இந்தியாவின் புராதான மையங்களை ஆதிக்கம் செலுத்தும் மன்னர்கள், புரோகிதர்கள், உயர்சாதியினர் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட பெண்களை பாலியல் தொழிலுக்கு பலியாக்கினர். சமீபத்தில் வந்த சியாம் சிங்க ராய் என்ற தெலுங்குப் படம் - தமிழலிலும் டப் செய்யப்பட்டிருக்கிறது - தேவதாசி முறையின் கொடூரங்களை விவரிக்கிறது.
பண்டைய வரலாற்றில் மற்ற நாடுகளில் கைவிடப்பட்ட , ஆதரவற்ற பெண்கள் பாலியல் தொழிலுக்கு அடிமைகளாக விற்கப்பட்டனர். அவர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் இல்லை, கௌரவமான வாழ்வும் இல்லை. இன்றைய நவீன உலகிலும் இதுதான் நிலைமை. கூடுதலாக தற்போது கன்னிமைத்தன்மை இழக்காத சிறுமிகளை, குழந்தைகள குறிவைத்து மேற்குலகின் காமவெறியர்கள் கிழக்கு நாடுகளை நோக்கி படையெடுக்கிறார்கள். இதை பாலியல் அல்லது செக்ஸ் சுற்றுலா என்று அழைத்துக் கொள்கிறார்கள்.
சுற்றுலா என்பது இயற்கையின் பிரமாண்டத்தையும், அதன் வேறு பட்ட பன்மைத்தன்மை கொண்ட வகை அழகுகளையும் பார்த்து ஒன்றுவதற்கும், உலகெங்கும் உள்ள பல்வேறு தேசிய இன மக்களின் பண்பாடு, வாழ்க்கை, வரலாறு குறித்து தெரிந்து கொள்வதற்குமான ஒரு உற்சாக பயணம். அதை பாலுணர்வுச் சுரண்டலாக மாற்றி அதை சுற்றுலா என்று அழைப்பது ஒரு காலக்கொடுமை. எனினும் அப்படி ஒரு கொடுமை இவ்வுலகில் நிலவுவதால் நாமும் அந்த வார்த்தையையே பயன்படுத்தி அந்த சுற்றுலா ஏற்படுத்தியிருக்கம் பாதிப்புகளை பார்ப்போம்.
இணையத்தை கண்டுபிடித்த அமெரிக்காதான் உலக ரீதியிலான பாலியல் சுற்றுலாவிற்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கும் பின்பு சோவியத் யூனியனோடான கெடுபிடிப் போரின் காரணமாக உலகெங்கும் அமெரிக்க இராணுவத் தளங்கள் நிறுவப்பட்டன. அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு தேவைப்படும் பாலியல் தேவைகளுக்காக உள்நாட்டு ஏழை பெண்கள் பாலியல் தொழிலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டனர். இதில் வியட்நாம் போர் ஒரு முக்கிய திருப்புமுனை.
வியட்நாம் போருக்கு பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வறுமை காரணமாக பாலியல் சுற்றுலா வளர்ந்தது. மசாஜ் பார்லர்கள், நேரடியான பாலியல் தொழில் போன்ற வசதிகளுக்காக மேற்குலகின் சுற்றுலா பயணிகள் குறிப்பாக ஆண்கள் இந்நாடுகளுக்கு படையெடுக்கின்றனர். சம்பந்தப்பட்ட அரசுகளும் வருமானம் காரணமாக இவற்றைக் கண்டு கொள்வதில்லை. பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக இருந்தாலும் சரி, சட்டவிரோதமாக இருந்தாலும் சரி இதுதான் நிலைமை. ஏழை நாடுகளின் பெண்கள் இப்படி வறுமை காரணமாகபாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதை எதிர்த்து பல்வேறு பெண்ணிய அமைப்புகளும், தன்னார்வல நிறுவனங்களும், ஐ.நா. அமைப்புகளும் போராடி வருகின்றன. ஆனாலும் இந்த ‘தொழில்’ வளர்ந்தவாறே உள்ளது.
வியட்நாம் போரின் போது வந்த அமெரிக்க வீரர்களுக்காக தாய்லாந்து நாட்டில் பாலியல் தொழில் வளர்ந்தது. அதே போன்ற அமெரிக்க தளங்கள் இருந்த தென்கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் பாலியல் தொழில் மையங்கள் வீரர்களுக்காக உருவாக்கப்பட்டன. உலகமயம், இணையம் வந்த பிறகு யார் வேண்டுமானாலும் செக்ஸ் சுற்றுலா செல்லலாம். அந்த வகையில் ஆப்ரிக்காவில்இருக்கும் கென்யா போன்ற நாடுகள் புதிய மையங்களாக உருவாகியிருக்கின்றன.
இணைய வளர்ச்சி வந்த பிறகு பாலியல் சுற்றுலாக்கள் திட்டமிட்ட வளர்ச்சியில் உள்ளது. எந்தெந்த நாடுகளில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எங்கே மலிவு, எங்கே குழந்தைகள் கிடைப்பார்கள் (இது சட்டவிரோதம் என்றாலும் இணையம் சாத்தியமாக்குகிறது) தங்குமிடம் வசதிகள், மணிநேர மற்றும் நாள் வாடகை போன்றவற்றை இணையச் ‘செய்திகள்’ வழங்குகின்றன. அந்த வகையில் இன்று பாலியல் சுற்றுலா செல்வதும், அணுகுவதும், ஏற்பாடு செய்வதும் எளிமையாக்கப்பட்டிருக்கின்றன. தேவையெல்லாம் இந்த செலவுகளுக்கு தேவையான பணம் மட்டுமே. மற்றவற்றை இணைய புரோக்கர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
பாலியல் தொழிலாளிகளைப் பற்றி எல்லா அரசுகளுமே கண்டுகொள்ளாமல் இருந்த நிலைமை எய்ட்ஸ் நோய் வந்ததும் மாறிவிட்டது. பாலுறவின் மூலம் ஹெச்ஐவி பரவுவது தெரிந்ததும் அதை கட்டுப்படுத்தும் தேவை வந்தது. அதுவும் கூட பணக்கார வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் நோக்கின் பொருட்டே. எனவே விலைமாதுக்கள் பாதுகாப்பான உடலுறவு கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டார்கள் அதற்காக பயிற்சி கொடுக்கப்பட்டார்கள். ஆனாலும் விலைமாதர்களிடையேதான் எய்ட்ஸ் நோயின் பரவலும் விகிதமும் அதிகம். காரணம் வாடிக்கையாளர்கள் ஆணுறை போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் உறவு வைத்துக் கொள்ள வற்புறுத்துவதுதான். வறுமை காரணமாக தொழில் செய்யும் பெண்கள் அந்த நேரத்தில் இதை கண்டிசனாகப் போட்டால் அவர்களால் பிழைக்க முடியாது.
கிழக்கத்திய நாடுகளின் நிலைமை இதுவென்றால் மேற்குலகில் நிலைமை வேறு. ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க சமூகங்களில் உள்ள பெரும்பாலான பாலியல் தொழிலாளிகள் பாலியல் வேலையை ஒரு நல்ல வருமானத்தைப் பெறுவதற்காக ஒரு வழிமுறையாகக் கருதுகின்றனர். இவர்களுக்கென்று நேர்த்தியான ஏஜென்சி நெட்ஒர்க், கார் ஓட்டுநர்கள், தரகர்கள் என்று ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போன்று வேலை செய்கிறார்கள். இத்தகைய நாடுகளில் உள்ள பாலியல் தொழிலாளிகள் தங்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதுவதில்லை. இதை ஒரு விருப்பத் தொழில் என்றே வாதிடுகின்றனர். அதே நேரம் சிவில் சமூகம் பாலியல் தொழிலாளிகளை மட்டமாகவே பார்க்கிறது.
