டைட்டானிக் கப்பல் அது கட்டப்பட்ட காலத்தில் உலகின் மிகப்பெரிய கப்பல் என்று கருதப்பட்டது. 1912-ம் ஆண்டு பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்தது.
அதன் முதல் பயணத்தின் போதே, அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது.
பயணிகள், பணியாளர்கள் என அதில் இருந்த 2,200 பேரில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியானது.
1985-ம் ஆண்டு அதன் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு டைட்டானிக் மீதான ஆர்வம் உலகெங்கும் அதிகரித்தது. அதை விட 1997 ஆம் ஆண்டு உண்மை சம்பவத்தை தழுவி டைட்டானிக் படம் வெளியானது.
அதன் பின்னர் பலரும் சிதைந்த டைட்டானிக் கப்பலை பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர்.
அப்படி ஆழ்கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்க சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் சென்ற சுற்றுலா நீர்மூழ்கி திடீரென மாயமாகியிருக்கிறது.
100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழ்கடலில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் பார்ப்பதற்கென தனியாக சுற்றுலாவே நடத்தப்படுகிறது. அந்த வரிசையில் வரும் நிறுவனம் தான் ஓஷன்கேட் (Oceangate).
தற்போது, ஆழ்கடலில் காணாமல் போன சிறிய சுற்றுலா நீர்மூழ்கி ஓஷன்கேட் நிறுவனத்திற்குச் சொந்தமான டைட்டன் என்ற நீர்மூழ்கி என்று கூறப்படுகிறது. இந்த நீர்மூழ்கியில் 5 பேர் வரை பயணிக்க முடியும். ஒரு பைலட், 3 சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பயணம், நியூபவுண்ட்லாந்து கடற்கரையில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியிருக்கிறது.
பயணம் தொடங்கி ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் அந்த நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
நீர்மூழ்கியில் உள்ள 5 பேரையும் பத்திரமாக மீட்க அனைத்து வாய்ப்புகளை பயன்படுத்தி வருவதாக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன்கேட் நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன், ஆழ்கடல் ஆய்வு நிறுவனங்கள் பலவும் இந்த மீட்புப் பணியில் கைகோர்த்துள்ளன.
ஆழ்கடலில் காணாமல் போன நீர்மூழ்கியில் பிரிட்டனைச் சேர்ந்த 58 வயது கோடீஸ்வரரான ஹாமிஷ் ஹார்டிங் என்பவரும் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வார இறுதியில் ஹார்டிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில். டைட்டானிக் சிதைவுகளை நேரில் பார்க்கப் போவதாக குறிப்பிட்டிருந்திருக்கிறார்.
இது குறித்து அந்த சுற்றுலா ஏற்பாடு செய்த நிறுவனம் கூறுகையில்,
"நீர்மூழ்கிக்குள் இருந்த 5 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது மட்டுமே தங்களது முழு கவனமும் இருக்கிறது.
காணாமல் போன நீர்மூழ்கியுடன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் பல அரசு அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் செய்து வரும் உதவிகளுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
ஓஷன்கேட் நிறுவனம் தங்களிடம் 3 நீர்மூழ்கிகள் இருப்பதாக இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அவற்றில் டைட்டன் நீர்மூழ்கி மட்டுமே டைட்டானிக் மூழ்கியுள்ள ஆழத்திற்குச் செல்லக் கூடியது.
10,432 கிலோகிராம் எடை கொண்ட அந்த நீர்மூழ்கியால் 13,100 அடியாழம் வரை செல்ல முடியும், அதில் 5 பேருக்கு 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் என்று அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து நீர்மூழ்கியில் சென்றவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust