இந்தியாவில் மூன்றாம் அலை தொடங்கி விட்டது. இரண்டாம் அலை தாக்கத்திலிருந்து முழுவதும் மீண்டு வருவதற்கு முன்னரே இப்படியொரு பேரிடி. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் எல்லாமே இதே நிலையில் தான் இருக்கின்றன.
ஆனால், கொரோனா வைரஸ் உருவாகிய நாடாகக் கருதப்படும் சீனாவில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது.
உலகம் முழுவதுமே கடந்த மாதத்தில் இருந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
ஒமிக்ரான் பரவலுக்கு பிறகான கடந்த 28 நாட்களில் மட்டும் சீனாவில் கிட்டத்தட்ட 4000 பேருக்கு தான் கொரோனா பாதிப்பு உறுதியாகியிருக்கிறது என்கிறது ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகம்.
அது தரும் தகவல்களின் படி, சீனாவில் 4034 பேர் கடந்த 28 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கூட மரணிக்கவில்லை.
இதே காலக்கட்டத்தில் இந்தியாவில் 551,743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,699 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவுடன் ஒப்பிடுகையில் 100 மடங்கு குறைவு.
குறிப்பாக கொரோன தொற்று பரவ தொடங்கிய ஹூபே மாகாணத்தில் ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.
உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்டிருக்கிற சீனா அதன் மக்கள் தொகையில் 86.38% பேருக்கு முழுவதுமாக தடுப்பூசி செலுத்திவிட்டது. இதுவரை 120 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கின்றனர்.
சீனா மட்டுமின்றி பல ஆசிய நாடுகளிலும் ஆப்ரிக்கா கண்டத்திலும் கொரோனா தாக்கம் குறைவாகத் தான் இருக்கிறது. ஆனால் மாறாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடந்த மாதத்தில் மட்டும் 10 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 88லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கிட்ட தட்ட எல்லா நாடுகளிலும் பாதிப்புகளுக்கு ஏற்றது போல் லாக்டவுனில் தான் இருக்கின்றன.
சரி கொரோனாவால் சில நாடுகள் பாதிக்கப்படவில்லை அல்லது கடந்த 28 நாட்களில் கொரோனாவால் ஒருவர்வர் கூட பாதிக்கப்படவில்லை. அந்த நாடுகள் குறித்து தெரியுமா?
தொங்கா, தஜிகிஸ்தான், சமோவா, பலாவு, மார்ஷல் தீவுகள், ஆகிய சிறிய நாடுகளில் கடந்த 28 நாட்களில் அல்லது அதற்கும் மேலாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்கிறது ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள்.