இத்துறையில் வரும் பெண்கள் வறுமை, பெற்றோரால் கைவிடப்படல், ஆடம்பர வாழ்க்கை மீதான நாட்டம், சிறு குற்றப் பின்னணி, போதைப் பொருளுக்கு அடிமையாதல் போன்ற பல காரணங்களால் பாலியல் தொழிலைச் செய்கின்றனர். நிச்சயம் ஒரு அமெரிக்க பணக்கார குடும்பத்தில் இருந்து ஒரு பெண் பாலியல் தொழிலுக்கு வரப்போவதில்லை. மேலும் அமெரிக்காவின் காலனிய நாடுகளில் இருந்தும், தென் அமெரிக்க நாடுகளில் இருந்தும் பெண்கள் பல்வேறு முறைகளில் பாலியல் தொழிலுக்காக கடத்தி வரப்படுகின்றனர். இவர்கள் அடிமைகள் போன்று நடத்தப்படுகின்றனர். குடியுரிமை இல்லாததால் இவர்களை செக்ஸ் மாஃபியாக்கள் கட்டுப்படுத்துகின்றனர்.
ஐரோப்பாவிலும் செல்வச் செழிப்புள்ள மரபார்ந்த சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் பாலியல் தொழிலுக்கு வருவதில்லை. அமெரிக்கா போன்று கைவிடப்பட்ட பெண்கள்தான் அதிகம். ஒரு சிறுபான்மை தரப்பு நடுத்தர வர்க்கத்தில் இருந்து ஆடம்பர வாழ்க்கை, நுகர்வு கலாச்சார மோகம் போன்ற காரணங்களால் வருகின்றனர். முக்கியமாக சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏராளமான பெண்கள் வறுமை காரணமாக மேற்கு ஐரோப்பிய பாலியல் தொழில் சந்தையில் தள்ளப்பட்டிருக்கின்றனர். அதே போன்று மேற்கு ஐரோப்பிய வல்லரசு நாடுகள் காலனிய ஆட்சி செய்த ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் பெண்கள் ஏமாற்றி கடத்தி வரப்படுகின்றனர். இவர்களின் வாழ்க்கை கடும் மோசமாக இருக்கிறது. பாஸ்போர்ட் இல்லாமல், முறையான இருப்பிடவசதி இல்லாமல் ஒரு நாளைக்கு இத்தனை வாடிக்கையாளர்களை சந்திக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் வதைபடுகிறார்கள்.
மேலும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தி வருவதற்கு பெரும் பணத்தை கடனாக புரட்டிக் கொடுத்து விட்டே வருகின்றனர். ஆகவே அவர்கள் சம்பாதிக்கும் பணத்தின் பெரும் பகுதி இந்த கடத்தல் மாஃபியாவிற்கு போய்விடுகிறது. இளைமையும் இள வயதும் முடிந்த பிறகு இவர்கள் பாலியல் தொழில் சந்தையில் இருந்து தூக்கி எறியப்படுகின்றனர்.
எனவே பாலியல் தொழிலின் பல பகுதிகள் பெண்களை பலிகடா ஆக்குவதற்கும், மிக மோசமான சுரண்டலுக்குமான களமாக இருக்கிறது. லூயிஸ் பிரவுன் 2000-ம் ஆண்டில் எழுதிய Sex Slaves: The Trafficking of Women in Asia என்ற நூலில் பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் வலுக்கட்டாயமாக பாலியல் தொழில் நோக்கங்களுக்காக வர்த்தகம் செய்யப்படுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறார்.
