வடகொரியாவை ஏதோ முட்டாள்கள் ஆட்சி செய்வதாக பலர் கருதுகின்றனர். 2014-ம் ஆண்டில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தி இன்டர்வியூ எனும் காமடி படத்தை வெளியிட இருந்தது. படத்தின் கதையில் வட கொரியாவின் இன்றைய அதிபர் கிம் ஜாங் உன்-னைக் கொல்லும் சதியை காமடியாக சித்தரித்திருந்தனர். இனிமேல்தான் டிவிஸ்ட்.
அமைதியின் பாதுகாவலர்கள் என்ற ஒரு ஹேக்கர் குழு சோனி பிக்சர்சின் சர்வரை ஹேக் செய்து பல இரகசியங்களை வெளியிட்டது. சோனி நிறுவனம் இன்டர்வியூ படத்தை வெளியிடாமல் இருந்தால் மீதி இரகசியங்களை வெளியிட மாட்டோம் என மிரட்டியது. பயந்து போன சோனி நிறுவனம் உலக அளவில் படத்தை வெளியிடாமல் தவிர்த்தது. படமோ வெளியீட்டு தேதிக்கு முன்பு உலகெங்கும் HD தரத்தில் மக்களுக்கு இலவசமாக கிடைத்தது. இப்போது காமடி பீசானது வேறு யாருமல்ல, சோனி நிறுவனம்தான்.
இந்த ஹேக்கிங்கை வட கொரிய அரசுதான் நடத்தியது என அமெரிக்கா குற்றம் சாட்டியது. வட கொரியா மறுத்தது. விசயம் அவ்வளவுதான். இனி கிம் வம்ச கதைக்கு திரும்புவோம்.
வடகொரியாவின் முதல் அதிபரான கிம் இல் சுங் 1994-ம் ஆண்டில் இறப்பதற்கு முன்பாகவே அவரது வாரிசாக கிம் ஜாங் இல் உருவெடுத்தார். தந்தை நாட்டை ஆளும் போதே 1980-ம் ஆண்டில் நடந்த வட கொரியாவின் தொழிலாளர் கட்சியின் ஆறாவது மாநாட்டில் கட்சி, செயற்குழு, இராணுவம் போன்றவற்றின் முதன்மைப் பொறுப்புகளை கிம் இல் சுங் ஏற்றார்.
தனது தந்தையைப் போன்ற சுறுசுறுப்பான, வெளிப்படையான தலைவராக கிம் இல் சுங் இல்லை. அதீத சினிமா ஆர்வம் கொண்டவராகவும் உள்ளுக்குள்ளே முடங்கிக் கிடப்பவராகவும் அவர் இருந்தார். ஆனால் தந்தை கிம் ஏற்படுத்திய குடும்பம் மற்றும் வட கொரிய அரசாங்கம் அவரை மாபெரும் தலைவராக சித்தரித்தது. அதற்கு தோதுவாக மேற்கத்திய நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் எதிர்ப்பு தொடர்ந்து இருந்து வந்தது. கொரியப் போரின் அவலங்களை மறக்கத் தயாரில்லாத வட கொரிய மக்கள் தங்களது இரண்டாவது தலைவரின் தகுதி குறித்து கவலைப்படவில்லை.
இரண்டாவது தலைவரான கிம் ஜாங் இல் 2011 டிசம்பரில் இறந்த பிறகு அவரது இளைய மகன் கிம் ஜாங் உன் மூன்றாவது தலைவராக பதவியேற்றார். அப்போது அவருக்கு வயது 27 மட்டுமே. கிம் ஜாங் இல் நோய்வாய்ப்பட்டு இறப்பதற்கு 14 மாதங்களுக்கு முன்பாகத்தான் கிம் ஜாங் உன் தொழிலாளர் கட்சியின் நிகழ்வில் ஒரு வாரிசாக அறிமுகப்படுத்தப்பட்டார். அதற்கு முன் இந்த இளவரசர் பியோங்யாங்கின் குடும்ப அரண்மனைகளிலும் சுவிட்சர்லாந்தின் உறைவிடப் பள்ளியிலும் காலத்தை கழித்தார். இவரைப் பற்றி யாருக்கும் அப்போது அதிகம் தெரியாது. வடகொரிய வல்லுநர்கள் கிம் ஜாங் உன்னின் மூத்த சகோதரர்களை விட அவர் இலட்சியவாதியாகவும், அரசியல் ரீதியாக துடிப்பானவர் என்றும் கருதுகிறார்கள். அதனால்தான் அவரது தந்தை இவரைத் தேர்ந்தெடுத்தாகவும் கூறுகிறார்கள்.
தற்போது 1970-களில் இருந்த பொருளாதார வளர்ச்சி இல்லை. அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் பொருளாதாரத் தடைகளின் காரணமாக வட கொரியாவின் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குள்ளானது. வட கொரியா தோற்றுவிட்டால் தனது எல்லை வரை அமெரிக்க இராணுவம் வந்து விடும் என்ற சுயநலத்திற்காக சீனா இன்று வரை வட கொரியாவை ஆதரித்து நிற்கிறது. இன்றைய உலகமய பொருளாதார காலகட்டத்தில் அதிலிருந்து துண்டிக்கப்பட்ட வட கொரியா பெரும் பிரச்சினைகள் இல்லாமல் இன்றுவரை வாழ்வதே அதிசயமானது.
அதிகாரத்திற்கு வந்த பிறகு இளைஞரான கிம் ஜாங் உன் தனது தந்தை மற்றும் தாத்தாவை விட அதிகமான ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை சோதித்து அணு ஆயுதங்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தினார். 2017-ல் வட கொரியா பரிசோதித்த ஏவுகணை நேரடியாக வாஷிங்டனை தாக்கும் வல்லமை கொண்டதென ஆயுத வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள்.
இத்தகைய அணுசக்தியும், அதை ஏவும் தொழில்நுட்பமும் வட கொரியாவில் இருப்பதுதான் அமெரிக்காவின் ஆகப்பெரும் கவலை. அதனால்தான் ஈரான் நாடு அணுசக்தியை பெற்று விடக்கூடாது என்று மிரட்டும் அமெரிக்கா வட கொரியாவிடம் சற்றே அடக்கி வாசிக்கிறது. அதன் தொடர்ச்சிதான் பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபரை சந்தித்த முதல் வடகொரிய தலைவராக கிம் ஜாங் உன் சாதனை படைத்தார்.
அவரை அன்றைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சிங்கப்பூரில் சந்தித்து பேசியது உலக ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. இந்த சந்திப்பு இரண்டு முறை நடந்தாலும் அணுசக்தி பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை.
வடகொரியாவின் அரச ஊடகம் முதன்முதலில் முன்னாள் பாடகர் ரி சோல் ஜுவை, கிம் ஜாங் உன்னின் மனைவியாக 2012 இல் குறிப்பிட்டது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் ஆகியோருடனான சந்திப்புகள் உட்பட வட கொரியாவின் அதிகாரப்பூர்வ விஜயங்கள் மற்றும் வெளிநாட்டு உச்சிமாநாட்டு பயணங்களில் கிம் ஜாங் உன் தனது மனைவியோடு வெளிப்படையாக பயணித்துள்ளார். இது கிம்மின் தந்தை மற்றும் தாத்தாவின் வாழ்வில் பார்க்க முடியாத ஒன்று. அவர்கள் எப்போதும் தங்கள் மனைவிகளை தவிர்த்து விட்டுத்தான் பயணம் செய்தனர். மேலும் தனிப்பட்ட குடும்ப வாழ்வை அவர்கள் பொது மேடைக்கு கொண்டு வரவில்லை.
அதற்கு மறாக கிம் ஜாங் உன்னின் நோக்கம் சாதாரண வட கொரியர்களுடன் நெருக்கமாவதற்கு இந்த மனைவியோடு பயணிப்பது உதவி செய்திருக்கிறது. அந்த வகையில் இந்த இளைஞர் கொஞ்சம் விவரமானவர்தான்.
வட கொரியாவின் வாரிசு திட்டம் கிம் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய ஆலோசகர்களால் மட்டுமே எடுக்கப்படுகின்ற ஒன்று. முந்தைய இரண்டு தலைமை மாற்றங்கள் தந்தை தனது மகனை வாரிசாக நியமிக்கும் வகையில் இருந்தன.
கிம் ஜாங் உன், அதிக புகைப்பிடிப்பவராகவும், அதிக எடை கொண்டவராகவும் இருக்கிறார். இதனால் அவரது உடல் நலன் குறித்து அவ்வப்போது மேற்கத்திய ஊடகங்களில் அவர் இறந்து விட்டதாக வதந்திகள் அடிக்கடி வரும். இருந்தபோதிலும், அவர் இறந்து போகவும் இல்லை, தன்னுடைய வாரிசு என்று யாரையும் சுட்டிக்காட்டவுமில்லை.
குழந்தைகள் வளர்ந்து ஆளாகும் வரை கிம் ஜாங் உன் உயிருடன் இருந்தால் நான்காம் தலைமுறையாக ஒரு வாரிசு பட்டத்திற்கு வருவார். அதற்குள் அவர் மறைந்து போனால் யார் வாரிசு? அவரது இளைய சகோதரி கம் யோ ஜாங்-கை சாத்தியமுள்ள வாரிசாகக் வட கொரிய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்தான் இன்றைய நம்பர் 2 என தென் கொரிய உளவுத்துறையும் மதிப்பிடுகிறது.
வடகொரியாவில் சுதந்திரமான ஊடகங்கள் இல்லை. அனைத்து தகவல்களும் தணிக்கை செய்யப்படுகின்றன. வெளிநாட்டில் பணியாற்றும் வட கொரிய அதிகாரிகள் கூட வெளிநாட்டினருடன் தொடர்புகொள்ள கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. மக்களிடையே அதிருப்தி ஏற்படாத வண்ணம் இந்த தணிக்கைக் கொள்கை உருவாக்கப் பட்டிருக்கிறது.
எனினும் சுமார் 34,000 வட கொரியர்கள் தென் கொரியாவில் தஞ்சமடைந்திருக்கின்றனர். வட கொரியாவில் கிம் குடும்பம் மற்றும் அதன் தலைவர்கள் குறித்து மிகப்பெரும் தனிநபர் வழிபாடு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை வடகொரியா மறுக்கிறது. தனது நாட்டின் தலைவர்கள் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பு என்று குறிப்பிடுகிறது. ஆனால் தலைவர்கள் மீது அன்பு இல்லை என்று எவராலும் அங்கு சொல்ல முடியாது.
கிம் குடும்பத்திலியே உருவான அதிருப்தியாளர்கள் சிலர் நேரடியாக தண்டனை பெற்றும் அல்லது வெளிநாட்டில் மர்மமான முறையிலும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்களின் கதியைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
ஆனால் இத்தனை ஆண்டுகளாக இந்த சர்வாதிகார ஆட்சியை மக்கள் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்?
அதற்கு முழுமுதற் காரணம் அமெரிக்காதான். கொரியப் போரிலிருந்து இன்றைய பொருளாதார தடைகள் வரை தமது துன்பத்திற்கு அமெரிக்காதான் காரணம் என்று ஒரு வட கொரியக் குடிமகன் உறுதியாக நம்புகிறார். வட கொரியாவில் மட்டுமல்ல தென்கொரியாவிலும் அமெரிக்காவின் கொரியப் போரை எதிர்க்கும் மக்கள் கணிசமாக இருக்கின்றனர். தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளத்தை எதிர்த்து பல முறை மக்கள் போராடியிருக்கின்றனர். அமெரிக்க ஏவுகணைகள் சாலையில் சென்றால் கல்லெறிந்து எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றனர்.
நமது சென்னை மெட்ரோவில் குறைந்த பட்ச கட்டணம் ரூ 40 என்றால் அது வடகொரியாவின் தலைநகரமான பியாங்யிங்கில் ரூ. 2 ஆக இருக்கிறது. மக்களுக்கு போதுமான குடியிருப்புகள், மருத்துவ கட்டமைப்புகள் செலவின்றி கிடைக்கின்றன. இருப்பினும் வட கொரிய மக்கள் ஏழ்மையிலும், குறைந்த பட்ச வாழ்க்கைத் தரத்திலும்தான் இருக்கிறார்கள். சீனா தவிர உலகநாடுகளின் பொருளாதாரத் தடை இருப்பதே அதற்கான முதன்மைக் காரணம்.
வடகொரியா மற்றும் கிம் குடும்பத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? தடைகளை அகற்றாத வரை அமெரிக்காவின் மீதான எதிர்ப்புணர்வு மக்களுக்கு இருந்தே தீரும். அது வரை கிம் குடும்பம் நீடிக்கலாம். இல்லை இக்குடும்பத்திலிருந்து நாட்டை விடுவிக்கும் வழியோ, கட்சியோ, தலைவர்களோ வருவார்களா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust