வைக்கிங்குகள் 8 நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை கடல்வழிப் பயணிகளாக இருந்தனர். அவர்கள் வணிகர்கள், போர்வீரர்கள், சாகசப் பயணக்காரர்கள் என்ற அடையாளத்தை பெற்றனர். கொலம்பஸுக்கு முன்பேயே அமெரிக்காவை கண்டுபிடித்தனர். அவர்கள் ஸ்காண்டிநேவிய நாடுகள் எனப்படும் ஸ்வீடன், நார்வே, பின்லாந்து முதல் ரஷ்யாவின் தொலைதூர கிழக்கு பகுதிகள் வரை வாழ்ந்தனர்.
வைக்கிங்குகள் புதையல் மற்றும் பெண்களுக்காக நாகரீக நாடுகளில் தாக்குதல் நடத்தும் காட்டுமிராண்டிகளாகக் கூறப்பட்டாலும் அவர்களின் நோக்கங்களும், கலாச்சாரமும் வேறுபட்டவை. இவர்கள் பொருளாதாரம் முதல் போர் வரை தாம் வாழ்ந்த நிலங்களில் பல மாற்றங்களை கொண்டு வந்தனர்.
வரலாற்றாசிரியர்கள் வைக்கிங் என்ற சொல்லை ஸ்காண்டிநேவிய வார்த்தையான வைக்கங்கருடன் தொடர்பு படுத்துகின்றனர். இது கொள்ளையர் என்று பொருள் கொடுத்தாலும் உண்மையில் கடல் கடந்த சாகசப் பயணங்களைக் குறிப்பிடுவதாகும்.
சில வரலாற்றாசிரியர்கள் கூற்றுப்படி வைக்கிங்குகள் கிபி 800 முதல் கிபி 1050 வரை இருந்திருக்கின்றனர். கிபி 1066 இல் நார்மன்கள் இங்கிலாந்தை கைப்பற்றுவதற்கு முன்பு வரை அவர்களது காலம் வரையறுக்கப்படுகிறது. இக்காலத்தில் ஸ்காண்டிநேவிய மக்களின் அணுகல் வடக்கு ஐரோப்பா முழுவதும் பரவியது. மேலும் பல நாடுகள் தமது கடற்கரைகளை வைக்கிங்குகள் தாக்குவதைக் கண்டனர். இன்றைய ஈராக்கின் பாக்தாத் வரை தந்தங்கள், சீல் விலங்கின் கொழுப்பு, விலங்குகளின் உரோமம் போன்றவற்றின் வர்த்தகத்திற்காக அவர்கள் பயணித்தனர்.
இங்கிலாந்தின் வடகிழக்கில் இருக்கும் சிறிய தீவான லிண்டிஸ்ஃபார்னில் வாழ்ந்த துறவிகள் மீது வைக்கிங்குகள் கிபி 793இல் தாக்குதல் நடத்தினர். இது வைக்கிங்குகளின் குடியேற்ற துவக்கத்தை குறித்தது. இந்த தாக்குதலின் போது துறவிகள் கொல்லப்பட்டனர். நூலகம் இடிக்கப்பட்டது. தேவாலயத்தின் பொக்கிஷங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த தாக்குதல் மூலமே வைக்கிங்குகள் யார் என்பதற்காக அடித்தளத்தை அமைத்தது. இவர்கள் மதத்தை மதிக்காத காட்டுமிராண்டிகள் என்று கருதுப்படுவதற்கான காரணத்தையும் பெற்றனர்.
இத்தாக்குதலுக்கு பிறகு கடலோர கிராமங்கள், மடங்கள், நகரங்கள் கூட தாக்கப்பட்டன. இதன் காரணமாக கடற்கரைகளில் கோட்டைகள், கல்சுவர்கள், சுவரால் பாதுகாக்கப்பட்ட துறைமுகங்கள் போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இது வைக்கிங்குகளின் தாக்குதலை தடுப்பதில் பலனளித்தது.
வைக்கிங்குகளின் தாக்குதலுக்கு பின்னே உள்ள காரணங்களில் கல்வியாளர்களிடையே ஒத்த கருத்து இல்லை. கிறித்தவ மத ஆதிக்கம், மத மாற்றம், ஸ்காண்டிநேவிய பகுதிகளில் விவசாயத்தை குறைத்தது போன்றவை கூறப்படுகின்றன. தங்களது குளிர்காலத்தில் வாழ்வதற்கு தேவையான புதையல், அடிமைகள், பொருட்களுக்காக வைக்கிங்குள் படையெடுத்தாகவும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் ஸ்காண்டிய நேவிய பகுதிகளில் குளிர் காலம் மிகக் கடுமையாக இருக்கும்.
வைக்கிங் கலாச்சாரத்தின் மையமாக வைக்கிங் கப்பல்கள் உள்ளன. இது வர்த்தகர்களின் கடற்பயண வாழ்க்கையை வடிவமைத்து ஐரோப்பிய வரலாற்றின் போக்கையே மாற்றியது.
10 நூற்றாண்டுகளுக்கு மேலாக இவர்களது கப்பல் கட்டும் திறன் வளர்ந்தது. சிறிய மீன்பிடி படகுகள், பெரிய அளவிலான சரக்குக் கப்பல்கள், மின்னல் வேகத்தில் செல்லும் நீண்ட கப்பல்கள் வரை பலவற்றை கண்டுபிடித்தனர்.
7 ஆம் நூற்றாண்டில் அவர்கள் கப்பல் கட்டும் திறனில் உயர்நிலையை அடைந்தனர். கீல் எனப்படும் கப்பலின் குறுகிய அடித்தளப்பகுதியை மரங்களால் வைத்துக் கட்டும் நுட்பத்தை கண்டுபிடித்தனர். இது கப்பலின் வேகத்தை அதிகரித்து தேவையற்ற பக்கவாட்டு சாய்வைத் தடுத்தது. மேலும் நீண்ட பயணங்கள் மேற்கொள்ளவும் பயன்பட்டது. இது அப்போதைய காலத்தில் புரட்சிகரமாகவும், தொழில்நுட்ப அதிசயமாகவம் பார்க்கப்படுகிறது.
ஓக் போன்ற பெரிய மரங்களின் பலகைகள் கப்பல் கட்டப் பயன்பட்டன. சட்டகங்களின் இடையில் நீர் புகாமல் இருப்பதற்கு தாரில் ஊறவைக்கப்பட்ட விலங்கு முடி, கம்பளி அல்லது பாசி மூலம் பூசப்பட்டது. இவை இரும்பு ஆணிகளால் அடித்து உறுதிப்படுத்த்தப்பட்டது. முடிவில் நெகிழவுத் தன்மையோடு அதிவேகமாக செல்லும் கப்பல்கள் உருவாகின.
ஆண்கள் தொடர் துடுப்புகளுடன் படகோட்டினர். பெரும்பாலும் கம்பளியால் செய்யப்பட்ட பெரிய பாய்மரமும் படகைச் செலுத்துவதற்கு உதவியது.
வைக்கிங்குகள் வாழ்ந்த ஸ்காண்டி நேவியன் பகுதி நார்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. நார்ஸ் பகுதி முழுவதும் கப்பல்க்கள் கட்டி தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தினர். கிபி 842 ஆம் ஆண்டில் பிரெஞ்சு கடற்கரையில் உள்ள நாண்டெஸை தாக்கினர். மேலும் ஆறுகளின் வழியாக பாரிஸ், ரிமோஜஸ், ஆர்லியன்ஸ், டூர்ஸ் மற்றும் நைம்ஸ் போன்ற உள்நாட்டில் உள்ள நகரங்களையும் தாக்கினர்.
வைக்கிங்குகள் கலையிலும் கவனம் செலுத்தினர். நீண்ட கப்பல்கள் வில்லில் செதுக்கப்பட்ட டிராகன் தலைகளால் அலங்கரிக்கப்பட்டன. அவை தீய சக்திகளை விலக்கி வைக்கும் என்று நம்பப்பட்டது. ஒரு பெரிய சதுரத்துடன் இணைந்த டிராகன் தலை, சிவப்பு கோடுகள் கொண்ட பாய்மரம் வைக்கிங்குகளின் அடையாளம் என்று அறியப்படும். இந்த அடையாளம் மூன்று நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்களின் வயிற்றைக் கலக்கியது.
10 ஆம் நூற்றாண்டில் கிரீன்லாந்தின் மேற்கு கடற்கரையில் வைக்கிங்குகள் தமது குடியிருப்புகளை அமைத்தனர். இந்த கிரீன்லாந்து காலனிகளில் இருந்து புதிய உலகிற்கு அவர்கள் மேற்கொண்ட பயணங்களை வைக்கிங் கதைகள் கூறுகின்றன.
வடக்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் எல்லையில் உள்ள நியூ ஃபவுண்ட்லாந்தின் வடக்கு பகுதியில் ஒரு வைக்கிங் தளம் 1960 இல் கண்டுபிடிக்கப்பட்டது. கூடுதலாக கனடாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்க்ளால் மேலும் மூன்று வைக்கிங் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் இரும்பு அடுப்பு, விலங்குகளை பிடிப்பதற்கான கண்ணிகள், உலோகத் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட கலைப்பொருட்கள் ஆகியவை கிடைத்தன.
வைக்கிங்குகளைப் பற்றிய நவீன கருத்துக்கள் கத்தோலிக்க மதப் பிரச்சாரத்தால் உருவாக்கப்பட்டவை. தமது சொத்துக்கள் பறிபோனதால் கத்தோலிக்க மத அமைப்புகள் வைக்கிங்குளை காட்டுமிராண்டிகள் என்று சித்தரித்தன. பிரிட்டனின் விக்டோரியா மகாராணி ஆட்சி வரை அவர்கள் அப்படித்தான் கருதப்ப்பட்டனர். 19 மற்றும் 20 ம் நூற்றாண்டில்தான் அவர்களைப் பற்றிய கருத்துக்கள் மாறின. அதற்கு முன்பு வரை கொம்புகள் கொண்ட தலைக்கவசத்துடன், போரில் காட்டுமிராண்டித்தனத்துடன் சண்டைபோடுபவர்கள் என்று கருதப்பட்டார்கள்.
ஆனால் இந்த பிழையான கருத்துக்களின் மூலம் உருவான கட்டுக் கதைகள் வரலாற்றுப் பதிவுகளின் படி தவறானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சீப்புகள், கரண்டிகள், பிற சீர்படுத்தும் பாத்திரங்களை கண்டறிந்துள்ளனர். இது வைக்கிங் மக்கள் தனிப்பட்ட சுகாதரத்தை பராமரிப்பவர்கள் என்பதைக் குறிக்கிறது.
ஸ்காண்டிநேவிய பிராந்தியங்களில் வாழ்க்கை நிலைமைகள் நிச்சயமாக கடுமையானவை. அது கடினமான மக்களை உருவாக்கியது. பல வைக்கிங்குகள் வளங்களின் பற்றாக்குறையால் அவதிப்பட்டனர். மக்கள் உண்மையான ஒருங்கிணைந்த தலைமையின்றி அதிக தொலைவில் தங்கள் வீடுகளை அமைத்தனர். வைக்கிங் காலத்தில், ஸ்காண்டிநேவிய மக்கள் வெளி உலகங்களுக்கு ஒரு வலுவான உந்துதலை உருவாக்கி, எளிய காட்டுமிராண்டித்தனத்திற்கு அப்பால் தங்களுக்கு நற்பெயரை உருவாக்க முடிந்தது. சில வைக்கிங்குகள் செல்வத்தின் மீது ஆசை கொண்டாலும், பலர் சுற்றியுள்ள நாடுகளுடன் அமைதியான பொருளாதார உறவுகளை நாடினர்.
இப்படியெல்லாம் பல சிறப்புகளைக் கொண்டிருந்த வைக்கிங்குகளின் ஸ்காண்டிநேவிய ராஜ்ஜியங்கள் இறுதியில் ஐரோப்பிய கிறிஸ்வத மண்டலத்தின் பரந்த அரசியல் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டன.
கடுமையான குளிர் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டு வாழ்க்கைக்காக போராடிய வைக்கிங் மக்களின் வரலாறு உண்மையில் சாகசமும், சாதனைகளும் நிறைந்த ஒன்று.