உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலின் விளைவாக, கடும் பொருளாதாரத் தடைகளை சந்தித்து வருகிறது ரஷ்யா. இதனால் ரஷ்யாவில் விலைவாசி அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்கி சேமிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த வரிசையில் காண்டம்களை ரஷ்ய மக்கள் அதிக அளவில் வாங்கிக் குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ரஷ்யாவின் மிகப்பெரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான Wildberries, மார்ச் மாதத்தின் முதல் 2 வாரங்களில் காண்டம் விற்பனை 170% அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. பொருளாதாரத் தடையால் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற எண்ணமே விற்பனை அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. உலகத்துக்கு வேறு பிரச்னை என்றால் ரஷ்ய மக்களுக்கு வேறு பிரச்னை.
ரஷ்யாவின் மிகப் பெரும் மருந்தக தொடர் சங்கிலி நிறுவனங்கள், காண்டம் விற்பனை 32% அதிகரித்திருப்பதாகவும், சூப்பர் மார்க்கெட்டுகள் காண்டம் விற்பனை 30% அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றன. பிரிட்டனைச் சேர்ந்த ரெக்கிட் என்ற நிறுவனம்தான் டூரெக்ஸ் (Durex) உள்பட பல காண்டம் பிராண்டுகளை தயாரித்து ரஷ்யாவில் விற்பனை செய்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலை அந்நிறுவனம் கண்டித்திருந்தாலும், உற்பத்தியை மட்டும் நிறுத்தவில்லை. விலையேற்றம் செய்தபோதும் விற்பனை குறையவில்லையாம். அவ்வளவு டிமாண்ட்.
காண்டம் மட்டுமல்ல மற்ற கருத்தடை சாதனங்களின் விலையும் கிட்டத்தட்ட 50% அதிகரித்திருக்கிறது. ரஷ்ய நாணயமான ரூபலின் மதிப்பு சரிந்ததால் விலை ஏற்றம் தடுக்க முடியாததாகியிருக்கிறது. இந்த ஆண்டின் முதல் 9 வாரங்களில் மட்டும் 40 லட்சம் காண்டம் பாக்கெட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. ரூபெலில் இதன் மதிப்பு 1.3 பில்லியன். குறிப்பாக 12, 18, 30 எண்ணிக்கைகள் கொண்ட காண்டம் பேக்குகள் அதிகம் விற்பனையாகின்றனவாம்.
காண்டம் விற்பனையைப் பொறுத்தவரை ரஷ்யா வெளிநாடுகளையே அதிகம் நம்பியிருக்கிறது. ஆண்டுக்கு 600 மில்லியன் காண்டம்கள் இந்தியா, தாய்லாந்து, தென்கொரியா, சீனா போன்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்கிறது ரஷ்யா. 100 மில்லயன் காண்டம்களை ரஷ்யாவே உற்பத்தி செய்கிறது. பொருளாதாரத் தடையை மீறி இந்த நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவுக்கு காண்டம் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்றன.
காண்டம் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற பதற்றம் மக்கள் மனதில் ஏற்பட்டிருப்பதை உணர்ந்த ரஷ்ய தொழில் துறை மற்றும் வர்த்தக அமைச்சகம், " தேவையான அளவு காண்டம், சேனிட்டரி பேட், டையப்பர்கள் கையிருப்பு இருக்கிறது. 3 மாதங்களுக்கான கையிருப்பு வைத்திருக்கிறோம். அதனால் காண்டம் கிடைக்காதோ என்ற கவலை வேண்டாம்" என அறிவிக்கும் அளவுக்கு ரஷ்ய மக்கள் காண்டமை முக்கியமான தேவையாக பார்க்கிறார்கள். அவர்களும் பாவம்தானே. அவர்களுக்கும் உடல் பசி எடுக்கத்தானே செய்யும்!!!