ரஷ்யா மற்றும் வட கொரியா அதிபர்கள் சந்தித்துக்கொண்ட நிகழ்வு உலக அளவில் பேசப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது. இரண்டு நாடுகளும் அமெரிக்காவுக்கு பிரதான எதிரிகளாக இருந்து வருகின்றன.
ஐக்கிய நாடுகளின் பல தடைகளை எதிர்கொண்டுவரும் வட கொரியாவுக்கு உணவு, எரிபொருள் தட்டுப்பாடுகளை தவிர்க்க ரஷ்யாவின் உதவி தேவை.
அணு ஆயுதங்களிலும், தொழில்நுட்பத்திலும் தன்னை உயர்த்திக்கொள்ளவும் ரஷ்யாவை நாடியிருக்கிறது வட கொரியா. உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவுக்கும் பக்கபலமாக வட கொரியா தேவைப்படுகிறது.
"சமீபத்தில் தங்களிடம் உள்ள அனைத்தும் தீர்ந்துபோன பிறகு உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு வரும்" என சில நாட்களுக்கு முன்பு கராராக குறிப்பிட்ட ரஷ்ய அதிபர் புதின் தற்போது வெடி மருந்து தேவைகளை பூர்த்தி செய்ய வட கொரியா எனும் புதிய வழியைக் கண்டடைந்துள்ளார்.
அடிக்கடி ஆயுதப்பயிற்சிகள் மேற்கொண்டு உலகை அதிர்ச்சியிலேயே வைத்திருந்தாலும், 1953க்கு பிறகு எந்த போரிலும் ஈடுபடாததால் வெடிமருந்துகளுக்கு வடகொரியாவில் பஞ்சம் கிடையாது.
தென்கொரியாவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் அமெரிக்கா, வடகொரியாவுக்கு அச்சுறுத்தலாக இருப்பதனால் எதிரிக்கு எதிரி நண்பன் என ரஷ்யாவுடன் உறவை வலுப்படுத்துகிறது வட கொரியா.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் அல்லாமல் கிழக்கு நகரமான வஸ்டாச்னி விண்வெளி மையத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. குண்டுகள் துளைக்காத பாதுகாப்பான பச்சை ரயிலில் வந்திறங்கிய கொரிய அதிபரை வரவேற்று விண்வெளி மையத்தை சுற்றிக்காண்பித்தார் புதின்.
இந்த சந்திப்பில் ஆயுதப்பரிமாற்றம் குறித்து பேசப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால் இரண்டு நாடுகளும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
செய்தியாளர்கள், "வடகொரியா செயற்கைகோள் தயாரிக்க ரஷ்யா உதவுமா எனக் கேட்டதற்கு, "அதற்காகத்தான் வஸ்டாச்னி வந்திருக்கிறோம் என புதின் பதிலளித்தார். மேலும் அவர், "கிம் ஜாங் ராக்கெட் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்" என்றும் தெரிவித்தார்.
ஆயுதப்பரிமாற்றம் குறித்து பேசுவீர்களா என்ற கேள்விக்கு, "நாங்கள் எல்லாவற்றையும் பேசுவோம்" என பதிலளித்தார் புதின். இந்த சந்திப்பின் மூலம் உளவு செயற்கைக்கோள் கிடைத்தால் வடகொரியா பெரியஅளவில் பலனடையும்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு முழு ஆதரவு கொடுத்துள்ளது வடகொரியா. இதுகுறித்து கிம் ஜாங் உன், "ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் கூட்டாக இருப்போம்" எனக் கூறியிருக்கிறார்.
ரஷ்யா- உக்ரைன் போரில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நடுநிலை வகித்தாலும், ரஷ்யாவுக்கு ஆதாரவாக பெலாரஸை தவிர எந்த நாடும் இருக்கவில்லை.
வடகொரிய அதிபரோ இந்த போரை, "ஆதிக்க சக்திகளுக்கு எதிரான புனிதப் போர்" எனக் கூறியிருக்கிறார். இந்த சந்திப்பின்போது கிம் ஜாங் உன்னின் சகோதரி உடன் இருந்திருக்கிறார்.
இரு நாட்டு இராணுவ தளபதிகளும் சந்திப்பில் பங்கெடுத்துள்ளனர். ஆயுதப்பரிமாற்றம் குறித்த சலசலப்புகளுக்கு இதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது.
உக்ரைனுடன் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக போரில் ஈடுபட்டுவரும் ரஷ்யா, தங்களை சார்ந்திருக்கும் சொற்ப நாடுகளுடன் இணக்கமாக இருக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அடுத்த வாரம் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கவுள்ளது குரிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust