மேலும் இரகசியக் குரல் அலையில் மெல்லப் பாடுவதும், அதே குரலை வைத்து குதூகலத்தை வரவழைக்கும் வண்ணம் உச்சஸ்தாயில் ரீங்காரம் செய்வதும் அவரால் வியப்பூட்டும் விதத்தில் செய்ய முடிந்தது. எல்லாப் பாடல்களிலும் சோகம், உற்சாகம், மகிழ்ச்சி, கும்மாளம், குத்தாட்டம் எல்லாம் இணைந்து வந்தன. அவர் பெரிய கவிஞர் இல்லையென்றாலும் தாளத்திற்கு உட்காரும் சொற்களை தேர்வு செய்வதிலும், எதுகை மோனைக்காக ஒரே உச்சரிப்பு வார்த்தைகளை சேகரிப்பதிலும் திறமையுடையவராக இருந்தார்.
மேற்கத்திய செவ்வியல் இசையில் ஈடுபாடு உடையோர் இத்தகைய பாப்பிசைகளை வெறும் வித்தை என ஒதுக்கிவிடுவார்கள். இங்கே கர்நாடக சங்கீதம் செய்யும் ஆச்சார வித்வான்களெல்லாம் திரையிசையை மலிவான இசை என ஒதுக்குவது போல. ஆனால் மைக்கேல் ஜாக்சனது இசை இருபது வருடங்களாக இளைஞர்களை கட்டிப் போட்டு மெய்மறக்கச் செய்தது என்பதையும் அதுவே கேளிக்கை தொழிலை மாபெரும் இலாபத்தை மீட்டும் தொழிலாக தலையெடுத்தற்கு அடிப்படை என்பதையும் நாம் ஏற்கத்தான் வேண்டும். உலகச் சுற்றுலாக்களுக்கு அவர் செல்லும் போது இரசிகர்கள் பைத்தியம் போல பின்தொடர்ந்தார்கள், அழுதார்கள், மயங்கிக்கூட விழுந்தார்கள். வெற்றிகரமான ஹாலிவுட் இயக்குநர் ஸ்பில் பெர்க் தொடங்கி, சிவசேனாவின் கலாச்சாரக் காவலர் இறந்து போன பால்தாக்கரே வரை மைக்கேலது இசை சாம்ராஜ்ஜயத்தில் வாழ்ந்து சென்றவர்கள்தான்.
இசை அரூபமானது, சூக்குமமானது, மொழி வரம்பு கடந்தது என்பதோடு கூடவே நமது உயிரியில் இயக்கமும் குறிப்பிட்ட தாளத்தில் இயங்குவதால் பொதுவில் இசை மனிதனின் உயிரியல் தொடர்புடையாதகவும் இருக்கிறது. தத்தித் தவழும் குழந்தை கூட வேகமான தாளகதி வரும் இசையைக் கேட்கும் போது அதற்குத் தகுந்த முறையில் அசைவதற்கு முயற்சிக்கிறது. இதனால் எந்த இசையையும் ரசிப்பதற்கு பெரிய ரசனையோ, அறிவோ, தயாரிப்போ தேவை இல்லையென்று சொல்ல முடியுமா?
ஐரோப்பிய நாடுகளில் எல்லா பிற்போக்குகளையும் அழிப்பதற்கு முன்னோடியாக இருந்த பிரஞ்சுப்புரட்சியும் அதன் மதிப்பீடுகளை போரின் மூலம் அண்மைய நாடுகளுக்கு எடுத்துச் சென்ற நெப்போலியனது காலத்தில் வாழ்ந்த பீத்தோவான் அமைத்த சிம்பொனியை நாம் இரசிப்பதற்கு, வரலாறு, தத்துவம், இசையின் அடிப்படை அறிவு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அப்போது அந்த சிம்பொனி, மாபெரும் வண்ணக்கலவை கொண்ட பிரம்மாண்டமான ஓவியமாக நம்முன் விரியும். போராட்டத்தின் மூலம் தேவையற்றதை மறுத்து முன்னேற்றப்படிகளில் காலடி எடுத்து வைக்கும் மனித சமூகத்தின் துடிப்பை அந்த ஆழமான இசையின் மூலம் நாம் பெருமிதத்துடன் கேட்டு செரிக்கிறோம். இந்த செரித்தலில் நாம் வெளியுடுவது கழிவையல்லை, மாறாக அந்த போராட்டத்திற்கு என் பங்கு எதுவென்ற கேள்வியும், அந்த கேள்விக்கான நடைமுறை கோரும் வாழ்க்கையும் நம்மிடமிருந்து துளிர் விடுகின்றன.
பீத்தோவான் போன்ற ஒரு தேர்ந்த இசைக் கலைஞனிடம் பல வண்ண சேர்மங்களையும், தூரிகைகளையும் கொடுத்தால் அவரால் ஒரு கேன்வாசில் பிரம்மாண்டமான ஓவியத்தை வரையமுடியும். ரஹ்மானால் அதைக் கொண்டு பளீர் பளீரென சில வண்ணங்களை மட்டும் காட்ட முடியும். பீத்தோவானின் ஒவியத்தை முதலில் பார்ப்பவர்களுக்கு அதன் வண்ணங்கள் மங்கி இருப்பது போலவும், வண்ணங்களின் வேறுபாடு தெரியாதது போலவும் தொன்றும். ரஹ்மானின் ஓவியமோ யாரை வேண்டுமானாலும் தனது ஃபுளோசரண்ட் பிரதிபலிப்பால் கவர்ந்திழுக்கும். மைக்கேல் ஜாக்சனது இசையும் இந்த பளிர் வண்ணங்கள்தான். அதன் வேகமான தாளமும், வித்தை காட்டும் நடன அசைவும் இரசிக்கப்படுவதற்கு பெரிய ரசனை அறிவோ, தயாரிப்போ தேவையில்லை. ஆனால் இந்த இசை கேட்கப்படுவதன் மூலம் உங்கள் உணர்ச்சி கலந்த ரசனை பண்படுவதற்கு பதில் ஆரவாரத்துடன் கிளர்ந்து அதே வேகத்தில் சட்டென தணிந்தும் போகிறது.
தனது முப்பது வருட இசைவாழ்க்கையில் சுமார் அறுபது பாடல்களை மட்டும்தான், சராசரியாக ஆறு மாதத்திற்கு ஒரு பாடல்தான் மைக்கேல் ஜாக்சன் வெளியிட்டிருக்கிறார் என்பது ஆச்சரியமானதல்ல. அவருக்கென்ற உருவான பாணி வெற்றிபெற்றதும் இசையைத் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அந்த பாணியைத்தான் மீள் வடிவில் கொண்டு வருவதை விரும்பின. இங்கே தமிழ் சினிமாவில் ஒரு கதையோ, பாடலோ வெற்றிபெற்றால் தயாரிப்பாளர்கள் அதைப் போலத்தான் வேண்டும் என்று கட்டளையிடுகிறார்களே அது போல. ஜாக்சன் ஒரு நட்சத்திரமானதும் அவரது பாடல்கள் மிகுந்த செலவு, பிரயத்துவத்துடன் சந்தைப்படுத்தப் படுவதால் அவர் விரும்பியிருந்தாலும் விதவிதமான பாடல்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டிருக்க முடியாது.
பாப், சோல், ராக், ஹார்ட் ராக், ராப், தற்போதைய ஹிப்ஹாப் வரை எல்லா வகை இசைகளிலும் ஜாக்சன் ஆரம்பித்த பாணிகள் இன்று வரை கோலோச்சுகின்றன என்றாலும் மைக்கேல் ஜாக்சன் தனது புகழின் உச்சியில் நின்ற போது அவருக்கு போட்டியாளர்கள் யாருமில்ல என்பதும் உண்மைதான். பின்னர் இந்த பாணியில் மேலும் தேர்ந்து பல கலைஞர்கள் உதிக்கத் துவங்கியதும் ஜாக்சனது நட்சத்திர சேவை இசைத் தொழில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவைப்படவில்லை. மேலும் இன்று இணையத்தின் மூலம் எந்த புதிய இசையையும் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம் என்ற தொழில் நுட்ப சாத்தியங்களெல்லாம் ஜாக்சனது காலத்தில் இல்லை. அவரது இசை ஆல்பங்கள் 75 கோடிக்கு மேல் விற்றதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
ஜாக்சனை கருப்பின மக்கள் கூடுதல் நேசத்துடன் கொண்டாடினாலும் ஜாக்சன் அதை விரும்பவில்லை. தனது தந்தையின் கெடுபிடிகளை நினைவு கூர்ந்த ஜாக்சன் நிறத்தினால் தான் பட்ட துன்பங்கள் பற்றி எப்போதும் பேசியதில்லை. உலக நட்சத்திரமாக மாற்றப்பட்ட அவருக்கு புதிய முகமும், பாணியும் தேவையென்பதை பன்னாட்டு நிறுவனங்களும் உணர்ந்து கொண்டன. அமெரிக்க அதிபருக்கே எப்படிப் பேசுவது, நடப்பது, கை குலுக்குவது, எந்த கோணத்தில் புகைப்படத்திற்கு முகத்தை திருப்புவது என்பதெல்லாம் ஆள் வைத்துப் பயிற்சியாக கொடுக்கப்படும் போது இசையில் உலக நாயகனுக்குரிய தோற்றத்தை பன்னாட்டு நிறுவனங்கள் தீர்மானிக்காமல் போய்விடுமா என்ன?
இங்கே ரகுமானின் வந்தே மாதரத்தை சோனி நிறுவனம் வெளியிடும் போது அம்பி போல இருந்த ரகுமானது முடியலங்காரம் மேற்கத்திய இசைக்கலைஞர்களது பாணியில் மாற்றப்பட்டதை இங்கே இணைத்துப் பார்க்க வேண்டும். இவையெல்லாம் அவர்களது இசை குறித்த ஒப்பந்தத்திலேயே தெளிவாக கூறப்பட்டு கையெழுத்து பெறப்படும். உலக அழகியாகும் பெண்ணின் உடலளவுகள் குறித்த வரம்பு, எடையின் அளவு, முதலியன விதியாக பின்பற்றப்படும் போது மைக்கேல் ஜாக்சனது அலங்காரம் அவர் மட்டுமே முடிவு செய்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது.
நீக்ரோ என இழிவாக அழைக்கப்படும் கருப்பின மக்களது நிறத்தையும், சுருட்டை முடியையும் ஜாக்சன் மாற்றிக் காட்டினார். வெளிர் நிறமும், நீண்ட முடியும் அவரது உலக நாயகன் இமேஜூக்கு தேவைப்பட்டது. அடுத்தடுத்து அவர் செய்து கொண்ட பிளாஸ்டிக் சர்ஜரிகள் அவருக்கு தேவையான வெள்ளை நிறத்தை வழங்கின. தனக்கு வெளிரும் தோல் நோய் இருப்பதாக ஜாக்சன் தரப்பு கூறினாலும் அவர் கருப்பினத்தை சேர்ந்தவர் போல இல்லை என்று காட்டுவதும் தேவையாக இருந்தது.
மேடை வெளிச்சத்திலும், வீடியோ கிராபிக்சிலும் உருவான ஜாக்சனது உடல் தோற்றம் அவரை துரத்த ஆரம்பித்தது. இந்த உடல் கற்பிதம் பின்னர் ஒரு உளவியல் நோயாக அவருக்கு மாறிவிட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதே நோய் மர்லின் மன்றோவுக்கும் இருந்ததாகவும் தெரிகிறது.
மைக்கேல் ஜாக்சனும் தனது உடலுக்கு ஏதோ அதீத திறனுள்ளதாக நினைத்துக் கொண்டார். இந்த உடல்போதை ஒவ்வொரு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலும் அதிகரித்தது. மேடையில் தன்னைப் பார்த்து கதறி அழும் ரசிகர்களின் உணர்ச்சி தரும் மிதப்பில் இந்த ரணகளமான சிகிச்சையை அவர் விரும்பியே சகித்துக் கொண்டார். வெள்ளை நிறத்தின் தயவில் ஜாக்சன் நிலைபெறுவது இசையில் கோலோச்சும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தேவையாக இருந்தது. கருப்பை வெளிரவைக்கும் அழகுசாதனப் பூச்சுப்பொருட்களின் விற்பனைக்கு ஜாக்சனும் ஒரு காரணம். கருப்பர்களின் மத்தியில் கூட அட்டைக் கருப்பை சற்றே மாநிறமாக்கும் ஆசையை மைக்கேலின் வெள்ளை அவதாரம் ஏற்படுத்தியது. கருப்பினத்தவரின் போராட்டத்திற்கு இப்படித்தான் ஜாக்சன் எதிர்மறைப் பங்காற்றினார்.
பகுதி இரண்டைப் படிக்க