பாலியல் சுற்றுலா என்பது ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், உணவகங்கள், வில்லாக்கள், மது பார்கள், உடை உரிப்பு நடனக்கூடங்கள், மசாஜ் பார்லர்கள் என்று பல்வேறு துணை பொருளாதார நடவடிக்கைகளோடு தொடர்புடையவை. எனவே இவற்றை மட்டும் நம்பியோ அல்லது பெரும்பான்மையாகவோ பயன்படுத்தி பொருளாதாரத்தை வளர்க்கும் நாடுகளும் உள்ளன. வெளிநாட்டு பணக்கார வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இந்நாடுகள் தமது அன்னியச் செலவாணியை பெருக்கிக் கொள்கின்றன.
கரீபியன் தீவுகளில் இத்தகைய நிலைமை நிலவுகிறது. உலக பணக்காரர்கள் தமது சட்டவிரோத பணத்தை இத்தகைய வரியில்லா சொர்க்கத் தீவுகளில் வைப்பது போலவே தமது பாலியில் அரிப்பையும் ஆடம்பரமாக இத்தீவுகளில் தீர்த்துக் கொள்கிறார்கள். ஆகவே இந்நாடுகள் இத்தொழிலை அனைத்து வகையிலும் ஆதரிக்கின்றன.
பாலியல் சுற்றுலாவில் அதி உயர் பணக்காரர்களுக்கான பாலியல் தொழில் தனித்துவமானது. பொதுவில் பாலியல் தொழிலுக்கு செல்பவர் நாள் செல்லச் செல்ல புதிய புதிய அனுபவங்களை, பெண்களை, ருசிகளை, சிறு பெண்கள், வயதான பெண்கள், குண்டு பெண்கள், ஒல்லியான பெண்கள் என்று தேடுவார். அதி பணக்காரர்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு நாட்டின் நட்சத்திர விடுதியிலோ இல்லை காடுகளில் வசதியுடன் இருக்கும் ரிசார்ட்டுகளிலோ சில நாட்கள் தங்குவார்கள். அவர்களுக்காக உலகெங்கும் உள்ள மேட்டுக்குடி பாலியல் தொழில் பெண்கள் - அவர்களின் சிலர் மாடல்கள் அல்லது பொழுதுபோக்கு தொழிலில் உள்ளவர்கள், அதிக ஊதியம் வாங்குபவர்கள் - தத்தமது நாடுகளில் இருந்து விமானங்களில் வந்திறங்கி சில நாட்கள் ‘சேவை’ செய்து விட்டு போவார்கள். இந்த உலகம் தனி.
மொத்தத்தில் உலகம் முழுவதும் நடைபெறும் பாலியல் சுற்றுலாவின் வர்த்தகம் பல பில்லியன் டாலரைத் தாண்டும். இவற்றின் துணைத் தொழில்களைடோடு, போர்னா போன்றவற்றைச் சேர்த்தால் வருமானம் இன்னும் அதிகரிக்கும்.
தற்போது ஓரினச்சேர்க்கை சுற்றுலா, ஆண்பாலியல் தொழிலாளிகள்என்ற பிரிவுகளெல்லாம் உருவாகியிருக்கின்றன. கீழை நாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை பாலியல் தொழிலுக்கு பிரபலமாக இருக்கிறது.
இந்தியாவின் மும்பையிலோ, கொல்கத்தாவிலோ இருக்கும் சிவப்பு விளக்கு பகுதிகளில் சாதாரண மக்களே வாடிக்கையாளர்களாக வருகிறார்கள். மும்பை மையத்திற்கு கணிசமாக நேபாள பெண்கள் வந்து போகிறார்கள். சில ஆண்டுகள் தொழில் செய்து விட்டு சில ஆயிரம் ரூபாய்களுடன் அவர்கள் தாயகம் திரும்புகிறார்கள். இவர்களின் வாழ்விடம், உடல்நலக்கேடு, அனைத்தும் மிக மோசமானவை.
இப்போது சொல்லுங்கள் செக்ஸ் சுற்றுலா என்றால் உங்கள் மனதில் கிளுகிளுப்பு தோன்றுகிறதா இல்லை ஒரு அநாகரிக சமூகத்தில் வாழ்கிறோம் என்ற அவலம் தோன்றுகிறதா?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust