ஒரு கொலை நடந்துவிட்டால், அக்கொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர். ஒரு கொலை நடந்து, அக்கொலைக்குச் சம்பந்தப்பட்ட நபர் யாரெனத் தெரியாத போது அக்கதை ஒரு கிரைம் த்ரில்லராக உருவெடுக்கிறது.
அப்படித் தான் அத்னன் சையத் என்பவரின் வழக்கு, ஒரு கிரைம் த்ரில்லர் நாவலைப் போல ஒட்டுமொத்த உலகையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. கடந்த 2022 செப்டம்பர் 19ஆம் தேதி தான், தன்னுடைய 23 ஆண்டுக்கால சிறை வாசத்துக்குப் பிறகு அத்னன் சையத் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அவரை ஜிபிஎஸ் கண்காணிப்பின் கீழ் வீட்டுக் காவலில் வைத்திருக்க பால்டிமோர் நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் ஒரு பெண்ணைக் கொலை செய்துவிட்டார் என்கிற குற்றத்துக்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். அக்குற்றத்தைத் தான் செய்யவில்லை என அத்னன் சையத் தொடர்ந்து கூறி வருகிறார்.
அத்னன் சையத் செய்த குற்றத்தின் பின்னணி என்ன? நீதித் துறையில் இது தொடர்பாக ஏற்பட்ட குழப்பங்கள் என்ன? இவரது வழக்கு எப்படி பாட்காஸ்டில் பிரபலமானது? வாருங்கள் பார்ப்போம்.
அத்னன் சையத் என்பவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர். 1999ஆம் ஆண்டு அவருக்கு 17 வயதிருக்கும் போது, தன் வகுப்புத் தோழி ஹா மின் லீ (Hae Min Lee) என்கிற 18 வயது கொரிய - அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணோடு நண்பராக இருந்தார். திடீரென ஹா மின் லீ காணாமல் போனார்.
அவரது உடல், சடலமாக பால்டிமோரில் ஒரு பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அத்னன் சையத் தான் ஹா மின் லீயை கழுத்தை நெறித்துக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அத்னன் சையத் வழக்கு தொடர்பான முதல் விசாரணை 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. ஆனால் அதில் எந்த ஒரு சரியான தீர்வும் கிடைக்காமல் பிசுபிசுத்துப் போனது. 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் நடத்தப்பட்ட விசாரணையில், அத்னன் சையத் கடத்தல், கொள்ளை, கொலை போன்ற குற்றம் செய்ததாகக் கூறி வாழ்நாள் சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம்.
ஹா மின் லீ வேறொரு நபரோடு டேட்டிங் செய்த விஷயம் அத்னன் சையதுக்குத் தெரிய வந்த பின், தன்னுடைய மானம் மரியாதை கெளரவம் பாதிக்கப்பட்டதாகக் கருதி (பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் இது பொருந்தக்கூடியது தான் என நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது) அவரைக் கொலை செய்ததாக அரசு தரப்பு வாதிட்டது.
ஹா மின் லீயின் உடலை பூங்காவில் புதைக்க, அத்னன் சையதின் நண்பர் ஜே வில்ட்ஸ் உதவியதாக நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டது, அத்னனை சிறையில் அடைக்க ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
அதோடு சையதின் மொபைல் ஃபோனும் அப்போது பால்டிமோர் பூங்காவுக்கு அருகிலேயே இருந்ததாகவும் அப்போது நிரூபிக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்த ஆதாரத்தில் தவறும் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது நினைவுகூரத்தகக்து.
நீதிமன்றம் அத்னன் சையத் தான் குற்றவாளி என்று தீர்ப்பளித்து, அவரைச் சிறையில் தள்ளிய பிறகும், தான் இந்த குற்றத்தைச் செய்யவில்லை என தொடர்ந்து கூறி வருகிறார் அத்னன் சையத்.
அத்னன் சையத்துக்கு ஆதரவாக, அவரது நெருங்கிய குடும்ப நண்பர் மற்றும் வழக்கறிஞர் ராபியா செளத்ரி இந்த வழக்கைக் கையில் எடுத்தார். சையத்தின் வழக்கு குறித்து சாரா கொனிக் (Sarah Koneig) என்கிற பத்திரிகையாளரிடம் விவாதித்ததும் ராபியாதான்.
இப்படித்தான் சாரா கொனிக் கைக்கு அத்னன் சையத்தின் வழக்கு வந்து சேர்கிறது. ஹா மின் லீ என்கிற பெண் குறித்தும், அவரது மரணம் குறித்தும் ராபியா வழி தெரிந்து கொண்ட சாரா, மெல்ல இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினார்.
ஹா மின் லீ என்கிற பெண் கொல்லப்பட்ட அன்று இரவு என்ன நடந்தது என்பதை வரிசைக்கிரமமாக மறுகட்டமைத்து, கடந்த 2014ஆம் ஆண்டு 'சீரியல்' என்கிற பெயரில் 12 எபிசோட்களைக் கொண்ட முதல் சீசன் பாட்காஸ்டை வெளியிட்டார்.
இந்த பாட்காஸ்டுக்காக ஹா மின் லீ கொலை வழக்கைக் குறித்து விவரங்களைத் திரட்டிய போது சில புதிய ஆதாரங்கள் கிடைத்ததாகவும், அதன் அடிப்படையில் 2015ஆம் ஆண்டு அத்னன் சையத்தின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட அனுமதியளிக்கப்பட்டதாகவும் பிபிசி ஊடகத்திலேயே செய்தி வெளியானது. ஆனால் அத்னன் சையத் பிணையில் விடுவிக்கப்பட அனுமதி மறுக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
'சீரியல்' பாட்காஸ்டின் சீசன் 1 சக்கைபோடு போட்டது. இந்த பாட்காஸ்ட் வெளியானது முதல் பல வாரங்களுக்கு 'சீரியல்' முதலிடத்தில் இருந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐடியூனில் இந்த பாட்காஸ்ட் சுமார் 300 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது. 2015ஆம் ஆண்டு பீபாடி (Peabody) விருதையும் இந்த பாட்காஸ்ட் வென்றது. கடைசியில் 2020ஆம் ஆண்டு சீரியல் பாட்காஸ்டை தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வாங்கிக் கொண்டது.
ஒரு கிரைம் த்ரில்லரின் சுவாரசியமான பகுதி எது...? ஒரு இளம் பெண், தன்னுடைய ஆண் நண்பரால் கொல்லப்பட்டு இருக்கலாம் என அரசு தரப்பு வாதிட்டு வழக்கை முடித்து வைக்கிறது. சையதுக்கு ஆதரவான ஆதாரங்கள் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை, எடுத்துரைக்கப்படவில்லை, சையத் தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர் சரியாக வாதாடவில்லை என பல ட்விஸ்டுகள் இருந்தாலும், உண்மையில் ஹா மின் லீ என்கிற பெண்ணைக் கொன்றது யார்..? என்கிற அடிப்படைக் கேள்வி நோக்கி நின்றது பலரின் கவனத்தை ஈர்த்தது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த இணைய வாசிகளுக்கு இப்படித் தான் இந்த வழக்கின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
அத்னன் சையதை சிறையில் இருந்து விடுவிக்கவும், மீண்டும் அவரது வழக்கை விசாரிக்கவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. கடந்த 2015ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றம் மீண்டும் அத்னன் சையதின் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டதாக அசோசியேடட் பிரஸ் செய்தி முகமையில் குறிப்பிடப்பட்டது.
பல கட்ட சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து மேரிலாந்து உயர் நீதிமன்றம் மறுவிசாரணையை மறுத்து 2019ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதே ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றமும் மறுவிசாரணைக்கு மறுப்பு தெரிவித்தது.
சிறார் குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள், 20 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்த பிறகு, தங்கள் தண்டணையை மாற்றக் கோரும் சட்டத்தை மேரிலாந்து மாகாணம் இயற்றிய பிறகு, சையதின் வழக்குரைஞர் எரிகா ஜே சுடெர் (Erica J Suter) மேரிலாந்து மாகாண அட்டர்னி மெரிலின் ஜே மாஸ்பியை கடந்த 2021ஆம் ஆண்டு அத்னன் சையத் வழக்கு தொடர்பாக அணுகினார்.
இப்படித் தான் தற்போது சில புதிய ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு, 2022 செப்டம்பர் 19ஆம் தேதி ஜிபிஎஸ் கண்காணிப்பின் கீழ் அத்னன் சையத் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் திசையையே மாற்றக் கூடிய சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கத் தவறியது சட்டத்தை மீறிய செயல் என இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஃபின் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்னன் சையதுக்கு எதிராக மீண்டும் ஒரு விசாரனை வேண்டுமா அல்லது அரசு தரப்பு சையதுக்கு எதிரான வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறதா என்பதை அடுத்த 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.
தமிழ் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுக்க தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. அறம் வெல்லும், அநீதி வீழும்... என்கிற நம்பிக்கையில் பலர் காத்திருப்பது போல, அத்னன் சையதும் காத்திருக்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust