கம்யூனிச அரசு அமைந்த வடக்கு வியட்நாமிற்கும், அமெரிக்காவின் ஆதரவிலிருந்த தெற்கு வியட்நாமிற்கும் இடையே நடந்த போர்தான் வியட்நாம் போர். இது வரலாற்றில் நீண்ட காலமாகவும், உயிர் – பொருள் சேதம் அதிகமுடையதாகவும் இருந்தது. அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நடந்த கெடுபிடிப்போர் வியட்நாம் போரை மேலும் தீவிரப்படுத்தியது. 58,000 அமெரிக்கர்கள் உள்ளிட்டு, முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் போரில் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் பாதிக்கும் மேற்பட்டோர் அப்பாவி வியட்நாம் குடிமக்களாவர். போருக்கு எதிரான போராட்டங்கள் அமெரிக்காவில் தீவிரமடைந்தன. இது அமெரிக்காவைப் பிளவுபடுத்தியது. 1973-ல் அமெரிக்க அதிபர் ரிச்சர்டு நிக்சன் பாரிஸ் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு அமெரிக்கத் துருப்புகள் வியட்நாமிலிருந்து நாடு திரும்பின. அதன் பிறகு வெற்றி பெற்ற கம்யூனிசப் படைகள் 1975-ம் ஆண்டிற்குள் தெற்கு வியட்நாம் முழுவதையும் கையகப்படுத்தின. அதன் பிறகு இரண்டு வியட்நாம்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு வியட்நாம் சோசலிசக் குடியரசு என்ற பெயரில் அழைக்கப் பட்டது.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோசீன தீபகற்பத்தின் கிழக்கத்திய விளிம்பில் உள்ள நாடு வியட்நாம் ஆகும். இந்நாடு 19-ம் நூற்றாண்டிலிருந்து பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் காலணியாக இருந்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் வியட்நாமின் மீது படையெடுத்தனர். வியட்நாமை ஆக்கிரமித்துக்கொண்ட ஜப்பான் மற்றும், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை விரட்டும் முகமாக அரசியல் தலைவர் ஹோ சி மின், வியட் மின் எனும் இயக்கத்தை ஆரம்பித்தார். அவர் சீன மற்றும் ரஷ்யாவில் நடந்த கம்யூனிசப் புரட்சியால் உத்வேகம் பெற்றிருந்தார். சுதந்திர வியட்நாமை குறிக்கோளாகக் கொண்டு அவரது இயக்கம் செயல்பட ஆரம்பித்தது.
வியட்நாம் நாட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக பிரான்ஸ் நாடு அரசர் பாவோவை ஆதரித்தது. அவரை கொண்டு ஜூலை, 1949-ம் ஆண்டில் ஒரு அரசை தெற்கு வியட்நாமில் உருவாக்கியது. சைய்கான் (Saigon) அதன் தலைநகராக விளங்கியது. ஹோசிமின் தரப்பும் பிரான்ஸ் நாட்டால் ஆதரிக்கப்படும் மன்னர் தரப்பும் ஒரே குறிக்கோளைக் கொண்டிருந்தன. அது ஒன்றுபட்ட வியட்நாம். ஹோசிமின் கம்யூனிசக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருக்க தெற்கு வியட்நாமின் அரசரோ மேற்குலகின் முதலாளித்துவ கொள்கையை ஆதரித்து வந்தார்.
வடக்கு வியட்நாம் தெற்கு வியட்நாம் என இந்த முரண்பாடு முன்பே துவங்கி இருந்தது. அமெரிக்கா 1954-ல் இந்த பிரச்சினையில் தலையிட துவங்கியவுடன் போரும் முரண்பாடும் தீவிரமடையத் துவங்கியது. வடக்கு வியட்நாமை ஹோசிமின் படைகள் கைப்பற்றிய பிறகு இருதரப்பு ராணுவமும் ஆங்காங்கே மோதிக்கொண்டன. ஹோசிமின் தரப்பு டயன் பியன் பூ என்ற இடத்தில் மே, 1954-ல் பெருவெற்றி பெற்றது. இந்தப் போரில் பிரான்ஸ் நாடு படுதோல்வியடைந்தது. கூடவே இந்தோ சீனாவில் உள்ள பிரெஞ்சு காலனிய ஆதிக்கத்திற்கு ஒரு முடிவு கட்டியது. ஜூலை 1954 இல் ஜெனீவா மாநாட்டில் கையொப்பமிடப்பட்ட உடன்படிக்கை 17வது இணை (17 டிகிரி வடக்கு அட்சரேகை) எனப்படும் அட்சரேகையில் வியட்நாமைப் பிரித்தது. வடக்கில் ஹோ சி மின் மற்றும் தெற்கில் அரசர் பாவோ கட்டுப்பாட்டில் இரண்டு வியட்நாம்களும் இருந்தன.. இந்த ஒப்பந்தம் 1956 இல் மீண்டும் இரண்டு வியட்நாம்களும் ஒன்றிணைவதற்காக நாடு தழுவிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தது. இருப்பினும், 1955 ஆம் ஆண்டில், வலுவான கம்யூனிச எதிர்ப்பு அரசியல்வாதியான நெகோ தின் டீம் (Ngo Dinh Diem), பேரரசர் பாவோவை ஒதுக்கித் தள்ளி வியட்நாம் குடியரசின் (GVN) அரசாங்கத்தின் அதிபராக ஆனார். அந்தக் காலத்தில் இந்த அரசாங்கம் தென் வியட்நாம் என்று குறிப்பிடப்பட்டது.
அப்போது அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் கெடுபிடிப்போர் தீவிரமடைய துவங்கிய நேரம் அது. 1955ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஐசனோவர் தனது ஆதரவை தெற்கு வியட்நாமை ஆண்டுகொண்டிருந்த அதிபர் டீமுக்கு வழங்கினார். அமெரிக்க இராணுவம் மற்றும் சிஐஏ-ன் பயிற்சி மற்றும் ஆயுதங்களுடன், அதிபர் டீமின் பாதுகாப்புப் படைகள் தெற்கில் உள்ள வியட்மின் அனுதாபிகளை ஒடுக்கினர். ஹோ சி மின் அவர்களது கட்சியை அதிபர் டீம், வியட் காங் (அல்லது வியட்நாம் கம்யூனிஸ்ட்) என்று ஏளனமாக அழைத்தார். தெற்கு வியட்நாமில் சுமார் 1,00,000 பேர் டீம் அரசால் கைது செய்யப்பட்டு, அவர்களில் பலர் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டனர். 1957 வாக்கில், வியட் காங் மற்றும் டீமின் அடக்குமுறை ஆட்சியின் பிற எதிர்ப்பாளர்கள் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிற அரசு இலக்குகள் மீதான தாக்குதல்களுடன் மீண்டும் போராடத் தொடங்கினர். மேலும் 1959 வாக்கில் அவர்கள் தெற்கு வியட்நாமிய இராணுவத்தோடு துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடத் தொடங்கினர். டிசம்பர் 1960 இல், தெற்கு வியட்நாமில் உள்ள அதிபர் டீமின் அரசியல் எதிர்ப்பாளர்கள் - கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் அல்லாதவர்கள்-தமது எதிர்ப்பை ஒழுங்கமைக்கத் தேசிய விடுதலை முன்னணியை (NLF) உருவாக்கினர்.
1961 இல் அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடியால் தெற்கு வியட்நாமின் நிலைமைகளைப் பற்றி அறிக்கையிட ஒரு குழு அனுப்பப்பட்டது. அக்குழுவினர் வியட் காங் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அதிபர் டீம்மிற்கு உதவுவதற்காக அமெரிக்க இராணுவ, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவிகளை உருவாக்குமாறு அறிவுறுத்தினர். ஒரு தென்கிழக்கு ஆசிய நாடு கம்யூனிசத்தின் பிடியில் விழுந்தால், பல நாடுகள் அதைப் பின்பற்றும் என்ற "டோமினோ கோட்பாட்டின்" கீழ் உலகெங்கும் கம்யூனிச எதிர்ப்பு அடிப்படை வேலைகளை செய்து வந்த்து. அதன்படி அதிபர் கென்னடி தெற்கு வியட்நாமிற்கான அமெரிக்க உதவியை அதிகரித்தார். அதே நேரம் அவர் பெரிய அளவிலான இராணுவத் தலையீட்டில் ஈடுபடுவதை விரும்பவில்லை. 1962 வாக்கில், தெற்கு வியட்நாமில் அமெரிக்க இராணுவம் சுமார் 9,000 துருப்புக்களை நிறுத்தியது. இதுவே 1950 களில் 800 க்கும் குறைவான அமெரிக்கத் துருப்புக்களே இருந்தன.
டெக்சாஸின் டல்லாஸில் கென்னடி படுகொலை செய்யப்படுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, நவம்பர் 1963 இல், தெற்கு வியட்நாமில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தேறியது. டியெம் மற்றும் அவரது சொந்த சகோதரர் என்கோ டின்ஹூவை கொன்று விட்டு, சில இராணுவ ஜெனரல்கள் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றினர். தெற்கு வியட்நாமில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மை, கென்னடியின் வாரிசான லிண்டன் பி. ஜான்சன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ராபர்ட் மெக்னமாரா ஆகியோரை அமெரிக்க இராணுவ மற்றும் பொருளாதார ஆதரவை மேலும் அதிகரிக்கச் செய்தது. ஆகஸ்ட் 1964 இல், வியட்காங்கின் DRV டார்பிடோ படகுகள் டோன்கின் வளைகுடாவில் இரண்டு அமெரிக்க நாசகார கப்பல்களைத் தாக்கிய பின்னர், வடக்கு வியட்நாமில் உள்ள இராணுவ இலக்குகள் மீது பதிலடியாக குண்டுவீச்சுக்கு அமெரிக்க அதிபர் ஜான்சன் உத்தரவிட்டார். அமெரிக்க காங்கிரசும் விரைவில் டோன்கின் வளைகுடா தீர்மானத்தை நிறைவேற்றியது. இது ஜான்சனுக்கு பரந்த போரை துவக்கும் அதிகாரங்களை வழங்கியது. மேலும் அமெரிக்க விமானங்கள் அடுத்த ஆண்டு ஆபரேஷன் ரோலிங் தண்டர் என்ற குறியீட்டு பெயரில் வழக்கமான குண்டுவெடிப்புத் தாக்குதல்களை தெற்கு வியட்நாமில் தொடங்கின.
அமெரிக்காவின் குண்டு வீச்சு ஏதோ வியட்நாமோடு முடியவில்லை. 1964 – 1973-ல் அமெரிக்கா நடுநிலையான லாவோசில் இருபது இலட்சம் குண்டுகளை வீசியது. இந்த தாக்குதல் இரண்டு நோக்கங்களைக் கொண்டிருந்தது. ஒன்று பாத்தட் லாவோ அல்லது லாவோஸ் கம்யூனிசப் படைகளை ஒழிப்பது. இர்ண்டாவது லாவோஸ் வழியாக வடக்கு வியட்நாமின் கம்யூனிசக் கொரில்லாக்களுக்கு வரும் சப்ளை பாதையை துண்டிப்பது. லாவோசின் மக்கள் தொகையை விட அதிகமான குண்டுகளை வீசிய அமெரிக்காவின் பயங்கரவாத நடவடிக்கைகள் உலகை அதிர்ச்சி கொள்ள வைத்தது.
மார்ச் 1965 இல், அமெரிக்க அதிபர் ஜான்சன் அமெரிக்கப் போர்ப் படைகளை வியட்நாம் போருக்கு அனுப்ப முடிவெடுத்தார். ஜூன் மாதத்திற்குள், 82,000 போர் துருப்புக்கள் வியட்நாமில் நிலைநிறுத்தப்பட்டன. மேலும் 1965 ஆம் ஆண்டின் இறுதியில் 175,000 துருப்புகளை நிலைநிறுத்துமாறு அமெரிக்காவின் இராணுவத் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். அதிபர் ஜான்சனது ஆலோசகர்கள் சிலருக்கு இந்த துருப்புகள் அதிகரிப்பு பற்றிய கவலைகள் இருந்தபோதிலும், வளர்ந்து வரும் போர்-எதிர்ப்பு இயக்கத்தின் மத்தியிலும், ஜான்சன் ஜூலை 1965 இறுதியில் 100,000 துருப்புகளையும் 1966 இல் மற்றொரு 100,000 துருப்புகளையும் உடனடியாக அனுப்ப சம்மதித்தார். அமெரிக்கா அல்லாமல் தென் கொரியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் தென் வியட்நாமில் (மிகச் சிறிய அளவில் இருந்தாலும்) போரிட துருப்புக்களை அனுப்புவதற்கு உறுதி செய்தன. இருப்பினும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் துருப்புகளை அனுப்பினாலும் அமெரிக்காவில் போரில் வெல்ல முடிந்ததா? அடுத்த பாகத்தில் காண்போம்.