தில் லீவைஸ் நிறுவனம் ஜீன்ஸ் பேண்டின் வெளிப்புறத்தில் Levi's® எனும் தனது முத்திரையை சிவப்பு பட்டையில் பதித்து வெளியிட்டது. இன்றுவரை இந்த முத்திரையை லீவைஸ் ஜீன்ஸ் பேண்டின் பின்புறத்தில் பல வண்ணங்களில் நீங்கள் காணலாம். இதே காலத்தில் Vogue எனப்படும் பிரபலமான ஃபேஷன் - நவபாணி அலங்கார – பத்திரிகை தனது அட்டையில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்த மாடலின் படங்களை வெளியிட்டது. இதன் மூலம் ஜீன்ஸ் என்பது இனிமேலும் தொழிலாளிகளுக்கு மட்டுமானது அல்ல என்பது மக்களால் ஏற்கப்பட்டது.
1950 களில் ஜாலியான நீலவண்ண ஜீன்ஸ்
“ஏம்பா டல்லா இருக்க, கூலா இரு" என்று இளைஞர்கள் பேசிக்கொள்ளும் மனநிலைக்கேற்ப ஜீன்ஸ் 1950 களில் அமெரிக்காவில் "கூலான" உடையாக மாறியது. பாப் கலாச்சாரத்தைக் கொண்டாடும் கலகக்கார நாயகர்களாக திரைப்படங்களில் நடிக்கும் ஜேம்ஸ் டீனும், மார்லன் பிராண்டோவம் தங்களது பட்களில் ஜீன்ஸ் பேண்டின் பல்வேறு வகைகளை பயன்படுத்தி பிரபலப்படுத்தினர். அதைத் தொடர்ந்து இளைஞர்களின் கலக உடையாக ஜீன்ஸ் பேண்ட் மாறியது.
இப்போது பாஜக-வை எதிர்ப்போரை இந்தியாவில் "ஆன்டி இன்டியன்ஸ்" என்று சொல்லுவது போல அப்போது ஜீன்ஸ் போட்ட இளைஞர்களை "அமைப்பிற்கு" எதிரானவர்கள் என்று கருதத் துவங்கினார்கள். பல பள்ளிகள் ஜீன்ஸ் அணிவதற்கு தடையே விதித்திருக்கிறது என்றால் பாருங்கள். இத்தகைய கலாச்சாரக் காவலர்களை எதிர்த்து ஜீன்ஸ் பேண்ட் போட்ட இளைஞர்கள் கலகம் செய்தார்கள்.
இக்காலகட்டத்தில் வியட்நாம் எதிர்ப்பு போரில் அமெரிக்க மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஐரோப்பிய நாடுகளிலும் மாணவர்கள் போருக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டனர். அவர்களின் போராட்ட சீருடையாக ஜீன்ஸ் மாறியது.
அப்போது அமைதி, அன்பு இவற்றோடு பெல்பாட்டம் (கால் பகுதியில் அகலமாக இருக்கும் பேண்ட்) இணைந்து 1960-களின் எதிர்கலாச்சார தேசிய கீதமாக மாறியது. கோட்டு சூட்டு கனவான்களின் தோற்றத்திற்கு எதிராக இளைமைத் துடிப்புள்ள, சுதந்திர காதலை நாடும் சின்னமாக நீல ஜீன்ஸ் மாறியது. மேலும் அது இடுப்புக்கு சற்று கீழே அணியும் வண்ணம் உருவாக்கப்பட்டதால் சுதந்திரமாகவம், சுயத்தை வெளிப்படுத்தும் உடையாகவும் கருதப்பட்டது. மேலும் ஜீன்ஸ் பேண்டில் எம்பிராய்ட்ரி மற்றும் சில துணிப்பட்டைகளை இணைத்து உருவாக்கும் பாணியும் உருவானது. பேஷன் உலகில் இவை அதிகம் நடந்தன. மக்களாலும் விரும்பப்பட்டன.
இப்படியாக மரபார்ந்த உடை பாணியுடன் முறித்துக் கொண்ட ஜீன்ஸ் 70 களில் இருபாலினத்தவரும் அணியும் உடையாக மாறியது. பெண்களின் கவர்ச்சி உடையாகவும் அது விரும்பப்பட்டது. சார்லஸ் ஏஞ்செல்ஸ் திரைப்படத்தில் நடித்த ஃபரா ஃபாசெட் மற்றும் விளம்பர மாடலான லாரன் ஹட்டன் போன்ற பிரபலப் பெண்களால் ஜீன்ஸ் பேண்ட் பெண்களிடம் பரவியது. பெண்களுக்கேற்றவாறு இறுக்கமான ஜீன்ஸ், தொடையளவு ஜீன்ஸ், ஸ்கர்ட்ஸ் போன்றவை பிரபலமாயின.
இக்காலத்தில் அவரவர் விருப்பத்திற்கேற்ப பாணியில் உருவாக்கப்பட்ட ஜீன்ஸ் தயாரிக்கப்பட்டது. கால்வின் கிளின் எனம் பிரபலமான ஆடை நிறுவன விளம்பரத்தில் நடித்த 15 வயது ப்ரூக் ஷல்ட்ஸ், “எனக்கும் கால்வின் ஆடைக்கும் இடையில் எதுவம் வந்து விட முடியாது" என்றான். இப்படியாக ஜீன்ஸ் விளம்பர உலகில் நுழைந்தது. பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட டிசைனர் ஜீன்ஸ் இளைஞர்களின் பாப் கலாச்சார உலகில் நுழைந்தது. இளையோர் விரும்பும் ஜீன்ஸ் உடைகளை கால்வின் கிளின், ஜோர்டாச் மற்றும் குளோரியா வாண்டர்பில்ட் உள்ளிட்ட பிராண்டுகள் தயாரித்தன. ஸ்டோன் வாஷ், ஆசிட் வாஷ், கிழிந்த ஜீன்ஸ், கணுக்கால் தெரியும் படியான ஜீன்ஸ் என்று பல வகைகள் தயாரிக்கப்பட்டன.
இப்போது எல்லா வயதினரின் ரசனைக்கு ஏற்ப ஜீன்ஸ் மாறியது. பெண்ளுக்காக அதிக இடுப்பளவைக் கொண்ட அம்மா ஜீன்ஸ், ஒரே தையலில் கால் வரைக்குமான ஜீன்ஸ், ஆங்காங்கே கிழிபட்ட ஜீன்ஸ் போன்றவை இக்காலத்தில் பிரபலமாயின. பல பாக்கெட்டுகளைக் கொண்ட கார்பெண்டர் ஜீன்ஸும் இக்காலத்தில் பிரபலமானது. ஒரு காலத்தில் தொழிலாளிகள் தங்களது ஆயுதங்களை இப்படி பல பாக்கெட்டுகளில் வைத்துக் கொள்ளும்படியான பேண்டுகளை அணிவார்கள். இப்போது அது அனைவருக்கமான உடையாக மாறியது.
ஒரு காலத்தில் கோட்டு சூட்டு போட்ட கனவான்கள் ஜீன்ஸை இழிவாக கருதினர். இப்போது அவர்களே ஓய்வுநேர உடைகளாக பயன்படுத்துகின்றனர். ஐ.டி துறை போன்ற கார்ப்பரேட் அலுவலக கலாச்சாரங்களில் ஜீன்ஸ் பேண்ட் அன்றாட உடையாக மாறிவிட்டது. பாப் உலகில் பிரபலமான பெண் பாடகர்களால் சிறிய ஜீன்ஸ் காலுடைகள் பிரபலமானது. பெண்களின் உடல் வாகிற்கு ஏற்ற மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. நீலம் தவிர அனைத்து வண்ணங்களிலும் ஜீன்ஸ் பேண்ட் வரத் துவங்கியது. என்றாலும் இன்றளவிலும் நீல நிற ஜீன்ஸ்தான் அதிக அளவில் விரும்பப்படுகிறது. பின்னர் ஜீன்ஸ் பேண்டுகளில் சாயம் போன வெளிறிப்போன டிசைனில் உருவாக்கப்பட்டது. தற்போது இதைத்தான் இளைஞர்கள் அணிகிறார்கள். பார்ப்பதற்கு அழுக்கு மாதிரி இருந்தாலும் டிசைனையே அப்படி மாற்றி விட்டார்கள்.
பிறகு உடலோடு ஒட்டிப் போடப்படும் டைட்டான ஜீன்ஸ் பிரபலமானது. பின்பு தோலோடு டைட்டாக இறுக்கமாக இருந்தாலும் இளகிக் கொடுக்கும் வகையில் ஜீன்ஸ் அறிமுகமானது. தற்போதும் ஜீன்ஸ் பேண்டுகள் பற்றிய ஆய்வும் புதிய பிராண்டு அறிமுகங்களும் ஆண்டு தோறும் நடக்கின்றன.
பாதையோரக் கடைகளில் நூறு ரூபாய்க்கு கிடைக்கும் ஜீன்ஸும், இலட்ச ரூபாயில் தயாரிக்கப்படும் டிசைனர் ஜீன்ஸும் இப்போது உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வற்ற உடையாக மாறிவிட்டது. செல்வத்தில் இல்லாத சமத்துவத்தை ஜீன்ஸ் கொண்டு வந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust